“வெயில் என்ன பாடுபடுத்துது” என்று பலர் தமிழகத்தில் முனுமுணுத்திருக்கலாம்.
அந்த அளவுக்கு பளீரென்று வெயில் தமிழகத்தில் பொதுவெளி எங்கும் நிறைந்து கிடக்கிறது.
சில இடங்களில் மின்னலைப் போன்ற வெளிச்சமாகவும் கடுமையான வெப்பத்தை ஊற்றக் கூடியதாகவும் இருக்கும் வெயிலை, சமீப காலமாக பலர் உணர்ந்திருக்கிறார்கள்.
அதே சமயம் இதே வெயிலை எவ்வளவு பேர் கொண்டாடவும் செய்திருக்கிறார்கள்?
‘வெயில்’ என்கிற திரைப்படத்தை விருதுநகர் மாவட்டத்தை பின்புலமாகக் கொண்டு எடுத்திருப்பார் இயக்குநர் வசந்தபாலன்.
அந்தப் படத்தில், “வெயிலோடு விளையாடி” என்ற பாடலில் வெயிலைக் கொண்டாடும் மனோபாவத்தில் எழுதியிருப்பார், திரைப்படப் பாடலாசிரியரான நா.முத்துக்குமார்.
அந்த திரைப்படப் பாடல் காட்சியில், சிறுவர்கள் வெற்று உடம்போடு அந்த வெயிலை எப்படிக் கொண்டாடி இருக்கிறார்கள் என்கின்ற காட்சிகள் பதிவாகி இருக்கும்.
உண்மையில் அப்படித்தான்.
இதே வெயில் கடுமையாக அடிக்கிற தென் தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர், ராமநாபுரம் மாவட்டங்களில் வெயிலுக்கு எந்த அளவுக்கு மக்கள் மதிப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பது அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும்.
உண்மையில் வெயிலேயே ஒரு மூலதனமாக வைத்துதான் தீப்பெட்டித் தொழில் வளர்ந்திருக்கிறது; பட்டாசுத் தொழில் வளர்ந்திருக்கிறது.
இன்றைக்கு சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அளவுக்கு அது விரிவடைந்திருக்கிறது என்று சொன்னால், அதுக்கு ஒரு விதத்தில் பட்டாசுகளைக் காய வைப்பதற்கு மூலகாரணமாக அமைந்திருப்பது வெயில்தான்.
அத்தகைய வெயிலை அவர்கள் வழிபடவும் செய்தார்கள்.
நீங்கள் நீலகிரி மாவட்டத்திலோ அல்லது பிற பகுதிகளிலோ வெயிலை வழிபடும் மனோபத்தைப் பார்க்க முடியாது.
ஆனால், அந்த விருதுநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வெயில் உகந்த அம்மன், வெயிலாச்சி அம்மன் என்று பல்வேறு பெயர்களில் வெயிலை ஒரு அம்மனாக வழிபடுவதை, இந்த மாவட்டங்களில் பயணம் செய்ததால் பரவலாகவே உணர முடியும்.
குறிப்பாக விருதுநகரில் வெயில் உகந்த அம்மன் கோவில் பெரிதும் கொண்டாடப்படும் கோவிலாக இருக்கிறது.
இம்மாதிரி வெயிலைக் கொண்டாடும் மனோபாவமும் அந்தக் கடுமையான வெப்பத்தைக் கூட சாமியாக வழிபடும் மனோபாவமும் தென்தமிழக மக்களுக்கே உரித்தான ஒன்று.
வெயிலை சகித்துக்கொள்ள முடியாமல், குளிர் பிரதேசங்களுக்கு ஓடும் மனநிலையில் இருக்கிற பலர், இதே வெயிலைக் கொண்டாடி வழிபடுகிற மக்கள் இந்த தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் உணர வேண்டும்.
– அ. தமிழரசன்