வெண்மைப் புரட்சியின் நாயகனும், இந்தியாவின் பால் புரட்சியும்!

நவம்பர் 26 – தேசிய பால் தினம்

உலக அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்திய 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடப் பால் இல்லாமல் வெளிநாடுகளிலிருந்து பால் பவுடரை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, தற்போது உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் முதன்மை நாடாக உள்ளது.

மிகப் பெரும் வளர்ச்சியும் இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால் ஒரு தனிமனிதனின் அயராத உழைப்பும், கோடிக்கணக்கான கிராமப்புற விவசாயிகளின் வியர்வையும் அடங்கியுள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

அந்த மாமனிதர் டாக்டர் வர்கீஸ் குரியன். அவருடைய பிறந்தநாளான நவம்பர் 26-ம் தேதி, இந்தியா முழுவதும் ‘தேசிய பால் தினமாக’ கொண்டாடப்படுகிறது.

பால் தட்டுப்பாடும், ‘ஆபரேஷன் ஃப்ளட்’ திட்டமும்:

1940-களின் பிற்பகுதியில் குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள பால் விவசாயிகள், இடைத்தரகர்களால் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலோடு, திரிபுவன்தாஸ் படேல் தலைமையில் விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுறவு சங்கத்தைத் தொடங்கினர்.

அந்தச் சமயத்தில் தான் அரசுப் பணிக்காக ஆனந்த் நகருக்கு வந்த இளம் பொறியாளர் வர்கீஸ் குரியன் வந்தார். அங்கு விவசாயிகளின் துயரத்தைக் கண்டு தனது அரசுப் பணியிலிருந்து விலகி அவர்களுடன் இணைந்தார்.

இவர்களின் கூட்டு முயற்சியால் உருவானதுதான் உலகப் புகழ்பெற்ற ‘அமுல்’ (AMUL – Anand Milk Union Limited) நிறுவனம். அமுலின் வெற்றியைத் தொடர்ந்து, 1965-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை (NDDB) உருவாக்கி, அதன் தலைவராக வர்கீஸ் குரியனை நியமித்தார்.

1970-ம் ஆண்டு குரியன் தொடங்கிய ‘ஆபரேஷன் ஃப்ளட்’ (Operation Flood) எனும் திட்டம், இந்திய விவசாய வரலாற்றில் ஒரு மாபெரும் ‘வெண்மைப் புரட்சிக்கு’ இந்த சம்பவம் தான் வித்திட்டது.

தொழில்நுட்பமும் கூட்டுறவும் இணைந்த அதிசயம்:

அப்போது இருந்த காலகட்டத்தில் பொதுவாக எருமைப் பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்க முடியாது என்ற மேற்கத்திய நிபுணர்களின் கருத்து இருந்தது. அந்த எண்ணத்தை தனது நண்பர் ஹெச்.எம். தலாயாவுடன் இணைந்து குரியன் முறியடித்தார். எருமைப் பாலில் இருந்து வெற்றிகரமாகப் பால் பவுடர் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் தயாரிக்க முடியும் என்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார்.

கிராமப்புறங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், குறிப்பாகப் பெண்கள், தினமும் கறக்கும் பாலைக் கூட்டுறவுச் சங்கங்களில் கொடுத்து அன்றாட வருமானம் ஈட்டும் முறையை அவர் தான் முதலில் உருவாக்கினார்.

இது கிராமப்புற வறுமையை ஒழித்ததோடு, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்தது.

இன்றைய நிலை மற்றும் எதிர்காலச் சவால்கள்:

உலகப் பால் உற்பத்தியில் சுமார் 24 முதல் 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்புடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டாக்டர் வர்கீஸ் குரியன் தொடங்கி வைத்த வெண்மைப் புரட்சி (Operation Flood) மற்றும் கூட்டுறவு பால் பண்ணை மாதிரியே இந்த சாதனைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

அதேசமயம், இன்றைய காலகட்டத்தில் பாலில் கலப்படம் குறித்த அச்சமும் மக்களிடத்தில் அதிகமாக இருக்கிறது., கால்நடைத் தீவணங்களின் விலை உயர்வு மற்றும் பாரம்பரிய நாட்டு மாட்டினங்களைப் பாதுகாப்பது போன்ற சவால்களும் நம் முன் உள்ளன.

தரமான, டாக்டர் வர்கீஸ் குரியன் விதைத்த வெண்மைப் புரட்சி எனும் விதை, இன்று இந்தியாவை உலகின் தலைசிறந்த பால் உற்பத்தி நாடாக உயர்த்தியுள்ளது.

இருப்பினும், இன்றைய நவீன காலச் சூழலில் நுகர்வோரின் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் கலப்படமற்ற, தரமான பாலை உறுதி செய்வதும், நம் மண்ணின் அடையாளமான பாரம்பரிய நாட்டு மாட்டினங்களைப் பாதுகாப்பதும் நமது தலையாய கடமையாகும்.

அதேவேளையில், தீவன விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியில் பால் உற்பத்தியை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலையும், பொருளாதாரப் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்.

விவசாயிகளின் நலனையும், மக்களின் நம்பிக்கையையும் ஒருசேரக் காத்து, கூட்டுறவு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதே “வெண்மைப் புரட்சியின் தந்தைக்கு” நாம் செலுத்தும் உண்மையான நன்றியாகவும் மரியாதையாகவும் அமையும்.

– யாழினி

#தேசியபால்தினம் #வர்கீஸ்குரியன் #வெண்மைப்புரட்சி #பால்உற்பத்தி #அமுல் #ஆபரேஷன்ஃப்ளட் #பால்விவசாயிகள் #இந்தியவிவசாயம் #NationalMilkDay #VergheseKurien #WhiteRevolution #OperationFlood #Amul #MilkProduction #DairyFarming #IndianDairyIndustry #DairyFarmers #MilkCooperative #NDDB #IndianAgriculture

 

Comments (0)
Add Comment