ஹரிஹர வீர மல்லு முதல் மகாவதார் நரசிம்மா வரை…!

ஜூலை மாதக் கடைசி வாரத்தை நிறைவு செய்யும் வகையில் சில திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எது வெற்றி வாகை சூடும் என்ற எதிர்பார்ப்பு சில நாட்களாகவே மேலோங்கி வருகிறது.

காரணம், இந்த வாரம் வெளியாகிற படங்கள் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தைக் கடக்குமா என்ற கேள்விதான். அக்கேள்வியைத் தூளாக்குகிற வகையில் இந்த வாரம் ‘வித்தியாசமான’ காம்பினேஷன்களை கொண்ட திரைப்படங்கள் வருகின்றன.

இவற்றில் ஹரிஹர வீர மல்லு பார்ட் 1 மட்டும் இன்று (ஜூலை 24) வெளியாகிறது. மற்றனைத்தும் ஜூலை 25 அன்று வெளியாகின்றன.

ஹரிஹர வீர மல்லு பார்ட் 1

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அவரது மகன் ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண் நாயகனாக நடித்திருக்கிற திரைப்படம் ‘ஹரிஹர வீர மல்லு பார்ட் 1 ஸ்வார்டு வெர்சஸ் ஸ்பிரிட்’.

நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பாபி தியோல், சத்யராஜ், ஆதித்ய மேனன் உள்ளிட்ட பலர் தலைக்காட்டியிருக்கின்றனர். வரலாற்றுப் புனைவாக உருவாகியிருக்கும் இப்படம் திரையில் ஓடும் நேரம் 163 நிமிடங்கள்.

தலைவன் தலைவி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் இது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

காமெடியும் ஆக்‌ஷனும் கலந்த ‘பேமிலி ட்ராமா’வாக இது உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் திரையில் ஓடும் நேரம் 140 நிமிடங்கள்.

மாரீசன்

மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மாரீசன்’. என்னதான் ‘ரோடு மூவி’ என்று சொல்லத்தக்க வகையில் இதன் ட்ரெய்லர் அமைந்திருந்தாலும், ‘என்ன மாதிரியான படம் இது’ என்ற யோசனை ரசிகர்களிடம் இருந்து அகலவில்லை.

காமெடி கலந்த செண்டிமெண்ட் ட்ராமா ஆக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிற இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி எழுத்தாக்கம் செய்திருக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 154 நிமிடங்கள்.

மகாவதார் நரசிம்மா

அனிமேஷன் வகைமையில் அமைந்த இப்படம் பிரகலாதன் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

‘காந்தாரா’ தந்த ஹொம்பாலே பிலிம்ஸ் இதனைத் தயாரித்திருக்கிறது. அஸ்வின்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 131 நிமிடங்கள்.

தி பெண்டாஸ்டிக் ஃபோர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்

ஏற்கனவே புகழ்பெற்றிருக்கும் காமிக்ஸ் வடிவமான ‘பெண்டாஸ்டிக் ஃபோர்’ மீண்டும் ஒருமுறை ஹாலிவுட்டில் சினிமா ஆக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோ பாஸ்அல், வனீசா கிர்பி, ஜோசப் க்யூன், எபோன் பாஸ் பாஹ்ரச் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை மாட் ஷக்மன் இயக்கியிருக்கிறார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 115 நிமிடங்கள்.

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வந்த ‘கல்ட் கிளாசிக்’கான ‘புதுப்பேட்டை’ இந்த வாரம் ரீரிலீஸ்’ ஆகிறது. மாரி, வடசென்னை படங்களும் தனுஷ் பிறந்தநாளையொட்டி திரையிடப்படுகின்றன.

இதுபோகக் கடந்த சில வாரங்களில் வெளியான சில வெற்றிப்படங்களும் தங்களது ஓட்டத்தைத் தொடர்கின்றன. இவற்றில் இந்த வாரம் வெற்றி பெறப் போவது எந்தப் படம்?

  • மாபா
Comments (0)
Add Comment