மங்கும் மக்களாட்சி!

டாக்டர் க.பழனித்துரை

உலகம் முழுவதும் மக்களாட்சிச் செயல்பாடுகள் தாழ்நிலையை நோக்கிச் செல்கின்றன என்ற கருதது முன் வைக்கப்பட்டு ஆராய்ச்சிப் பெருமன்றல்களில் விவாதங்கள் நடைபெற்று கட்டுரைகளும் அறிக்கைகளும் வெளிவரத் தொடங்கி விட்டன.

இந்த விவாதங்களை வைப்பது அரசியல்வாதிகள் அல்ல, உலகளவில் தலைசிறந்த மக்களாட்சிக்கான ஆராய்ச்சி அறிஞர்கள். இவர்கள் விவாதங்களை வைக்கும்போது அதற்கான முழுத்தரவுகளையும் முன் வைத்து விளக்கிக் கொண்டுள்ளனர்.

இப்படிப்பட்ட விவாதங்கள் பொதுவெளியில் வரும்போதெல்லாம் இந்தியாவின் நிலை என்ன என்று தரவுகளைப் பார்ப்பது என் வழக்கம். பொதுவாக இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்த இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவு நிதி ஆதாரம் தேவை.

சிறிய நிறுவனங்களோ பல்கலைக் கழகங்களோ அவைகளைச் செய்ய இயலாது. இதற்கான நிதி உதவியையும் அரசு வழங்கிடாது.

இருந்தும் மக்களாட்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் உலகளாவிய நிலையில் செயல்படும் பல்வேறு நிதி நிறுவனங்கள் தரும் நிதியில் தொடர்ந்து ஆய்வுகள் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வுகள் தரும் தரவுகளிலிருந்து தான் ஒரு நாட்டில் எப்படிப்பட்ட மக்களாட்சி செயல்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

எப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வு நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் பல ஆய்வாளர்கள் மக்களிடம் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களை வைத்து அலசி ஆராய்ந்து மக்களாட்சியின் போக்கினை ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் விவரிப்பார்கள்.

அந்த விளக்கங்கள் நம் மக்களாட்சி அமைப்புக்களை சரி செய்து கொள்வதற்கும் சீர்திருத்திக் கொள்வதற்கும் பேருதவியாக இருக்கின்றன.

தற்போது ஒரு விவாதம் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் களத்தில் நடைபெற்று வருகிறது.

அதாவது ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது, அந்தப் பட்டியல் முழுவதும் அதிக அளவில் குற்றப் பின்னணியுடையவர்களையே தங்களுடைய வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அந்தக் கட்சி என்பதுதான் அந்த விவாதம்.

இந்த போக்கைத்தான் அறிவுஜீவிகள் மக்களாட்சியின் வீழ்ச்சி என்றும், மக்களாட்சியை தகர்க்கும் பணியை நம் அரசியல் கட்சிகளே செய்கின்றன என்பதையும் விவாதத்திற்கு கொண்டு வருகின்றனர்.

ஏனென்றால் மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் மக்களாட்சியை ஆழப்படுத்தும் மற்றும் அகலப்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு அரசியல் கட்சிகளிடம்தான் உள்ளது.

ஒரு நாட்டில் மக்களாட்சி என்பது எப்போது வலுப்படும் என்றால் தேர்தல் நடத்துவதால் மட்டுமேயல்ல, பொதுமக்களின் நம்பிக்கையை அரசு இயந்திரங்களும் அரசியல் அமைப்புக்களும் தங்கள் செயல்பாடுகள் மூலம் பெற்றிருக்கும்போது மட்டும்தான் என்ற புரிதலுடன் அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும்.

மக்களாட்சிமுறை வளர்ந்து வந்து இன்று தேர்தலும் அதற்கான கட்சி அரசியலும் பிரதான இடத்தை அடைந்துள்ளது.

ஆனால் இந்த முறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வினை நோக்கி நம் அரசியல் நகராத நிலையில், மக்கள் நம்பிக்கையை அரசு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் பெற்றிருப்பது என்பது மிகவும் இன்றியமையாததாகும்.

எந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையை அரசு இயந்திரமும் அரசியல் கட்சிகளும் பெறுகின்றனவோ அந்த அளவுக்கு மக்களாட்சி என்பது அந்த நாட்டில் வலுப்பெற்று இருப்பதாக நாம் அவதானிக்க முடியும்.

மக்களின் நம்பிக்கையை அரசு இயந்திரம் எந்த அளவுக்கு பெற்றுள்ளது என்பதற்கு பொதுமக்களின் கருத்தறியும் கள ஆய்வு நாடுகளில் நடத்தப்படுவது உண்டு.

மேற்கத்திய நாடுகளில் அது மிக எளிது, ஏனென்றால் மக்கள் தொகை குறைவு, நாடுகளும் எல்லைப் பரப்பில் சிறிய நாடுகள். ஆனால் இந்தியாவில் நடத்துவது என்பது மிகப்பெரிய சவால்கள் நிறைந்த பணி.

இருந்தும் இந்தியாவிலும் பெருமளவு நிதியினை செலவு செய்து அப்படிப்பட்ட ஆய்வுகளை செய்து உண்மையை தெரிவித்து வருகின்றன ஆராய்ச்சி நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்கள்தான் இந்திய மக்களாட்சி எப்படி செயல்படுகிறது, எந்த அடித்தளத்தில் செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்து காட்டுகின்றன.

இந்த மக்கள் கருத்தறியும் கள ஆய்வுகள் இந்தியாவில் நான்கு முறை நடைபெற்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதல் சுற்று ஆய்வினை புதுடெல்லியில் அமைந்துள்ள சி.எஸ்.டி.எஸ் என்ற நிறுவனம் 1971 மற்றும் 1996 ஆண்டுகளில் நடத்தின. இந்த இரண்டு ஆய்வுக்கும் இடைவெளி 25 வருடங்கள்.

அடுத்த சுற்று கள ஆய்வினை என்.சி.இ.ஏ.ஆர் என்ற நிறுவனம் 2005 மற்றும் 2012 ஆண்டுகளில் நடத்தின. இந்த இரண்டு ஆய்வுக்கும் இடைவெளி 7 ஆண்டுகள்தான்.

இந்த நான்கு முறை நடந்த கள ஆய்வு சொல்லும் செய்தியை கூர்ந்து கவனித்தால் மக்களாட்சியில் நாம் எங்குள்ளோம் என்பது நமக்குத் தெரிந்துவிடும்.

இந்த ஆய்வு அறிக்கைகளை நம் அரசும், அரசியல் கட்சிகளும், பொதுக் கருத்தாளர்களும் எந்த அளவுக்கு கவனமாக முக்கியத்துவம் கருதி எடுத்துக் கொண்டு சீர்திருத்திக் கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு நம் மக்களாட்சி வலுப்பெறும். 1971ல் 48% மக்கள்தான் தங்களால் அரசியலை மாற்ற முடியும் என்று கூறினார்கள்.

ஆனால் 1996ல் 60% மக்கள் எங்கள் வாக்குககளால் ஆட்சியை மாற்றிடமுடியும் என்று நம்பி கருத்துக் கூறினார்கள்.

அதேபோல் 60% மக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.

61% மக்கள் அரசியல் கட்சிகள் மிக முக்கியமான பங்களிப்பை மக்களாட்சியில் செய்கின்றன என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

இதில் மிக முக்கியமாக இந்த 61 சதவிகிதத்தில் பெரும்பான்மை மக்கள் ஏழைகள். ஏழைகளுக்குத் தான் இந்த மக்களாட்சியில் அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதை இந்த ஆய்வு கொண்டு வந்தது.

இந்தக் கருத்துக்கள் மக்களாட்சிக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தன. அதே நேரத்தில் 63% மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏழைகளின் பிரச்சினைகளில் ஆழ்ந்து செயல்படுவதில்லை என கருத்தினைக் கொண்டிருந்தனர்.

22% மக்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் முறையாக செயல்படுகின்றனர் என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

மக்களின் இந்தக் கருத்துக்களை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது. 1971ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி 27% மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அந்த எண்ணிக்கை 27%லிருந்து குறைந்து 1996 ஆம் ஆண்டு 23% வந்ததுதான் அதிர்ச்சித் தகவலாக பார்க்கப்பட்டது. 57% மக்கள் காவல்துறையின்மீது நம்பிக்கை இழந்தவர்களாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அடுத்து 42% மக்கள் அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கையற்றவர்களாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் 75% மக்கள் தாங்கள் நிதித்துறையையும், தேர்தல் ஆணையத்தையும் நம்புவதாக கருத்துத் தெரிவித்திருந்தனர். 73% மக்கள் நாட்டுக்கு ஒரு வலுவான தலைவர் தேவை என கருத்தை பதிவு செய்துள்ளனர் அந்த ஆய்வின் மூலம்.

2005 மற்றும் 2012 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு கொண்டு வந்துள்ள செய்திகள் மக்களாட்சிக்கு அதிர்ச்சி தருபவைகள்.

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து உச்சம் தொட்டபோதும் மக்களின் நம்பிக்கையை அரசு இயந்திரங்கள் இழந்துள்ளதை காண்பிக்கிறது இந்த அறிக்கையில்.

ஏழை மக்களின் நம்பிக்கை குறைவதற்குக் காரணம், அரசால் தங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் மேம்பாடுத் தாக்கத்தை ஏற்படுத்தமுடியவில்லை என்பதால்தான்.

அதே நேரத்தில் இந்த அரசாங்கத்தால் பலன் பெற்றவர்கள் அரசு இயந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது. ஏன் உங்கள் நம்பிக்கை அரசு இயந்திரத்தின் மீது குறைகிறது என்று கேட்டபோது, அதற்கான காரணங்களையும் பொதுமக்கள் அதில் பட்டியலிட்டுள்ளனர்.

அவை, இன்றைய அரசியலில் எந்த கொள்கையும் கிடையாது, எங்கும் ஊழல் தாண்டவம் ஆடுகிறது, பணக்காரர்களுடன் அரசியல் கட்சிகளும், அரசும் உறவாடி அவர்களுக்கு செயல்படுகிறது.

இதையும் தாண்டி பெருங்குற்றவாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக்க கட்சிக்குள் கொண்டு வந்துவிட்டனர் என்று பட்டியலிட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் 2012 ஆம் ஆண்டு அந்த நம்பிக்கையை இழந்துள்ளனர்.

பொருளாதாரம் வளர்ந்தபோது ஊழலும் உயர்ந்தது என்று கருத்தை தெரிவித்திருந்தனர்.

யார் யாரெல்லாம் அந்தக் காலக்கட்டத்தில் தங்கள் செலவுகளுக்கு மேல் வருமானம் பெற்றார்களோ அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

படித்த மத்திய தரவர்க்கம் அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

மக்கள் நம்பிக்கையை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அரசு இயந்திரமும் இழப்பதற்கான காரணமாகக் கூறுவது, அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களை ஐக்கியமாக்கும் போக்கு.

2004ல் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 24% பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். 2009 ஆண்டு அது வளர்ந்து 30 சதவீதமானது 2014ல் அந்த எண்ணிக்கை மேலும் வளர்ந்து 34% தொட்டது. 2019 ஆம் ஆண்டு அது 43 சதவிகிதமாக மாறி உச்சத்தைத் தொட்டது.

இதன் விளைவு என்பது கொடிய குற்றங்கள் செய்வோர் அரசியலுக்குள் பாதுகாப்புத் தேடி வருவது மட்டுமல்ல அரசியலையே குற்றப்பின்னணி கொண்டதாக மாற்றி இருக்கிறது.

இந்த நிலை அரசியலை குற்றப் பின்னணி கொண்டவர்கள் கைக்கு செல்ல வைத்தது என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைத்தான் இந்த ஆய்வில் மக்கள் எண்ணங்களாக வந்திருக்கின்றன.

தற்போது 29% தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் கொடிய குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதை மக்களாட்சிக்கான சீர்திருத்த அமைப்புக்களை நடத்துபவர்கள் அறிக்கைகளாக வெளியிட்டு அரசியல் கட்சிகளை இந்த நோயிலிருந்து விடுபட எச்சரிக்கின்றனர்.

இதில் பாரதிய ஜனதாக் கட்சி 39% காங்கிரஸ் 56% என்ற அளவில் குற்றப் பின்னணி கொண்ட பிரதிநிதிகள் அமைப்புக்களுக்குள் இருக்கின்றனர்.

தேர்தல் நடக்கலாம், வெற்றி பெறலாம் ஆட்சி அமைக்கலாம், ஆனால் மக்கள் அரசு இயந்திரத்தின் மீதும், அரசியல் அமைப்புகளின் மீதும் நம்பிக்கையை இழந்த வண்ணம் உள்ளனர் என்பதை கணக்கில் கொள்ளாமல் செயல்படுவோமேயானால் இதன் மோசமான விளைவுகளை நம் எதிர்காலச் சந்ததியினர் சந்திக்க வேண்டியிருக்கும்.

குற்றப்பின்னணி கொண்டவர்களும் ஊழல் பேர்வழிகளையும் வைத்து அரசியல் நடத்தும்போது மக்கள் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை, மக்களாட்சியையே தாழ்நிலைக்கு எடுத்துச் செல்கின்றோம் என்பதுதான் நாம் பார்க்கும் இன்றைய மக்களாட்சியின் எதார்த்த நிலை.

இந்த மங்கிய சூழலில்தான் நம் மக்களாட்சி நடைபெற்று வருகிறது என்பதை இந்த ஆய்வுத் தரவுகள் கொண்டுவந்து தந்துள்ளன.

இதனைப் புரிந்து நம் அரசியல் கட்சிகளும் அரசு இயந்திரமும் செயல்பட வேண்டும்.

இல்லையேல் நம் மக்களாட்சி நீர்த்துப் போய்விடும் என்பதை புரிந்து நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். அதற்கான விவாதம் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதுதான் நம் இன்றைய தேவை.

நன்றி: தினமணி

03.03.2022  1 : 30 P.M

Comments (0)
Add Comment