தேர்தலில் அதிமுக சரிந்தது ஏன்?

தலைவர்கள், தொண்டர்களின் நேசமான பரிசீலனைக்கு!

அதிமுக தேர்தல் வரலாற்றில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், ஒரு மைல் கல்லாகும். அந்தத் தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் தேர்தலை சந்தித்தது அதிமுக.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக தனித்து களம் இறங்கியது. 37 தொகுதிகளில் வாகை சூடியது. கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய இரு தொகுதிகளை இழந்தது.

மொத்தம் 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 வாக்குகளைப் பெற்றது.

இது, பதிவான மொத்த வாக்குகளில் 44.34 சதவீதமாகும்.

அந்தத் தேர்தலில் தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது, அதிமுக.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது, அதிமுக.

அந்தத் தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார்.

மிகப்பெரும் சரிவு:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தேர்தலைச் சந்தித்தது அதிமுக.

தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 34 இடங்களில் போட்டியிட்டது.

ஆனால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை.

இன்னொரு பேரதிர்ச்சியையும் அதிமுக தொண்டர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. தென்சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக ‘டெபாசிட்’ இழந்தது. 10 இடங்களில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

கடந்த தேர்தலில் 31% வாக்குகளை பெற்ற அதிமுக, இந்தத் தேர்தலில் பெற்றது வெறும் 20%.

படுதோல்விக்கான காரணம் என்ன?

தோல்விக்கான பிரதான காரணம், கூட்டணி. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளை எடப்பாடி பழனிசாமி, இந்த முறை சேர்க்கத் தவறிவிட்டார்.

மாறாக திமுக, கடந்த முறை கூட்டணியில் இருந்த தோழமை கட்சிகளைத் தக்க வைத்திருந்ததோடு, பரவலாக வாக்கு வங்கி உள்ள கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும், கூட்டணியில் சேர்த்திருந்தார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக, பல்வேறு இடங்களில் அதிமுக வாக்கு வங்கியை விழுங்கியதால், 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை அதிமுக இழக்க நேரிட்டது.

இந்த முறை டிடிவி தினகரனுடன் சேர்த்து ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக வாக்கு வங்கியில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினார்.

தேனி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் அதிமுக ‘டெபாசிட்’ இழக்க இதுவே காரணம்.

தேர்தலில் போட்டியிடாமல், அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒதுங்கிக் கொண்டதோடு, தேர்தல் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தவில்லை. இது அதிமுகவின் படுதோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம்.

ஒரே ஒரு உதாரணம். கடந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், 1,09,745 ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்தார்.

ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெறும் 41, 393 ஓட்டுகள் மட்டுமே வாங்கியுள்ளார்.

அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதியில் அதிமுக வாங்கிய ஓட்டுகளில் பாதி ஓட்டுகளை கூட, மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் பெறவில்லை.

சட்டசபை, உள்ளாட்சி, மக்களவை என தொடர்ச்சியாக, அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியைத் தழுவி வரும் நிலையில், அந்தக் கட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

“மக்களவைத் தேர்தல் முடிவுகள், 2026-ம் ஆண்டு நடைபெறும், சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான படிப்பினை மற்றும் பாடம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தச் சமயத்தில் முக்கியமான ஒன்றை நினைவூட்ட வேண்டியிருக்கிறது

அ.தி.மு.க இயக்கத்தை எம்.ஜி.ஆர் துவக்கியதிலிருந்தே எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருக்கிறது

ஏன்? அ.தி.மு.க ஆட்சியே கலைக்கப்பட்டது அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

அ.தி.மு.க.வில் இருந்து கருத்து வேறுபாட்டால் எஸ்.டி.சோமசுந்தரம் சென்றபோது சற்றும் ஈகோ பார்க்காமல், அவருடைய வீட்டிற்கே நேரடியாகச் சென்று அரவணைத்த பண்பு கொண்டவர் தான்.எம்.ஜி.ஆர்.

தனது தொண்டர்களையும் என்றும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை.

இரட்டை இலைச் சின்னமே முடக்கப்பட்டது. திருமதி ஜானகி எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையால் பிளவுபட்டிருந்த அ.தி.மு.க ஒன்று சேர்ந்து வெற்றி கண்டது.

தாங்கள் பிரிந்திருப்பது எத்தகைய பலவீனத்தை இயக்கத்திற்கு ஏற்படுத்துகிறது? யாரைப் பலப்படுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள் அன்றைக்கு அ.தி.மு.க தலைமைப் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆரும், ஜானகி எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்.

அன்று கொண்டிருந்த அந்த உணர்வு இன்றைய அ.தி.மு.க தலைமைக்கு இருக்கிறதா?

தனித்தனி அணிகளை உருவாக்கிப் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைப் பகிர்வதால் இயக்கத்திற்கு எந்தப் பலனும் இல்லை.

தனிநபர்களை விட இயக்கம் பெரிது என்பதையும், இயக்கத்தின் வேராக இப்போதும் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிற யதார்த்தத்தை உணர்ந்தால் போதும், அ.இ.அ.தி.மு.க என்கிற இயக்கம் புத்துயிர்ப்போடு பலம் பெற்று வெற்றியைத் தொடும்.

இரட்டை இலை மீண்டும் பசுமையோடு துளிர்க்கும்.

அ.தி.மு.க.வின் ஜீவனான ஒவ்வொரு தொண்டரும் உணர்வதும், உணர்த்துவதும் இதைத் தான்.

– மு.மாடக்கண்ணு

admkdmdkdmkepsjayalalithaputhiya tamilagamsdpiஅதிமுகஎடப்பாடி பழனிசாமிஎஸ்டிபிஐதிமுகபுதிய தமிழகம்ஜெயலலிதா
Comments (0)
Add Comment