நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்களிடையே வைரமுத்து என்பது ஒரு கனவுப்பெயராக இருந்தது.
திரைப்டப்பாடல் வரிகளில் மயங்கி, அவரது கவிதை நூல்களைத் தேடிப் படித்த காலம். என் வகுப்புத் தோழன் வெங்கட் விடுதி அறையில் இருந்தது ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ நூல். வயல்வரப்புகளில் நடந்தபடி படித்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன.
என் பழைய பனை ஓலைகள், இதுவரை நான்… என வரிசையாக அவரது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு.
‘பாக்யா’ இதழில் வெளிவந்த ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ தொடரை ஒவ்வொரு வாரமும் தொகுத்து நூலாக்கி வைத்திருந்தேன்.
அப்போது நான் ‘காவ்யா’ என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை எழுதிவந்தேன். அதை எழுத்தாளர் கிரா, மணல்வீடு என்றார். அதுவொரு பேரார்வம்.
என் கையெழுத்துப் பத்திரிகையை சென்னைக்கு எடுத்துச் சென்று வாழ்த்து வாங்கித் தந்தார் நண்பர் தஞ்சை செழியன்.
“இது எழுதிப் பழகுவோர் ஏடன்று. எழுதிப் பழுத்தோர் ஏடு. இந்த முத்துக்கோத்தாற் போன்ற எழுத்தழகை அச்சுக்கோத்தால் அடையமுடியாது” என்று வாழ்த்துகளை கைப்பட எழுதி கையெழுத்திட்டிருந்தார்.
எனக்குள் உற்சாக நதியை கரைபுரள வைத்த வார்த்தைகள்.
சென்னை வாழ்க்கை. எத்தனையோ நூல் வெளியீடுகள், விழாக்கள். காலம் உருள்கிறது.
இந்த நினைவுகளின் வழியாக ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ யைப் பார்க்கிறேன்.
பரிமேலழகர், வஉசி, திருவிக, தெ.பொ.மீ, பாவாணர், நாமக்கல் கவிஞர், டாக்டர் முவ, குன்றக்குடி அடிகளார், நாவலர், கலைஞர் வரிசையில் இன்று வைரமுத்து.
தனித்துவமான தன் கவித்துவத் தமிழை மறந்து எளிய தமிழில் உரை எழுதியிருக்கிறார். வாழ்த்துகள்.
ஆபயன் குன்றும்…/ மயிர்நீப்பின் உயிர் வாழாக்…/ வையத்துள் வாழ்வாங்கு…/ முறை செய்து காப்பாற்றும்…/ அருவினை என்ப உளவோ… உள்ளிட்ட சில குறள்களுக்கு புதிய பொருள் தேடியிருக்கிறார் வைரமுத்து.
“திருக்குறளுக்கு உள்ள பெருங்குணங்களுள் ஒன்றாக நான் கருதுவது அதன் நெகிழ்ச்சித் தன்மை” என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
வீட்டில் அப்பாவிடம் பரிமேலழகர், முவ உரை நூல்கள் இருந்தன. பள்ளிப் பிராயத்தில் ஆர்வத்துடன் எடுத்துப் படித்திருக்கிறேன்.
தமிழ்ப் பாடத்துக்கு மு.வ உரை உதவியாக இருந்தது. தினமும் பள்ளி பிரேயரில் ஒரு குறளும் விளக்கமும் சொல்வோம். அன்றைய முக்கிய செய்திகளை வாசிக்கும் வழக்கமும் இருந்தது.
அரசுப் பேருந்துகளில் இரும்புத் தகடுகளில் அழகிய வள்ளுவர் ஓவியமும், ஒரு குறளும் விளக்கமும் இடம்பெற்றிருக்கும். இன்று ஸ்டிக்கராக அது மாறியிருக்கிறது.
மக்கள் பயணிக்கும் திசையெங்கும் குறள் தென்படவேண்டும் என்ற நினைத்த அறிஞர் அண்ணாவின் அருஞ்செயல். அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்.
முதல் குறளுக்கான உரையில் ஆதிபகவன் என்ற சொல்லுக்கு மூலஆற்றல் என்ற புதிய பொருள் தந்திருக்கிறார்.
வழிவழியாக வந்த பொருளை வளமான தமிழின் துணையுடன் மாற்றியிருப்பது புதுமை.
சில குறள்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே…/ குடம்பை தனித்துஒழிய… உள்ளிட்ட சில குறள்களுக்கு மிக விரிவான உரையைத் தந்திருக்கிறார்.
மனிதர்களின் மனக்காயங்களை ஆற்றும் அருமருந்தை குறள் தனக்குள் வைத்திருக்கிறது.
மண்ணில் புதையுண்டுபோன ஒரு பழம்பெரும் நகரை கண்டெடுக்கும்போது அடையும் வியப்பை குறள் நமக்கு அள்ளித்தருகிறது.
ஊரும் உறவும் நட்பும் நம்மைக் கைவிட்டாலும் குறளைப் பிடித்துக்கொண்டு நாம் வாழ்வில் கரையேறிவிடமுடியும்.
மனிதரும் மொழியும் உள்ளவரை… என்று உரை நூலின் முன்னுரைக்குத் தலைப்பிட்டு வள்ளுவத்தின் பெருமையை உணர்த்தியிருக்கிறார்.
நவீன சிற்பம்போல பலவண்ண வள்ளுவர் ஓவியம் அட்டையை அலங்கரிக்கிறது.
ஓவியர் ஏபி.ஸ்ரீதருக்குப் பாராட்டுகள். இதே நூலை மாணவர்களுக்குப் பயன்படும்படி கையடக்கப் பதிப்பாக கொண்டுவரலாம்.
இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப குறள்களின் உருமாறிய விளக்கங்களை நேர்செய்து புதிய உரையை கண்டிருக்கிறார் வைரமுத்து.
ஒரு வாசகனாக வாழ்த்தி மகிழ்கிறேன்.
– சுந்தரபுத்தன்