நீங்கள் B.Sc., B.Ed படித்துவிட்டு ஆசிரியர் தொழிலைப் பார்க்காமல் ஏன் எழுத்தாளராக உருவானீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான்.
பி.எட் படிப்பை முடித்தவுடன் எனக்கு பவானிசாகரில் உள்ள அரசு பள்ளியில் (Government basic training School) வேலை கிடைத்தது.
பவானி சாகரில் ஆறு மாதம் பணிபுரிந்த பின் பண்ருட்டிக்கு பக்கத்தில் இருக்கும் பாலூர் என்கிற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்தது.
கோவையில் இருந்து பண்ருட்டி 350 கிலோமீட்டர். பண்ருட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் பாலூர் என்கிற கிராமம் இருந்தது.
இன்றைக்கு இருப்பது போல அன்றைக்கு பஸ் வசதி ட்ரெயின் வசதி மிகவும் குறைவு என்பதால் நான்கு பஸ்கள் மாறி பாலூர் போய் சேர எனக்கு கிட்டத்தட்ட ஒரு நாள் பிடித்தது.
பாலூர் அன்றைக்கு மிகச் சிறிய கிராமம். பள்ளிக் கூடமும் அரதப் பழசாக இருந்தது. (இப்போது நவீனமயமாக இருக்கலாம்).
நான் அங்கே பணியில் சேருவதற்கு முன்பு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்துப் பேசியபோது அவர் சொன்னார் .
“நீங்க வேற எங்கேயாவது போஸ்டிங் கேட்டு போயிருக்கலாமே? இங்க ஏன் வந்தீங்க” என்று கேட்டார். நான் “ஏன்” என்றேன்.
அதற்கு அவர் “அது ஒண்ணும் இல்ல தம்பி, இந்த கிராமத்தில் கொசு தொல்லை அதிகம். பகலிலேயே படை படையாக பறக்கும். இந்த கிராமத்தையும் சேர்த்து மொத்தம் மூணு கிராமத்துல க்யூலெக்ஸ் என்கிற கொசு அதிகம்.
அதன் காரணமா யானைக்கால் வியாதி வரும்னு சொல்லுவாங்க.. அது தவிர இந்த பாலூரில் நீங்க தங்க முடியாது. பக்கத்திலே 12 கிலோ மீட்டர் தூரத்தில் நெல்லிக்குப்பம் ஊரிருக்கிறது.
அங்கே போய் தங்கி கொண்டுதான் இங்கே பணிக்கு வரவேண்டும். நீங்க மறுபடியும் கோவைக்குப் போய் சி.ஈ.ஓ.வை பார்த்து வேறு எங்கேயாவது போஸ்டிங் வாங்க பாருங்க”என்று சொல்ல,
நான் வீட்டிற்கு ட்ரங்கால் போட்டு பேசினேன். என்னுடைய அம்மா பயந்து போய் “வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம். உடனே புறப்பட்டு வா” என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ண, கோவை புறப்பட்டு வந்துவிட்டேன்.
கோவை வந்து சேர்ந்ததும் அடுத்த நாளே முதன்மைக் கல்வி அதிகாரி விசாலாட்சி அம்மாவை போய் பார்த்தேன். விஷயத்தைச் சொன்னேன்.
“மேடம் அந்த பாலூர் என்கிற ஊர்ல க்யூலெக்ஸ் கொசு அதிகம். யானைக்கால் வியாதி பிரச்சினையும் இருக்குன்னு தலைமை ஆசிரியர் சொன்னார். எனக்கு வேற ஏதாவது ஊர்ல போஸ்டிங் போட்டா பரவாயில்லை” என்றேன்.
அதற்கு அவர், “ஓ…! அந்த ஊர்ல கொசு இருக்கா, அப்படின்னா அங்கே வேலை பாக்குறது கஷ்டம்தான். நீங்க ஒரு வேலை பண்ணுங்க.
தமிழ்நாடு பூராவும் ஒரு டூர் போய் எந்த ஊர்ல கொசு இல்லையோ, அந்த ஊரோட பேரை சொல்லுங்க.
அந்த நிமிஷமே உங்களுக்கு அந்த ஊருக்கு போஸ்டிங் போட்டு கொடுத்துடறேன். என்னைக்கு டூர் கிளம்புறீங்க” என்று கிண்டலாகக் கேட்டார். நான் விழித்தேன்.
அவர் கடுமையாகக் குரலை உயர்த்தினார்.
“இதோ பாருங்க உங்களுக்கு கொடுத்த வேலைவாய்ப்பை வீணாக்கிட்டீங்க. இனிமேல உங்களுக்கு போஸ்டிங் போடணும்னா, அடுத்த வருஷம்தான் போஸ்டிங் போடமுடியும். இப்ப நீங்க வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கீங்க. போய்ட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
பி.கு: அந்த ஒரு வருட இடைவெளியில் நான் என் தந்தையோடு இணைந்து கைத்தறி சேலைத் தயாரிப்பு தொழிலை கவனித்துக்கொண்டே எழுத்துப் பணியையும் தொடரவே, ஆசிரியர் பணி என்னைவிட்டு விலகி பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் போய்விட்டது.
நன்றி: பேஸ்புக் பதிவு