கொங்குதேர் வாழ்க்கை: கவிஞர் கரிகாலன் நெகிழ்ச்சி!

வழக்கமாக காலையில் ஐந்து நிமிடம் முகநூலில் memories பார்ப்பேன். கால இயந்திரம் போன்றது fb memories. கடந்த காலத்தின் சிறந்த தருணங்களை சிறிது நேரம் அசைபோடலாம். இன்றும் பார்க்கிறேன். இதே ஜூலை 16 (2017) அன்று, பொள்ளாச்சி (பொழில்வாய்ச்சி) இலக்கிய வட்டத்தில் பேசியிருக்கிறேன்.

அன்றைய நிகழ்வுக்கு என்னோடு நண்பர் ஸ்ரீபதி வந்திருந்தார்.

கொங்கு பகுதியில் பொழுதைக் கழிப்பது மனதுக்கு நிறைவாக இருக்கும். கொங்கு என்பது ஒருவித பண்பு. ‘கொங்குதேர் வாழ்க்கை’ இச்சங்க வரியை நம்மால் மறக்கமுடியாது.

கொங்கு என்றால் பூந்தாது, அல்லது தேன். அன்பின் கள்ளூறும் கொங்குச் சகோதரர்கள் அம்சப்பிரியா, பூபாலன், புன்னகை பூ ரமேஷ், ஜெயக்குமார் போன்றோருடன் கழிந்த பொழுதின் ஞாபகங்கள் பொழில் வாய்ச்சிபோல் பசுமையாக இருக்கிறது.

அன்றைய நிகழ்வில் அன்பு இளவல் இசை இருந்தார். நீண்டகாலத்துக்குப் பிறகு அவரை சந்திக்கிறேன். அவை நாயகன். அற்புத நண்பர்.

மீளும்போது குட்டி குட்டியாக ஆப்பிள் வாங்கிக் கொடுத்து வாஞ்சையை வெளிப்படுத்திய அன்பூறும் எழுத்தாளர்.

சில தினங்களுக்கு முன் அம்சப்பிரியா பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு மீண்டும் அழைத்தார்.

சமீபமாக சென்னை நிகழ்வுகளோடு என்னை சுருக்கிக் கொண்டிருப்பதை உணர்கிறேன்.

மனிதர்களைப் போலவே ஊர்களைப் பார்ப்பதிலும் எனக்கு பேரவா.

நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை இத்தகு ஊர்களுக்குச் செல்லும் போதெல்லாம், உலகமயத்தின் தாக்கத்தை மீறி அந்நகரங்கள் தம் அடையாளத்தை தக்கவைப்பதற்குப் போராடுவதை அவதானிப்பேன்.

பொள்ளாச்சியும் அப்படித்தான். ‘பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே’ மருதகாசியின் பாடல் வரியில் ஒரு சொல்லாக என் பதின் பருவத்தில் அறிமுகமான ஊர். கமுகும் தென்னையும் அணிசெய்யும் ஊர்.

‘வருகிறேன்’ என்றேன் அம்சப்பிரிவிடமும் பூபாலனிடமும். எப்படிப் போவது? தெளிவில்லை.

மே வெயிலைவிட வருத்துகிறது ஜூலை. அதே நிகழ்வில் பங்கேற்கும் எங்கள் பகுதி இளம்கவி கார்த்திக் திலகன் அலையில் அழைத்தார். அவரது மகிழுந்தில் போகலாம் என்றார். ‘சனிக்கிழமை காலை பழநி போகலாம். முருகனை தரிசித்து, மாலை பொள்ளாச்சி’. பயணத் திட்டத்தை எளிதாக்கினார் திலகன்.

காலம், வெளி இவற்றின் தளைகளை இலக்கியம் உடைக்கிறது. ஒரு நூலுக்குள் நூற்றுண்டு பழமையான குரல்களை கேட்கிறோம்.

கரிகாலன் வகுப்பறையில் இறந்த மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களது சொற்கள் அவனது வாழ்வை, இலக்கியத்தை புதுப்பித்தன.

மருங்கூர் என்கிற சிறுநிலத்தில் முகிழ்த்த ஒரு சிறுவனவன். வளர்ந்தபோது மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் அவன் முன்னால் வள்ளுவர், அவ்வை, வள்ளலார், ஷேக்ஸ்பியர், விட்மன், டால்ஸ்டாய் அமர்ந்திருந்தார்கள்.

எது நாகரீகம்? அன்பு எத்தகையது? சக உயிரிகளை நேசிக்கவேண்டியதன் அவசியம் என்ன? கற்பித்தார்கள்.

வகுப்பு முடிந்து வெளியே வருவேன். சிலவேளை சந்தேகம் தோன்றும்.

அலைபேசியை எடுத்து ஹெம்மிங்வே, தாஸ்தாயேவ்ஸ்கி எண்ணைத் தேடுவேன். அப்போது இட்டாலோ கால்வினோ தோளில் கைபோட்டு சொல்வார்.

‘கிளாஸிக்ஸ் இப்படித்தான். சொல்லவேண்டியதை ஒருபோதும் சொல்லி முடிக்காது’ என்றார்.

கூட்டங்களில் பேசுவதும் அப்படிதான். சொல்ல வேண்டியவற்றை, சொல்லி முடிக்க முடிவதில்லை. சொல்லி முடித்திருந்தால் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தோடு இலக்கியக் கூட்டங்கள் போடுவதை நிறுத்தியிருப்பார்கள்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment