விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு அரசுத் துறையில் ஏதாவது ஒரு வேலை கொடுத்து, அவர்களைக் கவுரவிப்பது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம்.
அந்த வகையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளிலும் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளிலும் ஆடிய ரிங்கு சிங்தான் அந்த வீரர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரிங்கு சிங், தனது பேட்டிங் திறமையால் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய வீரராக இடம்பிடித்தார்.
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஆடிய ரிங்கு சிங், பின்னர் இந்தியாவின் டி20 அணிக்கு தேர்வுபெற்றார்.
இந்திய அணிக்காக 33 டி20 போட்டிகளில் ஆடிய ரிங்கு சிங், அதில் 546 ரன்களைக் குவித்துள்ளார். 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 55 ரன்களைச் சேர்த்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தனது அதிரடியான ஆட்டத்தால் இடம்பிடித்த ரிங்கு சிங்கின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.
மணமகள் ப்ரியா சரோஜ், சமஜ்வாதி கட்சி எம்.பி. ஆவார்.
சமஜ்வாதி கட்சி எம்.பியுடன் ரிங்கு சிங்கின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரியாக அவரை நியமித்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசு பதவி வழங்கியுள்ளது.
இந்த சூழலில் ரிங்கு சிங்குக்கு பதவி வழங்கப்பட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி பதவி என்பது கல்வித் துறையில் முக்கிய பொறுப்பாகும். மாவட்ட கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த இந்த பதவி இது.
மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி பதவி என்பது பெரும்பாலும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகள் மூலம்தான் நிரப்பப்படும்.
இந்தப் பதவியைப் பெற ஒருவர் பட்டமேற்படிப்பு படித்திருக்க வேண்டும். ஆனால், பத்தாம் வகுப்புகூட தேர்ச்சியடையாத ரிங்கு சிங்குக்கு, மாவட்டத்தின் ஆரம்ப கல்வியில் மாற்றங்களை கொண்டுவரும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை பலரும் கண்டித்துள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள உத்தரப்பிரதேச மாநில அரசு, “விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க இதுபோன்ற அரசுப் பொறுப்புகளை அவர்களுக்கு அளிப்பது மரபாக இருந்துள்ளது. இத்துறைக்கு ஒரு பிராண்ட் அம்பாசிடராகவே ரிங்கு சிங் இருப்பார்” என்று கூறியுள்ளது.
ஆனால், கல்வியாளர்கள் அதை ஏற்கவில்லை. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டுமென்றால் காவல்துறை போன்ற ஏதாவது ஒரு துறையில் அதிக பொறுப்புகள் இல்லாத துறையில் வேலையைக் கொடுத்திருக்கலாம்.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்ககூடிய கல்வித் துறை அதிகாரி பொறுப்பை அவருக்கு வழங்கியது தவறு என்று அவர்கள் கூறுகின்றனர்.
மாநில அரசின் இந்த தவறான முடிவு பற்றி பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரிங்வுக்கு வேலை கொடுத்ததில் சர்ச்சை எழுந்தாலும், அவரது குடும்பம் இந்த வேலை கிடைத்ததில் சந்தோஷமாக இருக்கிறது. “இது எங்களுக்கு பெருமையான விஷயம்” என்று ரிங்குவின் அப்பா கூறியுள்ளார்.
– பி.எம்.சுதிர்