பள்ளி வயதில் பாகுபாட்டை ஒழித்த இளையபெருமாள்!

திரு எல். இளையபெருமாள் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு இது:

“பள்ளிகளில் ஒவ்வொரு அறையிலும் தண்ணீர் குடிக்க பானை வைப்பார்கள். மண் பாத்திரம். அந்தப் பானையில் “பறையன் பானை” என்று எழுதப்பட்டிருந்தது. 

அதைப் பார்க்கின்றபோது ஏன் ஜாதியைக் குறித்து இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்று வருத்தம் ஏற்பட்டது.

நான் பள்ளி முடிந்ததும் அங்கேயே தங்கிவிடுவேன். ஏழு மணி ஆனதும் பானையை உடைத்துவிட்டுச் சென்றுவிடுவேன். இப்படி ஒரு மாத காலம் நடந்தது.

இதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையைப் பூட்டிவிடச் சொல்லி உள்ளேயே இருந்தார். நான் உடைக்கின்றபொழுது “இளையபெருமாள் நிறுத்து” என்றார்.

அவர் அறையைத் திறந்துகொண்டு வந்து எவ்வளவு காலமாக இந்தத் தவறைச் செய்துவருகிறாய் என்று கேட்டார்.

நான் “ஒரு மாத காலமாகச் செய்து வருகிறேன்” என்று சொன்னேன்.

“சரி பரவாயில்லை நீ வீட்டுக்குப் போ” என என்னை அடிக்காமல் அனுப்பிவிட்டார்.

மறுநாள், கடவுள் வணக்கம் நிகழ்த்துகின்ற சமயம் “இளைய பெருமாளைக் கூப்பிடு” என்று சொன்னார்கள்.

நான் வந்தேன். “பானையை உடைத்த திருடனை நான் கண்டுபிடித்து விட்டேன்” என்று சொல்லி, ஒரு மேஜையைக் கொண்டுவரச் சொல்லி அதன்மேல் என்னை ஏறச் சொன்னார்கள்.

“ஏன் உடைத்தாய்” என்று கேட்டார்கள்.

பள்ளிக்கூடத்தில் இந்தக் கொடுமையான வார்த்தைகள் இருப்பதும், வேறு மாணவர்கள் எங்கள் பானையில் தெரியாமல் நீர் குடிக்க வந்தால், “அதைத் தொடாதே, அது பறையன் பானை தீட்டு” என்று மாணவர்களுக்குள்ளே சொல்வார்கள். இது கேவலமாக இருந்ததனாலும் நான் உடைத்தேன்” என்று சொன்னேன்.

அன்றைக்கே தலைமையாசிரியர் கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள்,

“இதுமாதிரி பானையில் ஜாதி எழுதக்கூடாது.

இனிமேல் பானையில் தண்ணீரும் குவளையும் இருக்கும், இஷ்டமில்லாதவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து சாப்பிடலாம்” என்று சொன்னார்கள்.

எனக்கு அது பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அன்றைக்கே என் பிஞ்சு மனசிலே இப்படிப் போராடினால் நாம் வெற்றிபெற முடியும் என்று பதிந்தது.

இந்த ஜாதீயக் கொடுமையை சமூகத்திலிருந்து நீக்க வேண்டுமானால் போராடினால்தான் முடியுமென்று அப்போதே மனசில் பட்டது.”
*
– முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி. எழுதிய ‘எல்.இளையபெருமாள் – வாழ்வும் பணியும்’ என்ற நூலிலிருந்து

Comments (0)
Add Comment