மத்தியிலும், மாநிலங்களில் கூட்டணி ஆட்சி என்பது இன்று சகஜமான ஒன்று. ஆனால், 1950-களில் கூட்டணி ஆட்சி என்பது யாரும் நினைத்துப் பார்த்திராத விஷயம்.
இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில், நாட்டில் காங்கிரஸ் கட்சி மட்டுமே வலிமையாக இருந்தது. மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆண்டது.
அந்தக் கட்சியின் சறுக்கல், கேரள மாநிலத்தில் இருந்து தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை அகற்றி விட்டு, கேரள மாநித்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அங்கு ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, காங்கிரஸ் அல்லாத முதல், முதலமைச்சர் ஆனார்.
அதன் பின்னர் நாட்டில் பல்வேறு கட்சிகள் வேர் விட்டன. கம்யூனிஸ்ட்கள் தமிழகம், ஆந்திரா, மேற்குவங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் வளர்ந்தார்கள். தமிழகத்தில் திமுக உருவானது. வடக்கே ஜன சங்கம் தழைத்தது.
கேரளத்தில் அதன் பின்னர் மாறி மாறி காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் ஆட்சியை பிடித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு காங்கிரசை அகற்றி விட்டு திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு இங்கே காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
ஆனாலும் மத்தியில் 77 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியை எந்த கட்சியாலும் தொட்டுப்பார்க்க முடியவில்லை. பிரதமர்கள் மாறினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியே நாட்டை ஆண்டது.
பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு ’மிசா’ என சுருக்கமாக அழைக்கப்படும் அவசர நிலையை பிரகடனம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு முதன் முறையாக சறுக்கலை ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் 77 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஜனதா என்ற புதிய கட்சியை உருவாக்கின. ஜெயப்பிரகாஷ் நாராயணன் இதன் பின்னணியில் இருந்தார்.
ஜனதா கட்சி 77 பொதுத்தேர்தலில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. காங்கிரஸ் அல்லாத முதல் ஆட்சி இந்தியாவில், அப்போதுதான் உதயமானது.
இந்தியாவில் கூட்டணி ஆட்சிக்கான பிள்ளையார் சுழியாக, ஜனதா ஆட்சி அமைந்தது. அந்தத் தேர்தலில் இந்திராவே தோற்றுப் போனார். அடுத்த பிரதமர் என வர்ணிக்கப்பட்ட இந்திரா மகன் சஞ்சய் காந்தியும் தோற்றார்.
வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முகவரி இல்லாமல் போனது. காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்றார்.
எனினும் பிரதமர் மொரார்ஜி தேசாய் 2 வருடம் 126 நாட்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தது. ’வானவில்’ கூட்டணியை உருவாக்கி இருந்த தலைவர்களின் யுத்தத்தால், மொரார்ஜியின் ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஜனதா கட்சியில் ஓர் அங்கமாக இருந்த மதசார்பற்ற ஜனதா கட்சியின் தலைவர் சரண்சிங் பிரதமர் ஆனார். இவரது அரசு 170 நாட்கள் மட்டுமே நீடித்தது.
1980 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வென்றது. இந்திரா காந்தி பிரதமர் ஆனார்.
இதன் பின் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. 1989 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தார்.
அவரது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி.பி. சிங், ராஜீவுடன் ஏற்பட்ட மோதலால் காங்கிரசில் இருந்து விலகினார். ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இவருடன், திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகள் சேர்ந்து தேசிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டணி அமைத்தன.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. பாஜக, இடதுசாரிகள் உள்ளிடோர் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் ஆனார்.
பிற்பட்டோருக்கு மத்திய அரசில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில், வி.பி.சிங் தீவிரமாக இருந்ததால், அவரது ஆட்சியை பாஜக கவிழ்த்தது.
வி.பி.சிங்குக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால், அவர் 343 நாட்களில் பதவி இழந்தார். பின்னர் காங்கிரஸ் ஆதரவைப் பெற்று, சமாஜ்வாதி ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகர் பிரதமர் ஆனார். அவரது ஆட்சியை 223 நாட்களில் காங்கிரஸ் கவிழ்த்தது.
இதனால், 1991 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை நாடு சந்தித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில், வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.
அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமரான நரசிம்மராவ், தனது முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்தார்.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக, தனிப்பெரும் கட்சியாக உருவானதால் வாஜ்பாய் பிரதமர் ஆனார்.
மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் பதவி இழந்தார்.
இதன் பின்னர், ஐக்கிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டணி உருவாகி, ஜனதா தளம் தலைவர் தேவகவுடாவுக்கு பிரதமர் யோகம் கிட்டியது.
இவர் 324 நாட்கள் பதவியில் இருந்தார்அவரை தொடர்ந்து, அதே கூட்டணி சார்பில் ஐ.கே.குஜ்ரால் 333 நாட்கள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சியையும் காங்கிரஸ் கவிழ்த்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையில் 13 கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற அணியை பாஜக தலைவர் வாஜ்பாய் அமைத்தார்.
அந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். 13 மாதங்கள் மட்டுமே நீடித்த இவரது ஆட்சிக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஒரு ஓட்டில் வாஜ்பாய் தோற்றுப்போனார்.
இதனால் 1999 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமரான வாஜ்பாய் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தார்.
நாடு முழுவதும், காங்கிரசின் செல்வாக்கு குறைந்ததால், அதன் பின்னர் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோடு, தோழமைக் கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.
2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அடுத்தடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்றது.
இருமுறையும் காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
2014 ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜகவின் மோடி பிரதமர் ஆனார். தோழமைக் கட்சிகளுக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தார்.
கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
ஆனாலும், சில கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பொறுப்பு அளித்தார் மோடி.
இந்த நிலையில் தான் இன்னும் 8 மாதங்களில் மக்களவைத் தேர்தலை சந்திக்க நாடு தயாராக உள்ளது.
இந்த முறையும் கூட்டணி ஆட்சி அமையுமா? மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவாரா? அல்லது எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ’இந்தியா’ கூட்டணி ஜெயிக்குமா? எட்டு மாதங்களுக்கு இது, மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கும்.
– பி.எம்.எம்.