சி.எஸ்.கே. செய்ய வேண்டிய மாற்றங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் மரண அடி வாங்கி நிற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் போன்ற பங்காளி அணிகள் முதல் போட்டியில் அதிரடியாக வென்றிருப்பது சிஎஸ்கே ரசிகர்களின் சோகத்தைக் கூட்டியிருக்கிறது.

இன்று சென்னையில் நடக்கும் அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த போட்டியில் வெல்ல சிஎஸ்கே அணியில் செய்தாக வேண்டிய சில மாற்றங்கள்.

டெவால்ட் பிரெவிஸ்

சிஎஸ்கே அணியில் இருக்கும் நம்பர் 1 அதிரடி பேட்ஸ்மேன் என்றால் அது டெவால்ட் பிரெவிஸ்தான்.

தென் ஆப்பிரிக்க அணியை கடந்த சில காலமாக தூக்கிச் சுமக்கும் இந்த இளம் புயல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் காயத்தால் ஆடவில்லை.

அவருக்கு பதில் மேட் ஷார்ட் ஆட, சிஎஸ்கேவுக்கு ரன்கள் ஷார்ட்டானது.

சிஎஸ்கே அணியை 200 ரன்களை கடக்கவைக்க தகுதிவாய்ந்த ஒரே வீரர் என்பதால், சென்னை போட்டியில் பிரெவிஸ் ஆடவேண்டும்.

அவர் காயத்தில் இருந்து குணமடைய வாய்ப்பு இருப்பதாக பயிற்சியாளர் பிளமிங்க் கூறியிருப்பதால் ஷார்ட்டுக்கு பதில் அவரை ஆடவைப்பது நல்லது.

அகேல் ஹொசைன்

ஐபிஎல் 2025-ல் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பந்துவீசியவர் நூர் அகமது.

ஆனால் அவர் பந்துவீசும் முறையை பேட்ஸ்மேன்கள் எளிதில் கணிக்கத் தொடங்கிவிட்டார்களோ என்ற சந்தேகம் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஏற்பட்டுள்ளது.

இதில் 2 ஓவர்களை மட்டுமே வீசிய நூர் அகமது, 24 ரன்களை தியாகம் செய்தார்.

இந்தச் சூழலில் அணிக்கு புதுவரவாக இருக்கும் அகேல் ஹொசைனை, நூர் அகமதுக்கு பதில் ஆடவைத்து பார்க்கலாம்.

உர்வில் படேல்

கடந்த ஐபிஎல் தொடரின் கடைசிக் கட்டத்தில் சென்னை அணிக்குள் இடம்பிடித்தவர் உர்வில் படேல்.

ஆடியது 3 போட்டிகளில்தான் என்றாலும் 212.50 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி அனைவரையும் அசரவைத்தார்.

ஆனால் அவருக்கு முதல் போட்டியில் ஆட வாய்ப்பு இல்லை.

ஆயுஷ் மாத்ரே அல்லது சர்பிராஸ் அகமதுக்கு பதில் உர்வில் படேலை சேர்த்தால் ரன் ரேட் எகிற வாய்ப்புகள் உள்ளன.

– ராதா

Comments (0)
Add Comment