அனுராதா ஸ்ரீராம்: குரலால் வசீகரிக்கும் ஆளுமை!

வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரரான அனுராதா ஸ்ரீராமின் தாயாரும் பின்னணிப் பாடகியாக இருந்ததால், சிறு வயது முதல் இசையுடன் வளர்ந்தார் அனுராதா.

தஞ்சை கல்யாண ராமன் மற்றும் பிருந்தா போன்றவர்களிடம் முறைப்படி கர்நாடக இசை கற்றுக்கொண்டு பனிரெண்டு வயது முதல் மேடைக் கச்சேரி செய்யத் தொடங்கினார்.

ரஜினியின் ‘காளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தார். 1990-களின் தொடக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையை மக்களிடம் கொண்டு சேர்க்க நல்ல குரல் வளமும் இசை ஞானமும் கொண்ட பாடகர்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

1995-ம் ஆண்டு ‘பம்பாய்’ படத்தில் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக பாட வைத்து சினிமாவிற்கு அனுராதாவை அறிமுகப்படுத்தினார் ரஹ்மான்.

இதற்கு முன்பு சில பாடல்கள் அனுராதா பாடியிருந்தாலும் மலரோடு பாடல் யார் இந்தப் பாடகி என்று மக்களைக் கேட்க வைத்தது.

அதன் பின்னர் இவர் மின்சாரக் கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், “நலம் நலமறிய ஆவல்”, ”உன் உதட்டோர சிவப்பே” என தனது குரலால் தமிழக மக்களின் மனதில் நுழைந்து விட்டார் அனுராதா.

“நலம் நலமறிய ஆவல்” பாட்டில் காதல் ஏக்கம், “கரு கரு கருப்பாயி” பாடலில் துள்ளல் இப்படி பல எமோஷனல்களை குரலில் காட்டுவதுதான் அனுராதா அவர்களின் வெற்றி.

வெற்றிக் கொடி கட்டு பாடலில் இடம் பெறும் “கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” பாடல் தமிழ்நாட்டில் ஒலிக்காத கிரமங்களே இல்லை என்றே சொல்லலாம்.

எண்ணிலடங்கா திரைப்பாடல்கள், பல்வேறு மேடைகள் என்று அனுராதா ஸ்ரீராம் வலம் வந்தாலும் தனது தேடலை நிறுத்தவில்லை.

பண்டிட் மணிக் தாகூர்தாஸ் என்பவரிடம் ஹிந்துஸ்தானி இசையும், ஷீர்லி மீயர் என்பவரிடம் மேற்கத்திய இசையையும் கற்றுக் கொண்டார். இந்த இசை வடிவங்களில் மேடை நிகழ்ச்சியும் நடத்துகிறார்.

சென்னை பல்கலையில் இசையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, சிங்களம் போன்ற பல மொழிகளில் பாடும் திறமை பெற்ற அனுராதா ஸ்ரீராம் சென்னை பொண்ணு, சவாரியா உட்பட பல்வேறு இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் 5000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

திரைப் பாடல்கள், ஆல்பம், மேடை நிகழ்ச்சிகள் என பல்வேறு திறமை கொண்ட பல ஹீரோயின்களுக்குப் பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார்.

குரல் வளத்தால் பன்முகத் திறமை கொண்ட அனுராதா ஸ்ரீராம் அவர்களின் வெற்றிக்குக் கடின உழைப்பு என்றால் அது மிகையல்ல.

Comments (0)
Add Comment