தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? – முடிவெடுப்பது யார்?

2026-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டன. அதோடு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பல தலைவர்களிடம் புழங்குகிற பொதுவான சொல், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி”.

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்தி பேட்டி அளித்திருக்கிறார். 

அண்மையில், கேரளாவிற்குச் சென்றபோதும் அதே கருத்தை மறுபடியும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல கூட்டணி ஆட்சி என்கின்ற கருத்தை மறுத்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

அதிமுக கூட்டணியில், அங்கம் வகிக்க இருப்பதாகச் சொல்லப்படும் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், “ஆட்சியில் பங்கேற்பது பாமகவின் உரிமை” என்று குரல் கொடுத்திருக்கிறார்.

பாமகவின் தலைவரான மருத்துவர் ராமதாசோ அன்புமணியின் கருத்தை மறுத்து, “அது அவரது சொந்தக் கருத்து” என்று சொல்லியிருக்கிறார்.

திமுக கூட்டணியிலும் கூட்டணி ஆட்சிக் குறித்த சலசலப்புகள் இல்லாமல் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான முனைவர் தொல்.திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை நீண்டகாலமாகவே தாங்கள் சொல்லிவந்ததை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்.

காங்கிரசிலும் கூட்டணி ஆட்சிப் பற்றி ஆங்காங்கே ஒரு சிலர் பேசத் துவங்கி இருக்கிறார்கள். 

அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே, தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த தா.பாண்டியன், “தமிழத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தலில் மட்டுமல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்களிக்க வேண்டும்.” என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்.

1996-ல் திமுக, மூப்பனார் தலைமையிலான த.ம.கா-வும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றபோது, கூட்டணி ஆட்சிப் பற்றி ஒரு சிலர் வலியுறுத்திய நிலையிலும் அப்போதைய த.ம.கா தலைவரான மூப்பனார் அதை வலியுறுத்தவில்லை.

திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியும் அதை ஏற்கவில்லை. திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க நேர்ந்தபோதும் அவர், கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக் கொள்ளவில்லை.

மத்தியில் அடுத்தடுத்து அமைந்த அமைச்சரவையில், அங்கம் வகித்த தமிழகத்தைச் சார்ந்த கட்சிகள் தமிழகத்தில் மட்டும் கூட்டணி ஆட்சிப் பற்றி என்ன காரணத்தாலோ, பேசாததும், செயல்படுத்தாததும் ஒரு விநோதம் தான்.

ஆக, கூட்டணி ஆட்சி என்பதைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு மத்திய அல்லது ஒன்றிய அரசை பொறுத்தவரை ஒரு பார்வை, மாநில அரசைப் பொறுத்தவரை ஒரு பார்வை என்று இருவேறு பார்வையாகத்தான் இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேசமயத்தில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி அமைந்தபோதும் அதை முடிவு செய்தவர்கள் அங்குள்ள வாக்காளப் பெருமக்கள்தான்.

குறிப்பிட்ட கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உருவாகின. 

அதே மாதிரியான நிலை, தமிழகத்தில் உருவாக வாய்ப்பில்லையா? தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சிதான், நம்மை ஆள வேண்டும் என்பதில் தமிழக வாக்காளர்கள் திட்டவட்டமான பிடிவாதத்துடன் இருக்கிறார்களா, என்ன? 

அம்மாதிரியான எந்தவிதமான பிடிவாதங்களும் தமிழக வாக்காளர்களுக்கு இல்லை என்பதுதான் எதார்த்தம்.

தேர்தலின்போது, அவர்களுக்கு முன்னால், இரு விரல்களை நீட்டினால் அதில் ஒன்றை தொடுபவர்களாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த ஒற்றை முடிவை நிரந்தமானதுமல்ல. தொடர்ந்து நீடிக்கக் கூடியதும் அல்ல.

தற்போது, கூட்டணி ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வரும்நிலையில், கூட்டணி ஆட்சி குறித்து தமிழக வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா?

உறுதியான நம்பகத்தன்மை வாய்ந்த தலைமை இல்லாமல் போகும் பட்சத்தில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை இனி உருவாக வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு நிலை உருவானால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதும் காலத்தின் கட்டாயமாகிவிடும்.

கூட்டணி ஆட்சிப் பற்றி தலைவர்கள் என்னதான் அவரவர் விருப்பப்படி பேசினாலும், 2026-ல் அதை முடிவு செய்யப்போவது தமிழக வாக்காளப் பெருமக்கள்தான்.

– மணா

Comments (0)
Add Comment