குடிக்கு அடிமையானவர்களின் அத்துமீறல்கள்!

டாஸ்மாக்கின் விற்பனையை எப்படியாவது கூட்டிவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளே அதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் குடிக்கு அடிமையானவர்களின் செயல்பாடுகளைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்படும்போது வருத்தப்பட வைக்கிறது.

அண்மையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், இரண்டு மாணவர்கள் வகுப்புக்கு தாமதமாக வந்ததோடு, மதுபோதையுடனும் உள்ளே வந்திருக்கிறார்கள். தட்டிக்கேட்ட ஆசிரியரை பாட்டிலாலேயே தாக்கி இருக்கிறார்கள்.

வகுப்பறையில் சக மாணவர்களுக்கு முன்னால் நடத்திருக்கிறது இந்தக் கொடூரம். காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். போதையுடன் தாக்கிய மாணவர்கள் சிறார் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

இதை ஒரு செய்தியாக படிக்கும்போதும், தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் அந்தக் குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள்.

இதேமாதிரியான நிகழ்வுகள் தமிழகத்தில், பல்வேறு இடங்களில் நடந்திருக்கின்றன. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகளும் இத்தகைய போதைப் பழக்கத்திற்கு ஆளாகி, மற்றவர்களை இம்சைப் படுத்துவதுவரை பல சம்பவங்களை தமிழகச் சூழ்நிலைகளில் பார்க்க நேரிடுகிறது.

மதுபாட்டிலில் எழுதப்பட்டிருக்கும் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்கின்ற வாசகத்தை நேரடி அனுபவமாகவே பலரும் இங்கு உணர வேண்டியிருக்கிறது.

பள்ளிக் கல்லூரிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்று விதிமுறைகள் இருந்தாலும், குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடைகளை மதுவை வழங்கக்கூடாது என்கின்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி இவ்வளவு தாராளமாக வெவ்வேறு மதுவகைகள் மாணவர்களின் கைகளுக்கு எப்படிப் போய்ச் சேருகிறது?

மதுபானம் மாதிரியே, விதவிதமான போதை வஸ்துக்களின் புழக்கமும் இதே கல்விக்கூடங்களுக்கு அருகிலேயே கிடைப்பதும், மாணவர்கள் அதற்கு வாடிக்கையாளர்களாக மாறிப்போவதும் தற்செயலாகத் தான் இங்கே நடக்கிறதா?

மாணவர்களுக்கிடையே சிறு பார்ட்டி என்றாலும், தற்போது அந்தப் பார்ட்டி மது மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதில்தான் நிறைவடைகிற சூழ்நிலை இங்கு இருக்கிறது.

சென்னை மாதிரியான பெரு நகரங்களில் சனிக்கிழமை இரவுகளில் நடக்கும் காஸ்ட்லியான பார்ட்டிகளே இதற்கு சாட்சி.

இத்தகைய மது மற்றும் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கென்றே தனியாக ஒரு துறையே இருக்கிறது. அதை செயல்படுத்துவதற்கென்றே தனியாக அதிகாரிகளும் அலுவலர்களும் இருக்கிறார்கள். 

இன்னொரு பக்கம் அரசே டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் நடத்த அனுமதிக்கிறது. அதிலும் குறிப்பிட்ட கால வரம்பை மீறி அவற்றின் விற்பனையும் நடக்கிறது.

அதை குடிமகன்கள் அல்லது குடிப் பிரியர்கள் கூடுதலான தொகைக் கொடுத்து, வாங்கிச் செல்வதும் அந்தக் கூடுதலான தொகை, எந்தளவுக்கு பெருகி இருக்கிறது என்பதை சமீபத்தில், தமிழகத்தில் நடந்த சோதனைகள் உணர்த்தின.

இக்கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிடப்பட்டிருக்கிற சம்பவம் அந்தப் பகுதியில் மட்டுமே நடக்கின்ற ஒன்றல்ல. பல பகுதிகளிலும் இப்படி நடப்பதை தமிழக ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

தமிழக மக்கள் மதுவினால், தங்கள் குடும்பங்கள் சீரழிவதை வலியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஊற்றுக் கண்ணான மதுவிற்பனையைத் தடுத்து நிறுத்த, மக்கள் நலனை உண்மையிலேயே விரும்புகிற யார் முன் வரப்போகிறார்கள்?

– யூகி

Comments (0)
Add Comment