விருதுகளைவிட மதிப்பால் உயரமான எஸ். ஜானகி!

குமுதம் வார இதழில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஹிந்து ரங்கராஜன் என்று பரலாக அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளருடன் சென்னையில் உள்ள பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

சாதாரண நூல் புடவையுடன் எந்த விதமான ஆடம்பரங்களற்ற தோற்றத்துடன் – எதோ நம்ம வீட்டுப் ‘பெரியம்மா’வைப் போலவே இருந்தார் ஜானகி.

பேச்சில் அகங்காரத்தின் தொனி சிறிதும் இல்லை. தயக்கங்கள் எதுவுமில்லாத, அருவி கொட்டுவதைப் போன்ற பேச்சுமொழி அவரிடம் இருந்தது. அந்தப் பேச்சில் அன்பும் கரிசனமும் வெளிப்பட்டன.

போனதும் நாங்கள் பேச வந்த விஷயத்தைப் பற்றி சொன்னதுமே, அவர் “அதப் பத்தி பிறகு பேசலாம். முதல்ல இப்ப நா சொல்றத கேளுங்க. அதப்பத்தி உங்க பத்திரிகையிலும் எழுதுங்க” என்றவர், நமது அண்டை மாநிலத்திற்கு சிகிச்சைக்கு சென்று வந்த கனத்த அனுபவத்தைப் பற்றி உணர்ச்சிபூர்வமாகச் சொன்னார்.

சிறிய சோதனைக்காக அங்குள்ள பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, முறை தவறிய சிகிச்சையால் தனக்கு நேர இருந்த ஆபத்திலிருந்து தான் காப்பாற்றப்பட்டது பற்றி விளக்கமாகச் சொன்னார்.

”சிறு உடல்நலக் குறைவுக்காக அங்கு பரிசோதனைக்குப் போயிருந்தேன். சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திற்குள் என்ன சிகிச்சை அளித்தார்களோ தெரியவில்லை.

உடல் முழுக்க படபடப்பாகி, மூச்சுத் திணறும் நிலைக்குச் சென்றுவிட்டேன்.

உடன் வந்தவர்கள் அங்கு நடந்த தவறான சிகிச்சை பற்றி கத்தியபடி எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் எதேதோ செய்து எனது உடல்நிலையை சமநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

எப்படியோ, தப்பிச்சு இன்னைக்கு இங்கே உட்கார்ந்து உங்க கிட்ட பேசிட்ருக்கேன்.

எவ்வளவு நம்பிக்கையோடு மருத்துவமனையில் போறோம். அப்படி நம்பிக்கையோட வர்றவங்களுக்கு நல்லபடியா சிகிச்சை அளிக்க வேண்டியது மருத்துவமனையின் முக்கியக் கடமையில்லையா?

சாதாரணமா ஆஸ்பத்திரிக்கு போன என்னை, எவ்வளவு சீரியஸாக்கி அனுப்பியிருக்காங்க? நேற்று தான் அங்கிருந்து வந்தேன்பா”

– என்று அவர் சந்தித்த ஆபத்தைப் பற்றி அரை மணி நேரத்திற்கும் மேலாக விவரித்ததை ‘குமுதம்’ வார இதழில் எழுத, அது அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்தது.

அந்த வாரத்திய ‘குமுதம்’ வெளிவந்த பிறகு அந்தச் செய்தி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியானது.

மேலே சொன்ன சம்பவத்தைப் பற்றிப் பேசிவிட்டு, கொஞ்சம் ஆசுவாசப்பட்டு சிரித்தவாறே, “இப்போ, முதல்ல காஃபி குடிங்க… அதுக்குப் பிறகு ஆந்திராவில் பிறந்து வளர்ந்த கதையப் பத்திப் பேசலாம்” என்றார்.

அடுத்து, மாறிய முகபாவத்துடன் அவருடைய முழு வாழ்க்கையையும் மிகச் சிக்கமான வார்த்தைகளில் சொல்லி முடித்தார்.

ஜானகி அளித்த அந்த விரிவான பேட்டி, இரண்டு நாட்களுக்கு முன்பு இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

https://www.facebook.com/share/p/1BZftY3o8v/

பேட்டியெல்லாம் ரெக்கார்ட் செய்து முடித்ததும் கேசுவலாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது, தங்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் விதத்தில் விருதுகள் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டபோது, மென்மையான சிரிப்புடன் ஜானகி சொன்னது இன்னும் நினைவில் பதிந்திருக்கிறது.

“எத்தனையோ தேசிய, மாநில விருதுகளை எல்லாம் வாங்கியிருந்தாலும் இத்தனை மொழிகளில் இவ்வளவு நீண்ட காலம் பாடியிருக்கிற என்னை அரசு சரிவர கவனிக்கவில்லை என்கிற வருத்தம் சில நேரங்களில் எழுந்திருக்கிறது.

ஆனாலும், இதைவிட எனக்குக் கிடைத்திருக்கிற ரசிகர்கள் கொடுத்திருக்கிற வரவேற்பும் வாழ்த்தும் தான் மிகப்பெரிய விருது.

எந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் அன்போடு அவர்கள் என்னிடம் பேசுகிற பேச்சைவிட வேறென்ன வேண்டும்?”

– மணா

Comments (0)
Add Comment