அன்பும் காதலும் மனிதர்களை மேம்படுத்துகிறது!

நெகிழ வைத்த மணமகள் லாவண்யா!

வீட்டில் ஒரு செடிபோல வளர்ந்துகொண்டிருக்கிறார் லாவண்யா என்று கவிதையில் சொல்வார் அண்ணன் கவிஞர் பழநிபாரதி. இன்று அந்த அன்புமகளுக்கு தன் மனசுக்குப் பிடித்த காதலருடன் திருமணம். நேற்று மாலை வரவேற்பு.

சினிமா, கலை, இலக்கிய உலகமே திரண்டுவந்து வாழ்த்தி மகிழ்ந்தது.

பேராசிரியர் சுபவீ தலைமையில் எளிய சுயமரியாதை திருமணம். மணமக்கள் வாசித்த வார்த்தைகளைக்கூட சுருக்கிக் கொடுத்திருந்தார் பழநிபாரதி.

கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, பாரதி கிருஷ்ணகுமார்… அனைவரும் சில நிமிடங்கள் பேசி மணமக்களை வாழ்த்தினர்.

சுயமரியாதை திருமணங்களில் தொடர்ந்து பங்கேற்பதால் நாங்களும்கூட புரோகிதர்கள்போல ஆகிவிட்டோம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் சுபவீ.

அன்பும் காதலும்தான் மனிதர்களை பண்பில் மேம்பட்டவர்களாக மாற்றுகிறது என்றார் பாரதி கிருஷ்ணகுமார்.

தம்பி பழநிபாரதி இல்லாமல் எந்த ஒரு நூலையும் நான் வெளியிட்டதே இல்லை என்று பல ஆண்டுக்கால நட்பின் ஆழத்தில் மூழ்கினார் அறிவுமதி.

ஒரு காலகட்டத்தில் வெளிவந்து தமிழ் இலக்கியப் பரப்பில் பெரிதும் பேசப்பட்ட ‘அரங்கேற்றம்’ சிற்றிதழ் நினைவுகளைப் பசுமையுடன் பகிர்ந்தார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

நன்றியுரையில் நெகிழவைத்துவிட்டார் மணமகள் லாவண்யா. கடந்த எட்டு ஆண்டுகளாக நண்பர்களாகப் பழகி, காதலாகி கசிந்துருகி மணம் முடித்திருக்கிற காதல் கணவர் ஆப்ரகாமுக்கு முதல் நன்றியை தெரிவித்தார்.

அடுத்து தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் பேரன்பை வியந்தார்.

பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளைத் திருத்தி, நெறிப்படுத்தி, பேரன்பு காட்டி எப்படி வளர்க்கிறார்களோ, அப்படியே நானும் திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து வாழ்வேன் என்று உறுதியளித்தார்.

இதுவரை அப்பாவுக்கு நான் எதுவும் செய்ததில்லை. திருமணத்திற்குப் பிறகும் உதவி செய்வதற்கு சம்மதித்த அன்பான கணவரைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லும்போது உணர்ச்சியின் பெருக்கில் கண்கலங்கினார்.

அந்த கணத்தில் மகிழ்வுடன் திருமணத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் லாவண்யா.

வீட்டிற்குச் செல்லும்போது “வாங்க அங்கிள்…” என்று அழைத்து விட்டுச் சென்றுவிடும் அந்தப் பெண்ணா, இப்படிப் பேசுகிறார் என்று நினைத்து பெரும் ஆச்சரியத்தில் உறைந்துபோனேன்.

திருமண விழா ஒர் இலக்கிய விழாபோல இருந்தது. அங்கே நூல்களும் வெளியிடப்பட்டன. நண்பர்களைச் சந்தித்ததும் பேசியதும் உற்சாகமாக இருந்தது.

அண்ணனின் மகள் இல்லற வாழ்வில் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்க வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

– சுந்தரபுத்தன்

Comments (0)
Add Comment