வாழ்வளிக்கும் வேளாண்மைக்கு கை கொடுப்போம்!

மனித நாகரீகத்தின் முதுகெலும்பு எனக் கூறப்படுவது வேளாண்மை.

மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழவும் சமூகங்கள் உருவாகவும் இதுவே உதவுகிறது.

கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு வேளாண்மையே அடிப்படை ஆதாரமாக உள்ளது.

இதில் இடர்பாடுகள் உருவாகும்போது அது கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் அறியப்பட்ட போதிலும் மழை பொய்த்துப் போவது, தீவிர வெப்பம் போன்ற பருவநிலை மாற்றம் காரணமாக வேளாண்மை அவ்வப்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

தற்போது நிலவும் எல்-நினோ சூழலே இதற்கு சான்றாகும். பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளின் ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் தினமும் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவின்றி படுக்கைக்கு செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வறுமை, வேலையின்மை மற்றும் உணவுப் பொருள் வீணாக்கப்படுவது ஆகியவை இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

நம் நாட்டில் அறுபது சதவீத விவசாய நிலம் மழையை மட்டுமே நம்பியுள்ளது. மீதமுள்ள 40% பரப்பளவிற்கு மட்டுமே கால்வாய்கள், கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் போன்ற நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

எனவே, பெருவாரியான விவசாயிகள் மழை சார்ந்த வேளாண்மையையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பருவ மழையில் மாற்றம் வரும்போது உணவு உற்பத்தி குறையும்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கமான சராசரி அளவை விட சுமார் 13 சதவீதம் மழை பொழிவு குறைந்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மிகக் குறைவான மழைப்பொழிவு பதிவாகி வறண்ட ஆண்டாக மாறியுள்ளது.

எனினும் இந்த இடர்பாடுகளைக் கடந்து அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் வரலாற்று சாதனையை படைத்துள்ளனர் நம் விவசாயிகள்.

நம் நாட்டின் பிரதான உணவாக இவை இரண்டும் அறியப்பட்டாலும் சத்து நிறைந்த புஞ்சை தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, திணை ஆகியவற்றிற்கு வரவேற்பு அளிப்பதன் மூலம் சிறுகுறு விவசாயிகளையும் முன்னேற்ற முடியும் என்கின்றனர்.

மேலும் கரும்பு, வாழை, புகையிலை, பருத்தி போன்ற பணப்பயிர்களை விளைவிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அத்தியாவசிய உணவுப் பயிர்களை விளைவிப்பதற்கும் தரவேண்டும் என்றும் வேளாண் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, ஜீரோ பட்ஜெட் எனப்படும் செலவில்லாத இயற்கை விவசாய முறையை ஊக்குவிப்பதன் மூலம் உணவுப் பற்றாக்குறையை பெருமளவு தடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

இந்தியாவில் தற்போது 44 கோடி ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இருப்பினும், இந்த மொத்த பரப்பளவில் தரிசு நிலங்களும் உள்ளதால் பருவ கால அடிப்படையில் பயிர் செய்யப்படும் நிலங்களின் அளவு குறைகிறது.

மேலும் நகரமயமாக்கல், சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் விரிவாக்கம் காரணமாகவும் இந்த நிலை ஏற்படுகிறது.

தற்போது உணவு தானிய உற்பத்தி தேவையான அளவை காட்டிலும் அதிகமாக கையிருப்பில் உள்ளதாக கூறப்பட்டாலும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை மூன்று மடங்கு கூட்ட வேண்டி இருக்கும்.

மேலும் நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் நகர்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அடுத்த பத்து வருடங்களில் இதனை மீட்டெடுப்பதற்கான பணி சவாலானது என்கின்றனர் நிபுணர்கள்.

இதற்கெல்லாம் தனிமனிதன் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி இருந்தாலும், தீர்வு நம்மிடம் உள்ளது என்பதே உண்மை.

பூமி வெப்பமயமாவதைத் தடுக்க நவீன சாதனங்களைக் குறைந்த அளவு உபயோகிப்பது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது,

குடியிருக்கும் இடத்திலிருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவில் விளைந்து வரும் உணவுப் பொருட்களை உட்கொள்வது,

அரிசி கோதுமையை மட்டும் பிரதான உணவாக கருதாமல் பிற தானியங்களையும் கொண்ட சரிவிகித உணவு முறைக்கு ஊக்கமளிப்பது,

வறட்சியால் ஏற்படும் நிலையை தவிர்க்க வீட்டை சுற்றிலும் மரங்களை வளர்ப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் போது,

உணவுப் பற்றாக்குறை தடுக்கப்பட்டு வேளாண்மை சிறக்க வழிவகுக்கும்.

சிறு விஷயங்கள் தான் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.

S. வாணி

Comments (0)
Add Comment