அக்டோபர் 9 : உலக முட்டை தினம்
நாம் எடுத்துக்கொள்ளும் உணவில், எளிய முறையில் சத்துக்கள் நிறைந்த ஒரு முழுமையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், அதில் முதலிடம் பிடிப்பது முட்டைதான்.
மிகவும் மலிவாகக் கிடைக்கக் கூடிய ‘சூப்பர் ஃபுட்’ என்று அழைக்கப்படும் முட்டையில், மனித உடல் இயங்குவதற்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
அவசரமாகக் குழம்புக்குத் தொட்டுக்கொள்ள எளிதாக செய்யக்கூடிய டிஷ் என்றால் அது முட்டைதான்.
உடலுக்கு உடனடி ஆற்றலையும் பலத்தையும் தருவதில் முட்டைக்கு நிகர் எதுவுமில்லை.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்த இந்த எளிய உணவு, நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மைகளை அள்ளி வழங்குகிறது.
விலை மலிவான மற்றும் பல ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய முட்டையைச் சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 9-ம் தேதி உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.
மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு முட்டை வழங்கும் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
முட்டையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
அனைத்து நாடுகளிலும் முட்டையின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச முட்டை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.
அன்றிலிருந்து முட்டை மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்குவது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முட்டையில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து நன்மைகள்:
முட்டையில் உயர்தர புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தசைகளின் வளர்ச்சிக்கும் உடல் வலிமைக்கும் தேவையான புரதம் இதில் உள்ளது.
கண் பார்வையைப் பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அடங்கியுள்ளன.
மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் அவசியமான கோலின் இதில் நிறைந்துள்ளது.
பெண்களின் ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு:
பெண்களின் ஆரோக்கியத்திற்கு முட்டை பல வகைகளில் உறுதுணையாக அமைகிறது:
கர்ப்ப காலத்தில் பாலூட்டும் பருவத்திலும் பெண்களுக்குத் தேவையான இரும்புச்சத்து, போலேட் மற்றும் கோலின் போன்ற ஊட்டச்சத்துக்களை முட்டை வழங்குகிறது.
இது சிசுவின் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவுகிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரும்புச் சத்து இழப்பை சரி செய்து, உடல் சோர்வைப் போக்க இது உறுதுணையாக இருக்கிறது.
முட்டையில் உள்ள உயர்தர புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் ஹார்மோன் சமநிலையைப் பேணவும், எலும்புகள் பலவீனம் அடையாமல் இருக்கவும் உதவுகின்றன.
உடல் எடையை சீராக பராமரிக்க விரும்புபவர்களுக்கு முட்டை சிறந்த உணவாகும். இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.
சத்து நிறைந்த முட்டை வகைகள்:
· நாட்டுக்கோழி முட்டை: இதில் புரதம், வைட்டமின்கள் (ஏ, பி12) மற்றும் தாதுக்கள் செறிந்துள்ளது. கொழுப்பு குறைவாகவும் சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
· வாத்து முட்டை: கோழி முட்டையை காட்டிலும் அதன் மஞ்சள் கரு பெரியது என்பதால், இதில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் கணிசமாக அதிகம் உள்ளன.
· கவுதாரி முட்டை: அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், கோழி முட்டையை விட இதில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் சத்துக்கள் சற்று அதிகம் உள்ளன.
முட்டை உலகளவில் மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுகளில் ஒன்றாகும்.
ஏழை எளிய மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான இது நிலையான பொருளாதார ஆதாரமாகவும் விளங்குகிறது.
எளிய மக்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யும் சூப்பர் ஃபுட்டாக விளங்கும் முட்டை, குறிப்பாக பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆரோக்கியத்தின் தூணாகத் திகழ்கிறது.
நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான பெண்களும் குழந்தைகளும் அவசியமானவர்கள் என்பதால், முட்டையைத் தினசரி உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வோம்.
- யாழினி சோமு