இன்றுவரை விவாதத்திற்கு உரிய பேசுபொருளாக மாறியிருக்கும் கோவை பெரியார் அறிவுலக நூலகம் தொடர்பான சர்ச்சையில் பல்வேறு பதிப்பாளர்கள் மீது சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
சில பதிப்பகங்கள் அரசு நியமித்த நூலக ஆணைக்குழுவிடம் நெருக்கம் பாராட்டி தங்கள் பதிப்பக நூல்களை அதிக விலைக்கு விற்று லாபத்தை ஈட்டியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் மற்றொருபுறம் இருக்கிறது.
பெருமாள் முருகனைத் தொடர்ந்து அழகிய பெரியவன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் தங்களுடைய அனுபவங்களை முன்வைத்து வருகிறார்கள்.
லட்சக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டுபவர்கள் முன்வைக்கிற முதன்மையான விஷயம் – ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தப்பும் தவறும், திரிபுமாக நூல்கள் அவசர கதியில் தயாரிக்கப்பட்டு, பெரியார், கலைஞர் பெயர்களில் அமைந்த நூலகங்களுக்கு வினியோகிக்கப்பட்டிருக்கின்றன என்பது தான்.
தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளரான மோகன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் தனது பதிப்பகங்கள் மூலமாக அரசு நூலகங்களுக்கு தொடர்ந்து புத்தகங்களை கொடுத்து வந்ததாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
அவரே திமுக ஆட்சிக் காலத்தில் தான் தனக்கு நூலக ஆணை வழங்கப்பட்டு, அதன் பேரில் தான் நூல்களை வழங்கியதாகவும் குறிப்பிட்டுக்கிறார்.
இதையொட்டி பல்வேறு வலைதளங்களில் சோ.தர்மன், ஜெயமோகன் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
அத்தகைய கருத்தை நீதிபதி ஒருவரே நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறார். இவ்வளவு தூரம் பேசப்படும் இந்த நூலக விவகாரத்தில் பதிப்பாளர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்ப வேண்டியிருக்கிறது.
யாரோ முகம் தெரியாதவர்களின் பெயர்களில் போலியாக நூல்கள் தயாரிக்கப்பட்டு, அவை நூலகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கும்போது தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தரமான நூல்களை எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது.
இன்றுவரை பல நவீன தொழில்நுட்பங்கள் குறித்த நூல்களையும் இலக்கியத்தரமான நூல்களையும் கடினமாக உழைத்து பல்வேறு ஆவணங்களை முன்வைத்து எழுதப்பட்ட தொன்மம் சார்ந்த நூல்களையும் எழுதியவர்கள் என்று பெரிய பட்டியலே இருக்கிறது.
தற்போது பதிப்பகத்தைப் பற்றி மட்டும் பேசியவர்கள் அத்தகைய பதிப்பகங்கள் இயங்குவதற்கு ஆதாரமாக அமைந்த எழுத்தாளர்களின் நிலை குறித்து விவாதித்திருக்கிறார்களா?
தமிழ்நாடு முழுக்க நடத்தப்படும் பல்வேறு புத்தகக் காட்சிகள் மூலமாகவும் நூலக ஆணைக் குழுவுக்கு அளிப்பதன் மூலமாகவும் பதிப்பாளர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் எத்தனை சதவீதம் அந்த நூல்களை எழுதிய ‘அசலான’ எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் முன்பு விக்ரமன் தலைமையில் இயங்கி வந்தது. அதுபோலவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் இருந்தாலும் எழுத்தாளர்களுக்கு இயல்பாக பதிப்பகங்கள் கொடுக்க வேண்டிய ராயல்டி தொகை கிடைக்க வேண்டும் என்பதே எந்த அமைப்புகளும் பெரிதாக வலியுறுத்தவில்லை.
எழுத்தாளர்களும் பொதுவெளியில் ராயல்டி கிடைக்காதது பற்றி புலம்புவதைத் தவிர அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லை.
பல மூத்த எழுத்தாளர்கள் முதற்கொண்டு இன்றுவரை தொடர்ந்து எழுதுகிற பல எழுத்தாளர்களும் பொதுவான இயல்பு இப்படித் தான் இருக்கிறது.
இந்தச் சூழலிலும் உரிய ராயல்டியைத் தந்து எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் மதிப்பளிக்கும் பதிப்பகங்களும் இங்கு இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
மூத்த எழுத்தாளரான ஜெயகாந்தன் தனது நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் உரிமையைப் பெற்ற மீனாட்சி புத்தக நிலையத்தைப் பற்றி எப்போதுமே உயர்வாகவே பேசியிருக்கிறார்.
கரிசல் எழுத்தாளாரான கி.ராஜ நாராயணன் தனது படைப்புகளை பதிப்பகங்கள் முறைகேடாக பயன்படுத்தி உரிய ராயல்டி தராத நிலையில் அந்த பதிப்பகங்கள் மீது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் தரமான நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு உரிய மதிப்பும் உரிய ராயல்டி தொகையும் கிடைக்காத நிலையில், ஏ.ஐ தொழில்நுட்பத்தை வைத்து போலியான நூல்களை தயாரித்து அதை நூலகங்களுக்கு அளித்து அவற்றிற்கு மதிப்பும் பணமும் அளிக்கப்படுகிறது என்றால் இதுவா நாம் எழுத்தாளர்களுக்கு அளிக்கும் கவுரவம்?
தற்போதைய சூழலில் பதிப்பகங்கள் குறித்து ஆவேசமான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறவர்கள் இனியாவது எழுத்தாளர்களுக்கு அவர்களின் எழுத்தின் மூலம் உரிய மதிப்பு தரப்படுகிறதா? என்பது குறித்தும் பேசலாம்.
– லியோ
#கோவைபெரியார்அறிவுலகநூலகம் #பதிப்பகங்கள் #தமிழ்எழுத்தாளர்கள் #எழுத்தாளர்கள்ராயல்டி #புத்தகஉரிமைகள் #நூலகஆணைக்குழு #ஏஐநூல்கள் #தமிழ்பதிப்புலகம் #பெருமாள்முருகன் #அழகியபெரியவன் #ஜெயமோகன் #சோதர்மன் #ஜெயகாந்தன் #கிராஜநாராயணன் #TamilWriters #TamilPublishers #WriterRoyalties #Copyrights #BookPublishing #AIBooks #PeriyarLibrary #TamilLiterature