இங்கிலாந்து டெஸ்ட் – புதிய பயணத்தைத் தொடங்கும் இந்தியா!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்தில் 20-ம் தேதி தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் பெரிய அளவில் சார்ந்து இருந்தது.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஓய்வுபெற்ற நிலையில், முற்றிலும் இளம் வீரர்களை நம்பி இந்தத் தொடரில் இந்தியா களம் காண்கிறது.

அந்த வகையில் 2007-ம் ஆண்டு தோனி தலைமையில் உருவான புதிய அணி போல் இந்த அணியிடம் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இல்லாத சூழலில், அணியின் வெற்றிக்கான பெரும் பாரம் சுப்மான் கில்லின் தோளில் விழுந்துள்ளது. இந்தியாவுக்காக ஆட ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே கேப்டனாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார் சுப்மான் கில்.

இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளில் தோனியும், ரோஹித் சர்மாவும் அமைதியான முறையில் கேப்டன் கூலாக அணியை வழிநடத்தி உள்ளனர்.

அதேநேரத்தில் வேறு சில தருணங்களில் கங்குலி, விராட் கோலி போன்றோர் ஆக்ரோஷமான முறையில் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வது உள்ளிட்ட வகைகளில் அணியை வழிநடத்தி உள்ளனர்.

இந்த 2 வழிகளில் கேப்டன் கில் எந்த வழியைப் பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பார்க்க இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு தலைமை ஏற்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்மான் கில்,

“இது மிகவும் சவாலான சூழலாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். முற்றிலும் புதிய அணியாக இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

இந்த நேரத்தில் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களுக்கு பாதுகாப்பான உணர்வை வழங்கும் சூழலை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அந்த சூழலை ஏற்படுத்துவதே என் முதல் கடமையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “ரோஹித் சர்மா ஒரு ஆக்ரோஷமான கேப்டன் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரை ஆக்ரோஷமான கேப்டனாகவே பார்க்கிறேன்.

ஆக்ரோஷம் என்பது உடல்மொழியில் மட்டும் இல்லை. தான் நினைத்ததை செயல்படுத்தவும் வேண்டும். அந்த வகையில் ரோஹித் சர்மா ஒரு ஆக்ரோஷமான கேப்டன்தான்” என்றார்.

இதை வைத்துப் பார்க்கும்போது அவர் ரோஹித் சர்மா வழியையே பின்பற்றுவார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அத்துடன் வீரர்களிடம் கடுமை காட்டாமல் அவர்களை தோழமையாக அணைத்துச் செல்லும் கேப்டனாகவும் சுப்மான் கில் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு கேப்டன் என்ற தகுதியை மீறி, பேட்ஸ்மேனாகவும் அவர் இந்திய அணிக்கு மிகவும் தேவைப்படுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 4-வது பேட்ஸ்மேனாக விராட் கோலியின் இடத்தில் கில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் மிடில் ஆர்டரில் இந்த இடம் மிகவும் முக்கியமானது என்பதால் கில்லின் பேட்டிங்கை இந்தியா பெரிதும் சார்ந்திருக்கிறது.

கில்லுக்கு அடுத்து அணியில் முக்கியத்துவம் பெறும் நபர் துணைக் கேப்டனான ரிஷப் பந்த். இந்தியாவின் இப்போதைய பேட்ஸ்மேன்களிலேயே அதிக அனுபவம் உள்ளவர் ரிஷப் பந்த்.

அத்துடன் SENA நாடுகளில் சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது.

5-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கும் அவரையும் இந்தியா பெரிதாக சார்ந்திருக்கிறது.

அதே நேரத்தில் முக்கிய கட்டத்தில் அவசரப்பட்டு ஆடி ஆட்டம் இழக்கும் அவரது அதிரடி ஸ்டைல்தான் கவலையைத் தருகிறது.

கில், பந்த் ஆகியோரை இந்தியா நம்பி இருந்தாலும், இங்கிலாந்தைப் பொறுத்தவரை அந்த அணி ஜெய்ஸ்வாலைப் பார்த்துதான் அதிகம் கவலைப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஜெய்ஸ்வால் கண்டிப்பாக இடம்பெறுவார் என்பது இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் பலரின் கணிப்பாக உள்ளது.

இந்த மூவருடன் கே.எல்.ராகுலும் சிறப்பான பேட்டிங்கை தந்தால் இந்தியா தப்பிக்கும்.

இவர்களுடன் 5-வது பேட்ஸ்மேனாக ஆடப் போவது தமிழகத்தின் சாய் சுதர்சனா அல்லது கருண் நாயரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்தியா பெரிதும் நம்பி இருப்பது பும்ராவைத்தான்.

ஆனால், காயம் படாமல் இருக்க முக்கியமான 3 போட்டிகளில் மட்டுமே ஆடுவேன் என்று அவர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

அவர் இல்லாத பட்சத்தில் முகமது சிராஜுக்கு கூடுதல் சுமை இருக்கக்கூடும்.

இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இல்லாத நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க மக்கள் வருவார்களா என்ற கவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது.

அந்த கவலையை போக்கும் வகையில் இந்தியாவின் இளம் படை தங்கள் ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

– பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment