ஆதிகாலத்தில் மருத்துவராக இருந்த சமூகம்!

நூல் அறிமுகம்: சலூன்
 
மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு மாதத்திற்கு ஒரு முறை என நாம் கட்டாயம் சென்று வரக்கூடிய இடம் சலூன். பெண்களுக்கு என்று அழகு நிலையம் spa மற்றும் இருபாலினருக்குமான சலூனும் உண்டு.
 
கிராமத்தைப் பொறுத்தவரை மரத்தடியில் அமர்ந்து முடி வெட்டுவார்கள். கொஞ்சம் பெரிய ஊர்களில் கடை இருக்கும்.
 
நாம் எல்லோருக்கும் சிறுவயதில் சுழல் நாற்காலியில் பலகையைப் போட்டு அதில் அமர வைத்து முடி வெட்டியது கட்டாயம் நினைவில் இருக்கும்.
 
அதுபோல முடித்திருத்துபவர்கள் நமது தந்தைக்கோ, நமக்கோ நண்பர்களாக நிச்சயமாக இருப்பார்கள். ஒருவரிடம் முடிவெட்டிப் பிடித்துவிட்டால் அடுத்தவரிடம் முடிவெட்ட மனம் வராது.
 
இவரிடம் வெட்டும்போது ஏற்பட்ட திருப்தி அடுத்தவரிடம் வெட்டும்போது ஏற்படாது என்பதுதான் அதற்குக் காரணம்.
 
சிறுவயது முதல் தற்போது வரை நாம் முடித்திருத்திக் கொண்ட நண்பர்களோடு ஏதேனும் மறக்க முடியாத நிகழ்வுகள் நடந்திருக்கும். அப்படிப்பட்ட நினைவுகளின் தொகுப்பாகத்தான் இந்த நூல் இருக்கிறது.
 
வெளிநாட்டிற்குச் செல்லும்போது அங்கே முடித்திருத்தம் செய்து கொள்வதற்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் தன்னுடைய அனுபவத்தில் இருந்து எழுதியுள்ளார்.
 
தனக்கு மேல் அதிகாரியாக இருந்த கேத்தரின் திருநம்பியாக மாறியது குறித்தும் பாலியல் மாறுபாடு உடலியல் மாற்றத்தால் நிகழ்வது அதன் போக்கில் செல்வதில் தவறில்லை என்பது போன்ற உரையாடல்களும் இடம்பெறுகின்றன.
 
ஆதிகாலத்தில் மருத்துவராக இருந்த சமுதாயம் தற்போது நாவிதர்களாக மாற்றப்பட்டதையும் அம்பட்டையன் என்ற இழிச்சொல்லால் அழைக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கிறார் ஆசிரியர்.
 
எழுத்துநடை, புத்தக வடிவமைப்பு எல்லாம் மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. 
 
– பூபாளகண்ணன்
 
******
 
நூல்: சலூன்
ஆசிரியர்: க.வீரபாண்டியன்
யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் : 152 
விலை: ரூ.175/-
தொடர்புக்கு : 90424 61472
Comments (0)
Add Comment