முப்படைத் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதையடுத்து நாட்டின் 3-வது முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார்.
இவர், தேசியப் பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து, கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார்.
பல பிரிவுகளில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா நிலவரங்களை இவர் நன்கு அறிந்தவர் என்பதால், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தலைமைச் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
இதேபோல், இந்தியக் கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து, நாட்டின் 27-வது கடற்படைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் நேற்று பொறுப்பேற்றார்.
இவர் கடந்த 1987-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்தார்.
கடற்படையில் சிறந்த பணிக்காக பரம் விசிஷ்ட் சேவா, அதி விசிஷ்ட் சேவா மற்றும் விசிஷ்ட் சேவா உள்ளிட்ட பதக்கங்களை இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.