பழந்தமிழ்க் கல்வெட்டுகளைப் படியெடுத்து நூலாக்கிய அறிஞர்!

தமிழர் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டவர் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018).

****

தமிழகத்தில் திராவிடம் என்ற கருத்தியலின் ஊடே தமிழறிஞர்கள் மத்தியில் தமிழ், இனம், மொழி, பண்பாடு என்ற குரலும் உரக்க ஒலித்தன.

ஆனால், இவ்வுரத்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.

மாறாக, கே.வி.சுப்பிரமணிய அய்யர், டி.என்.சுப்ரமணியன், டி.வி.மகாலிங்கம் போன்றவர்களே சாதித்தனர்.

இவ்வரிசையில்தான் ஐராவதம் மகாதேவன் இடம்பெறுகிறார்.

இவரும், அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி போன்று கல்வி புலத்திற்கு அப்பாற்பட்டு இயங்கிய தன்னியல்பான ஆய்வாளர்.

ஐராவதம் மகாதேவனின் குறிப்பிடப்பட்ட கண்டுபிடிப்பு 1965 இல் மொழியினை முன்னிறுத்தி ஒரு தழல் போல் தமிழகத்தில் போராட்டம் கொதித்துக் கொண்டிருந்தபோது சேரர் அரசகுலத்து மூன்று தலைமுறை மன்னர்களின் பெயர்களைத் தொடர்ந்து பதித்துள்ள புகளூர் கல்வெட்டினை முழுமையாகப் படித்து வெளியிட்டதாகும்.

இக்கல்வெட்டின் மன்னர் பெயர்கள் பதிற்றுப்பத்து இலக்கியத்தின் சேரர் மன்னர்களுடன் ஒப்பிடப்பட்டது தமிழர் வரலாற்றில் ஒரு புதிய கண்டுபிடிப்பு.

பழந்தமிழ்க் கல்வெட்டுகள் என்ற ஆய்வு நூலினை உருவாக்குதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் அதனை வெளியிட்டதும் தமிழ் வரலாற்றினை உலக வரலாற்றில் ஒரு கல்வெட்டாகப் பொறித்துள்ளது.

இந்நூலிற்கான ஆய்வுத் திட்டத்திற்கு அப்போது அவரைவிட அதிக வயது இளையவர்களான அதே நேரத்தில் பிராமி கல்வெட்டுகளைப் படித்தறிந்து பொருள் சொல்வதில் துறைபோகிய அறிஞர்களான

திருவாளர்கள் சு.இராஜகோபால், சொ.சாந்தலிங்கம், வெ.வேதாசலம், சு.இராஜவேலு, அளக்குடி. சீதாராமன் போன்றோர் பெரிதும் துணை நின்றனர்.

வயது பேதமின்றி சமமாக அவர்களுடன் அமர்ந்து வாதிட்டு தம் ஐயங்களை சரிசெய்து கொள்வார்.

சிறு சிறு சந்தேகங்களையும் மிகவும் தெளிவாக்கிக்கொள்வார்.

மட்கலத் துண்டுகளிலுள்ள பழந்தமிழ் கீறல் (இது அவர் சொல்) சொற்களின் வரலாற்றுத் தன்மையினை மண்ணடுக்கு-காலத்தின் பின்புலத்தில் உறுதி செய்துகொள்ளப் பேராசிரியர் கா.ராஜன் அவர்களிடம் உரையாடுவார்.

கருத்தியல் தொடர்பானவற்றைப் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களிடம் கலந்துகொள்வார்.

ஆனால், இவர்கள் முன்வைக்கும் மாற்றுக் கருத்துகளை மெல்லிய புன்னகையுடனோ, பலத்த சிரிப்புடனோ மறைத்துக் கொள்வார் என்று அறிந்திருக்கிறேன்.

இவருடைய நூல் வெளிவந்தவுடன் பழந் தமிழிலக்கியத்தின் கால அடுக்குகள் மாற்றப்பட வேண்டுமென்ற தேவையை பேரா.கார்த்திகேசு சிவத்தம்பி வலியுறுத்தினார்.

மேலும் சிலர் சிறப்புக் கட்டுரைகளை மொழியியல் பின்புலத்தில் வெளியிட்டனர்.

இவர் நூலிற்கான கள ஆய்வில் கல்வெட்டுகளைப் படியெடுக்கையில் கல்வெட்டுக் குழிவுகளின் மேல் வேதி வர்ணம்பூசி வாசித்தது ஆய்வுமுறையில் செய்யப்பட்ட பெருந்தவறு.

தவறான முன்னுதாரணம். அப்புகைப்படத்தினை தமிழ் இந்து வெளியிட்டிருந்தது. பிறகு, ஒருசில இளந்தலைமுறையினரும் இதனைச் செய்தனர்.

உ.வே.சா. அவர்கள் பெரும்பாலான சங்க இலக்கியத்தினை சுவடிகளில் இருந்து நூல் வடிவாக்கித் தந்தார்; ஐராவதம் மகாதேவன் அவர்கள் பாறைகளின் மேல் வரி வடிவமாயிருந்த பழந்தமிழ்க் கல்வெட்டுகளைப் படியெடுத்து நூலாக்கித் தந்தார்.

இந்நூல் வாயிலாக தமிழிலக்கியத்தின் காலக்கணிப்பிற்கு பழந்தமிழ்க் கல்வெட்டுகளின் உறுதித் தன்மை முன்வைக்கப்பட்டதை ஆய்வாளர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும்.

அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது: ஆர்வம், விடாமுயற்சி, சுறுசுறுப்பு, கலந்துரையாடல், கருத்து மோதலை வன்மமாக வளர்க்காமை, கலகலப்பாக இயங்குதல், சான்றுகளை நேரிடையாகச் சேகரித்தல், துறைபோகிய அறிஞரிடையே உரையாடுதல், அதற்காகப் பயணித்தல், திட்டமிட்ட ஆய்வுரை.

– கி.இரா.சங்கரன்

  • நன்றி : கீற்று இதழ்
Comments (0)
Add Comment