மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.8 கோடி வசூல்!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் ரூ.8 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது என்றும்

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது எனக் கூறியுள்ள சென்னை காவல்துறை,

அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை என்றும் ஆனால் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை என்றும் கூறியுள்ளது.

இதுவரை 7,943 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், எனவே இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து,

கடந்த 01.04.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 727 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 75,13,000/- விதி மீறுபவர்களால் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் நிலுவையில் இருந்த 8,013 குடிபோதை வழக்குகள், அழைப்பு மையங்கள் மூலம் தீர்க்கப்பட்டு, ரூ.8,29,10,000/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது என்றும் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதோடு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும்,

ஏற்கனவே இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 361 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment