நூல் அறிமுகம்:
அண்டனூர் சுரா – கவிஞர், எழுத்தாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வருகிறார்.
குறுநாவல், சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதி பாராட்டும் பரிசும் பெற்று வரும் எழுத்தாளர் அண்டனூர் சுராவின் முதல் நாவல் ‘முத்தன் பள்ளம்’.
எழுத்தாளர் அண்டனூர் சுரா ஓர் ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணியப் பார்வையில் பெண்களே எழுதத் தயங்கும் ஒரு நாவலை எழுதியுள்ளார்.
பெருத்த கொங்கையை வெறித்துப் பார்க்கும் ஆண்களைக் குறி வைத்து தாக்கியுள்ளார். பெரிய கொங்கையுடன் பெண்கள் படும்பாட்டை நாவலாக்கியுள்ளார்.
அவரின் துணிச்சலான முடிவே கொங்கை என்னும் இந்நாவல். அவர் எழுத்துப் பயணத்தில் கொங்கை ஒரு முக்கிய பதிவு.
வாசகனை வசியப்படுத்தும் எழுத்தை கைவரப்பெற்றவர். புனைவு எழுத்தை நேர்த்தியாக கையாள்பவர். கொங்கை முற்றிலும் மாறுப்பட்ட படைப்பாகும்.
கொங்கை நாவலுக்காக அவர் தன்னுடைய வழக்கமான எழுத்து நடையை மாற்றி இந்த களத்திற்கான எழுத்தை மட்டுமே கையாண்டிருக்கிறார்.
இந்தச் சமூகம் பெண்கள் மீது திணித்த பல கட்டமைப்புகளைத் தன்னுடைய எழுத்தால் பகீரங்கமான கேள்விகளை முன் வைக்கிறார்.
பெண்களை வடிவமைக்கும் ஆண்களுக்கு சற்று பலத்த உள்காயங்களை ஏற்படுத்துகிறார். அவர்களின் வலிகளை உணராத ஆண்கள் அவர்களை வடிவமைக்க தகுதியற்றவர்கள். மருந்துகடையில் ஆணுறை வாங்கும் பலரும் நாப்கின் வாங்கத் தயங்குகிறார்கள்.
எதிர் நிற்கும் பெண்ணின் மார்பகங்களைப் பார்த்து பேசும் கண்ணியமில்லாத ஆண்கள் வாழும் கூட்டத்தில் தான் இருக்கிறோம்.
பேருந்து பயணத்தில் தாய்ப்பால் ஊட்ட முடியாது. கோயில்களில் முடியுமா? எந்த பொதுவெளியிலும் முந்தானையை குழந்தைக்காக விலக்க முடியாது.
நான் வெளிநாட்டில் வாழ்ந்திருக்கிறேன் எல்லா பொதுவெளியிலும் குழந்தைகளுக்கு பாலூட்டுவார்கள். நம்மவர்களும் அங்கு கண்ணை அந்தத் திசையிலும் திருப்பமாட்டார்கள்.
திரைப்படங்களும் சில வார பத்திரிகைகளும் மட்டுமே மார்புகளையும் தொப்புள்களையும் கவர்ச்சிப்படுத்தினார்கள். நடுப்பக்கத்தை அலங்கரித்து கொண்டார்கள். அண்டனூர் சுரா நாவல் முழுக்க உரையாடல்களால் பளீர் என்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் ஏதோ ஒரு விஜி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். அவளுடைய மார்பகங்களை அத்தனை ஜோடிக் கண்களும் மேய்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மார்பகங்கள் வளர்ச்சி இல்லாத பெண்களின் மீதான வசைச் சொற்கள் கொடுமையானவை. ஆதிகாலத்தைப் போலவே பெண்கள் தலைமை ஏற்க, ஆண் பின்தொடரும் காலம் சுழன்றால் சற்று சிந்தித்துப் பாருங்கள். அத்தனையும் இங்கே மாற்றப்பட்டுவிடும்.
தாய்மைக்காக ஒதுங்கியவர்களை நாம் ஒரேடியாய் சமையல் அறைக்குள் சிறைப்படுத்திவிட்டோம். சிறகுகள் துளிர்த்த சிலரைத் தான் சந்தித்து கொண்டிருக்கிறோம்.
தனக்கு சிறகுகள் இருப்பதே தெரியாத பல பறவைகள் இன்னும் நமக்கிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கொங்கை என்ற படைப்பிற்காக அண்டனூர் சுராவை உளமாற வாழ்த்துகிறேன். தலைப்பை வைப்பதற்கே தனி தைரியம் வேண்டும்.
இது வாசகர்களைத் தாண்டி அனைவரும் வாசித்தாக வேண்டிய படைப்பு அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
இந்தப் புத்தகம் தற்போது என் மனைவியும் மகளும் வாசித்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நிறைய ஆண்களும் வாசித்தாக வேண்டிய படைப்பு.
– கதிரவன் மகாலிங்கம்
*****
நூல்: கொங்கை
எழுத்தாளர்: அண்டனூர் சுரா
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.95/-
பக்கங்கள்: 90