மக்கள் வலுவுடன் ஒன்றுசேர்ந்தால்…!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கின்ற எளிய உண்மையை பள்ளிகளில், படிக்கும்போது வேடன் புறா கதையைச் சொல்லிப் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது.

அதேமாதிரி, கர்நாடகாவில் ஒரு சம்பவம்.

காட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், நிஜமாகவே ஒரு சிறுத்தை நடமாடுவதாக தொடர்ந்து வனத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்திருக்கிறார்கள் அந்த கிராமத்து மக்கள்.

ஆனால், குறிப்பிட்ட அந்தச் சிறுத்தையைப் பிடிக்க எந்த முயற்சிகளும் நடக்கவில்லை. 

அண்மையில், விவசாயி ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் மீது பாய்ந்திருக்கிறது அந்தச் சிறுத்தை.

அவர், கூச்சல் போட்டதுடன் அடுத்து செய்த காரியம்தான் முக்கியமானது.

உடனே, அருகிலிருந்த கிராமத்து மக்களைக் குரலெழுப்பி வரவழைத்திருக்கிறார்.

ஒரு பெருங்கூட்டம் கையில் கம்புகளுடன் களத்தில் இறங்கியிருக்கிறது. அந்தச் சிறுத்தையைச் சுற்றி வளைத்திருக்கிறது.

நடுவில், இரையைப் போல மாட்டிய அந்தச் சிறுத்தையால் அடிகளை எதிர்கொள்ள முடிந்ததே தவிர, தப்பிக்க முடியவில்லை.

மக்களால் பிடிக்கப்பட்ட அந்தச் சிறுத்தையை மக்களே வனத்துறையிடம் ஒப்படைத்தார்கள்.

ஒப்படைக்கப்பட்டபோது, பிடிபட்ட அந்தச் சிறுத்தையின் முகத்தை வெவ்வேறு தொலைக்காட்சிகளில் குளோசப்பில் காட்டினார்கள்.

ரொம்பவும் நொந்துபோயிருந்தது அந்தச் சிறுத்தை.

அதே தொலைக்காட்சியில், குளோசப்பில் பார்க்கிற காருண்ய சங்கத்தினர் கண்கலங்கிப் போயிருப்பார்கள். 

ஆனால், ஒன்று புரிகிறது.

மக்கள் தங்களுடைய நலனுக்கு எதிராகத் தாக்க முயலும் எந்த சக்தியையும் தாங்கள் வலுவுடன் ஒன்றிணைந்தால், அதை எதிர்கொண்டு அதே சக்தியை நொந்துபோகச் செய்ய முடியும் என்பது மட்டும் புரிகிறது.

– யூகி

Comments (0)
Add Comment