தவெகவின் வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம்!

தமிழக அரசியலில் 2024 – 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான சாட்சியாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் சக்தியின் எழுச்சியும், அதன் வெற்றியில் இன்ஸ்டாகிராம் ஆற்றிய பங்கும் அரசியல் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரிய அரசியல் கட்சிகள் மேடைப் பேச்சுகள், போஸ்டர் சண்டைகள், தெருமுனை கூட்டங்கள் என்ற பழைய பாணி பிரச்சார உத்திகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில்,

ஒரு தனி உலகமாக இயங்கிக் கொண்டிருந்த ஜென்ஸீ தலைமுறையை இன்ஸ்டாகிராம் வாயிலாகக் குறிவைத்து வென்றெடுத்துள்ளது தவெக.

தமிழக அரசியலில் ஒரு புதிய கட்சி முளைத்து, அது குறுகிய காலத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பெரும் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டுகொண்டிருந்த தமிழக அரசியல் களத்தில், தமிழக வெற்றிக் கழகம் இதைச் சாத்தியமாக்கியுள்ளது.

இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான வெர்ச்சுவல் ஆயுதம்தான் இன்ஸ்டாகிராம்.

ஜென்ஸீ என்று அழைக்கப்படும் இன்றைய இளைஞர்களின் உலகத்தை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, அவர்களை அதீத அரசியல் ஆர்வம் மிக்கவர்களாக்கியதில் தவெக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இன்றைய 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள், அதாவது ஜென்ஸீ தலைமுறை, மற்ற தலைமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் செய்தித்தாள்களைப் படிப்பதில்லை, தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதில்லை. வாசிப்புப் பழக்கம் அறவே கிடையாது.

இவர்களுக்கான உலகம் ஸ்மார்ட்போன்களுக்குள் மட்டுமே சுருங்கியுள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் என்பது இவர்களைப் பொறுத்தவரை தனி உலகம்.

இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு எழுத்து வடிவிலான செய்திகளை விட காட்சி வாயிலான செய்திகளே அதிகம் பிடிக்கிறது.

அதிலும் இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் கலாச்சாரம் தலையெடுத்தப் பிறகு இது வேறு ஒரு பரிணாமத்தை அடைந்தது.

ஒரு நிமிட ரீல்ஸ் மூலமாக உலக நடப்புகளைப் புரிந்துகொள்ள முற்படும் இந்தத் தலைமுறையிடம், நீண்ட மேடைப் பேச்சுகள் எடுபடாது என்பதை தவெக மிகச் சரியாகக் கணித்தது.

இன்ஸ்டாகிராம் வெறும் புகைப்படங்களைப் பகிரும் தளமாக இருந்த காலம் போய், இப்போது அது ஒரு கருத்துருவாக்க கருவியாகவே மாறிவிட்டது.

இன்ஃப்ளூயன்ஸர்கள் என்ற வார்த்தையே கூட இன்ஸ்டாகிராமின் வருகைக்குப் பிறகே பிரபலம் அடைந்தது. அதற்கு முன் வெறுமனே யூடியூபர்கள் என்று பொதுவான வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக வலைதளம் என்ற பதத்துக்கு அடையாளமாக விளங்கிய ஃபேஸ்புக் தற்போது ஜென்ஸீ கிட்ஸ்களை பொறுத்தவரை, வயதானவர்கள் பயன்படுத்தும் தளமாகவும், எக்ஸ் என்பது அரசியல் விவாதங்களின் தளமாகவும் மாறிவிட்டது.

இன்ஸ்டாகிராம் மட்டுமே இளைஞர்களின் உணர்வுகளோடு இணைந்த தளமாக உள்ளது.

இங்குதான் தவெக-வின் ஐடி விங் மிக நுணுக்கமாக செயல்பட்டது. ஊர் முழுக்க ஒட்டப்படும் ஒரு சாதாரண அரசியல் போஸ்டரை விட, விஜய்யின் ஸ்டைலான புகைப்படங்கள், அவரது படங்களில் உள்ள குறியீடுகள் மற்றும் பின்னணி இசையுடன் கூடிய ஸ்லோ-மோஷன் ரீல்ஸ் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தை ஆக்கிரமித்தன.

இதன்மூலம் அரசியல் என்றாலே என்னவென்று அறியாத, அல்லது அரசியல்படுத்தப்படாத ஒரு தலைமுறைக்கு அது ஒரு வைப் செய்யும் களமாக மாறியது.

தமிழகத்தின் பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவையும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் அணுகுமுறை ‘டாப்-டவுன்’ முறையில் இருந்தது.

அதாவது, கட்சியின் தலைவர்களின் பதிவுகலை மக்கள் பார்க்க வேண்டும் என்ற மனநிலை.

இந்த கட்சிகள் இன்ஸ்டாகிராமை வெறும் செய்திகள், அறிக்கைகள் பகிரும் தளமாக மட்டுமே அணுகின என்பதை மறுக்க முடியாது.

ஆனால், த.வெ.க-வின் அணுகுமுறை இதற்கு முற்றிலும் நேரெதிரானது. இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான இன்ஃப்ளூயன்சர்கள் தாங்களாகவே தவெக-வுக்கும், விஜய்க்கும் ஆதரவாக ரீல்ஸ்களை உருவாக்கினர்.

ஆனால் பெரிய கட்சிகளோ இன்ஸ்டாகிராமை ஓர் அறிவிப்பு பலகையாக மட்டுமே பார்த்தனர். இளைஞர்களுக்கு ஈர்க்கும் ‘வைப்’களை உருவாக்க அவர்கள் தவறிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

உதாரணமாக, பெரிய கட்சிகளின் தலைவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியிலோ அல்லது கட்சிக் கூட்டங்களிலோ பங்கேற்கும்போது, அதை முழுநேர லைவ் வீடியோவாக மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்கும் கட்சிகள், அந்த தலைவர்களின் உரையில் இருக்கும் ‘ஷார்ப்’ ஆன அம்சங்களை ஜென்ஸீ இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ரீல்ஸ்களாகவும், மீம்களாகவும் பெரும்பாலும் வெளியிட தவறிவிட்டன.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் ஒரு செய்தி ஒருமுறை வைரலானால், அது லட்சக்கணக்கானோரை நிமிடங்களில் சென்றடையும்.

தவெக-வின் கொள்கைப் பாடல்கள் மற்றும் விஜய்யின் உரைகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அதற்கேற்ற ‘டிரெண்டிங்’ இசையுடன் இணைக்கப்பட்டன.

இது அந்த இளைஞர்களை அறியாமலேயே அவர்கள் மனதில் கட்சியின் அடையாளத்தைப் பதிய வைத்தது.

ஆயிரம் போஸ்டர்கள் செய்யமுடியாத வேலையை ஒரே ஒரு 30 வினாடி ரீல்ஸ் வீடியோ செய்து விடும் என்ற உளவியலை தவெக செவ்வனே பயன்படுத்திக் கொண்டது.

இதனால், அரசியலில் ஆர்வம் இல்லாத விஜய்யின் பல ரசிகர்கள், மெல்ல மெல்ல தொண்டர்களாக மாறினர்.

பல ஆண்டுகளாக சில நூறு வியூஸ்களுடன் காற்று வாங்கிக் கொண்டிருந்த ஏராளமான இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கூட, விஜய்யின் அரசியல் வருகையையும் இந்த அல்காரிதத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு லட்சங்களில் வியூஸ் பார்க்கத் தொடங்கினர்.

சமூக வலைதள லைக்ஸ், வியூஸ் எல்லாம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு நடந்து முடிந்த இந்த தேர்தல் உறைக்கும்படி பதிலளித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் இயங்கும் ஜென்ஸீ உலகம் ஒரு தனித் தீவு போலத் தெரிந்தாலும், அதன் தாக்கம் இந்த தேர்தலில் பலமாக எதிரொலித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் இது மேலும் அதிகமாகும்.

வீட்டில் இருக்கும் பெற்றோர்களிடம் “இந்த முறை விஜய்க்கு ஓட்டு போடுங்கள்” என்று வற்புறுத்தும் சக்தியாக இளைஞர்கள் மாறினர்.

இளைஞர்கள் மட்டுமின்றி ஓட்டு போடும் வயதையே அடையாத சிறுவர், சிறுமியர்களும் விஜய்க்காக தங்கள் வீட்டு பெரியவர்களிடம் மன்றாடும் வீடியோக்களை யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

சமூக வலைதளங்களில் எழுந்த இந்த அலையை சாதாரணமாக கருதிய மற்ற கட்சிகளுக்கு, தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற நியதிப்படி, இந்த தேர்தலில் இன்ஸ்டாகிராம் ஏற்படுத்திய தாக்கம், தவெக-வை வெறும் சினிமா ரசிகர்களின் கட்சியாக இல்லாமல், ஒரு தீவிரமான அரசியல் இயக்கமாக மாற்றி இன்று தனிப்பெரும் வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது.

பாரம்பரிய அரசியலில் பணபலம், சாதிப் பின்புலம் போன்றவை முக்கியமாக இருந்தன. ஆனால், தவெக-வின் வெற்றியில் ‘அல்காரிதம்’ பலம் முக்கியப் பங்கு வகித்தது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்காது.

இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் ஒருவர் ஒருமுறை விஜய்யின் வீடியோவைப் பார்த்தால், இன்ஸ்டாகிராம் அல்காரிதம் அவருக்குத் தொடர்ந்து தவெக தொடர்பான செய்திகளையே காட்டும்.

இது அக்கட்சிக்கு மட்டுமின்று எந்தக் கட்சிக்கும் பொருந்தும். ஆனால், இதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது தவெக மட்டுமே என்பதுதான் நிதர்சனம்.

தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றி, அரசியலில் இனி ஜென்ஸீ தலைமுறையினர் குடியிருக்கும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் புறக்கணிக்க முடியாது என்பதை பெரிய கட்சிகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

அவர்களின் தனி உலகத்தைத் தங்களின் வசமாக்கிய தவெக, மற்ற கட்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய பாடத்தை சொல்லிக் கொடுத்துள்ளது.

சமூக வலைதளங்களை வெறுமனே அரசியல் விவாதங்களுக்கும், நீண்ட அறிக்கைகளை வெளியிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தாமல் இனிவரும் காலங்களில் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே பெரிய கட்சிகளால் இளைஞர் வாக்குகளை வசப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment