ஜூன் 21: சர்வதேச யோகா தினம்
ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இன்று யோகாசனம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விசாகபட்டினத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பிரமாண்ட யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கி.மீ. நீள நடைபாதையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரதமர் மோடியும் இந்நிகழ்ச்சியில் யோகாசனம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உடல் பருமன் என்பது இன்று சர்வதேச அளவில் பெரிய சவாலாக உள்ளது. யோகா மூலம் 10 சதவீத உடல் பருமனைக் குறைக்கலாம் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நான் சொல்லி இருந்தேன்.
இந்த சவாலை மக்கள் ஏற்க வேண்டுமென இந்நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலை
மற்ற உடற்பயிற்சிகளைப் போல யோகாசனம் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பயிற்சியல்ல.
இந்தியாவில் யோகாசனம் தோன்றி 5,000 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக கி.மு.1500-ல் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளன.
அந்தக் காலத்தில் ரிஷிகளும், சித்தர்களும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள யோகாசனத்தை கற்று, அதை தினசரி செய்துவந்தனர். அவ்வப்போது அதில் புதிய பயிற்சி முறைகளையும் சேர்த்தனர்.
விவேகானந்தரால் பரவிய யோகா
ஒரு காலத்தில் இந்தியாவில் மட்டும் இருந்த யோகாசன முறை, 1890-ம் ஆண்டில் மேற்கத்திய நாடுகளில் பரவியது. இதில் சுவாமி விவேகானந்தருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் 1893-ம் ஆண்டில் சிகாகோவில் நடந்த சமய மாநாட்டில் பேசிய பிறகு, அங்குள்ளவர்களுக்கு யோகாசனம் மீது மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்களும் யோகாசனம் செய்வதில் ஈடுபட்டனர். உலகளாவிய அளவில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் யோகாசனங்களைச் செய்து வருகிறார்கள். சர்வதேச அளவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகாசனப் பயிற்சி மையங்கள் உள்ளன.
அமெரிக்காவில் விவேகானந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட யோகா, காலப்போக்கில் மெல்ல வளர்ந்தது.
1920-ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் பரமஹம்ச யோகானந்தா, கிரியா யோகா பற்றி உரையாற்றினார்.
இது அந்நாட்டு மக்களிடையே யோகா பயிற்சியைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது.
1947-ம் ஆண்டில் இந்திரா தேவி என்பவர் ஹாலிவுட்டில் ஒரு யோகாசன பயிற்சி மையத்தை தொடங்கினார்.
யோகாசனம் பற்றி 3 புத்தகங்களையும் அவர் எழுதினார். இது அங்குள்ள பெண்களிடையே புகழ்பேற்றது. அவர்கள் யோகாசனம் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து ரிச்சர்ட் ஹிட்டில்மேன் என்பவர் தொலைக்காட்சியில் யோகா தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தினார். இதுவும் அமெரிக்காவில் யோகாசனம் பிரபலமாக காரணமாக விளங்கியது.
பதற்றத்தை குறைக்கும் யோகாசனம்
யோகாசனத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கலாம்.
யோகாசனம் என்பது உடல் நலத்தைக் காப்பதுடன் மனப் பதற்றத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனாலேயே மன அழுத்தத்துக்காக சிகிச்சை பெறுபவர்கள் யோகாசனம் செய்ய மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
யோகா பயிற்சி மேற்கொள்ளும் ஆண்கள் யோகி என்றும், பெண்கள் யோகினி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் உலகின் முதல் யோகியாக சிவபெருமான் கருதப்படுகிறார்.
1937 வரை பெண்களுக்கு அனுமதி இல்லை?
பெரும்பாலும் 30 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் யோகாசனம் மிகப் பிரபலமாக உள்ளது. 1937-ம் ஆண்டுவரை யோகா பயிற்சி செய்ய பெண்களுக்கு அனுமதி இல்லாத சூழல் இருந்தது. அதன் பிறகே பெண்கள் யோகா செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் யோகாசனத்தில் ஈடுபடுகிறார்கள். யோகாசனம் செய்பவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
யோகாசனத்தை தீவிரமாகச் செய்தால் 3 மாதங்களில் 3.5 கிலோ வரை எடையைக் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாலேயே அதன்மீது மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சிரசாசனம் வேண்டாம்
யோகாசனங்களில் உள்ள பல்வேறு முறைகளில் சிரசாசனமும் ஒன்று. இந்த பயிற்சியை செய்பவர்கள் தலைகீழாக நீண்ட நேரம் நிற்பார்கள்.
ஆனால் இது ஆபத்தான யோகா என்று சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த யோகாவை செய்யும்போது, உடலின் பளு அனைத்தையும் கழுத்து தாங்கவேண்டி இருப்பதால், அப்பகுதியில் உள்ள எலும்புகள் பாதிக்கப்படும் என்றும், இதைச் செய்யும்போது தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால் மூளைப்பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
– பி.எம்.சுதிர்