மார்ச் – 3 உலக வன உயிரிகள் தினம்:
‘வாழு.. வாழவிடு’ என்பது சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல, நமக்கும் வன விலங்குகளுக்கும் கூட பொருந்தும்.
அதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை உணர்த்தவே, மார்ச் 3ஆம் தேதி ’சர்வதேச வன உயிரினகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகமயமாதல் காரணமாக முதலில் அழிக்கப்படுவது மரங்கள் நிறைந்த வனப்பகுதிகளே. இதன் பாதிப்பாக வனப்பரப்பு மட்டும் குறைந்து வருவது இல்லை.
அதில் இருக்கும் வன உயிரினங்கள், தாரவரங்கள், மரங்கள், மூலிகைகள், அதனைச் சார்ந்து வாழும் மக்கள் மற்றும் பல உயிர்கள் பாதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக யானை, எருமை உள்ளிட்ட உயிரினங்கள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வந்து பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. காட்டில் வாழும் உயிரினங்களின் பாதிப்பு, மனித வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
அங்கு வாழும் உயிரினப் பாதிப்பு மற்றும் அழிவு என்பது சுற்றுசூழலில் பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கையில் மாற்றம் ஏற்படுவது மனித உயிர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.
எனவே வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், அவற்றுக்கான உணவு, பாதுகாப்பு, வாழ்விடத்தை உறுதி செய்யும் நோக்கத்திலும் ஆண்டுதோறும் மார்ச் 3 ஆம் தேதி சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2013 – ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அன்று ஐ.நா. பொதுச்சபையில் இந்த தீர்மானம் உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தில் 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் நாள் சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஏன் பாதுகாக்க வேண்டும்?
கடந்த 50 வருடங்களில் வன உயிரினங்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்காக குறைந்துள்ளது என உலக வன உயிர் நிதியத்தின் முக்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதர்களால் இயற்கை அழிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது மனித இனத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நாம் வாழ்வதற்கு காடுகளை அழிப்பதாலும், கடலில் அதிகப்படியாக மீன் பிடித்தல், சட்டத்துக்கு புறம்பாக கடல் வாழ் உயிரினங்களை அழித்தல் போன்ற காரணங்களால் வன உயிர்கள் அழிந்து கொண்டு வருகின்றன என உலக வன உயிர் நிதியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1970 ஆம் ஆண்டிலிருந்து 27,150 வகையான விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் கடல் வாழ் உயிரிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 68 சதவிகிதமாக குறைந்துவிட்டதாக
சர்வதேச ‘இயற்கைப் பாதுகாப்பு மையம்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் 12-ஆவது மிகப் பெரிய பல்லுயிர் பெருக்க நாடு இந்தியாதான். இங்கு 8 சதவீத வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த 2014-இல் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அளவில் 4,850 வன விலங்குகளும், 2,119 தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் 40 சதவீதமும், விலங்குகள் 25 சதவீதமும், தாவரங்கள் 34 சதவீதமும், பறவைகள் 14 சதவீதமும், சுறா உள்ளிட்ட மீன் இனங்கள் 31 சதவீதமும், பவளப் பாறைகள் 33 சதவீதமும் அழிவின் விளிம்பில் உள்ளன.
இது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ள மொத்த வன விலங்குகளின் எண்ணிக்கையில் 27 சதவீதம் ஆகும்!
இயற்கையின் உணவுச் சங்கிலியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பாறு கழுகு என்று அழைக்கப்படும் பினந்தின்னி கழுகு வகைகள் உலக அளவில் 99 சதவீதம் அழிந்து விட்டன.
இந்திய அளவில் புலி, சிறுத்தை, நரி, தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு ஆகியவையும் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
வனங்கள் அழிப்பு, மருந்துகளுக்காக அதிக அளவில் வன விலங்குகள் கொல்லப்படுவது போன்றவற்றால் வன விலங்குகள் அழிந்து வருகின்றன.
வன உயிர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம் மற்றும் சரிவானது இயற்கைக்கு மனித குலத்தால் ஏற்படும் அழிவின் அடையாளம் என லண்டன் விலங்கியல் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் மனிதர்களின் இந்த போக்கு மாறவில்லை என்றால், வன உயிர்களின் எண்ணிக்கை குறைந்து அழிவின் விளிம்பிற்கு செல்லும், மேலும் நாம் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பில் மாற்றம் ஏட்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று இயற்கையும், வன உயிரும் எவ்வாறு பிணைந்திருக்கிறது என்பதை நமக்கு காட்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நாம் இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதனால் காடுகள் மற்றும் வனவாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் இழப்பை நாம் சரிசெய்ய முடியும்.
இயற்கை என்பது மனித உயிர்கள் மட்டும் அல்லாது பிற உயிர்களை ஒன்றோடு ஒன்று சார்ந்தவை.
வனம் அழிந்தால், வன விலங்குகளும் அழியும் உணவுச் சுழற்சி பாதிக்கப்படும். தவிர மழை குறையும். பஞ்சம் ஏற்பட்டு மனித குலமும் அழியும்.
தவிர திடீரென இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட, இந்த வன அழிப்பும் முக்கிய காரணமாகிறது.
காடுகளை அழிக்காமல், கடல்களை மாசுபடுத்தாமலும், வன உயிரிகளை சுயநலத்திற்காக அழிக்காமல் இருந்தால் இயற்கை நம்மை வாழவைக்கும். அதற்கு எதிராக செயல்பட்டால் அது நம்மை அழித்துவிடும் என்பதில் மாற்றம் இல்லை.
எனவே உலக வன உயிரிகள் தினமான இந்த நாளில் இருந்தாவது இயற்கையை அப்படியே ஏற்று கொண்டு வாழ்வதாக உறுதி ஏற்போம். நம் உயிர் போன்றே பிற உயிரினத்தைக் காற்போம்.
-யாழினி சோமு
03.03.2022 10 : 50 A.M