வானிலை மையம் அறிவிக்கிறபடி தமிழ்நாட்டின் வெப்பநிலை எகிறிக் கொண்டிருக்கிறது.
அதன் உக்கிரம் எந்தளவுக்கு புள்ளிவிவரமாக தெரிகிறதோ இல்லையோ பொதுவெளியில் அந்த சுள்ளென்ற வெயிலைப் பலரும் படாதபாடு படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை துவங்கி ராமநாதபுரம், கன்னியாகுமரி வரை இதேநிலைதான் சமச்சீராக நீடிக்கிறது.
சற்று வயதானவர்களும், சிறு குழந்தைகளும் இந்த வெயிலின் தீவிரத்தை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் போகிறார்கள்.
சட்டென்று மயக்கம் அடைகிறார்கள். சன்ஸ்டோக்-ஆல் பாதிக்கப்பட்டு வீழ்கிறார்கள்.
இப்படியொரு வெட்கை பரவலாக இருக்கையில்தான் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது.
பல்வேறு கட்சிகள் வெயிலுக்கிடையில் தங்களுடைய பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன.
அந்தப் பிரச்சாரங்களுக்காக பொதுமக்கள் கூடுகிறார்கள் அல்லது கூட்டப்படுகிறார்கள்.
எவ்வளவு வெயில் அடித்தாலும் அந்த வெயிலின் தாக்கத்தை உடலில் ஏந்தியவாறு அவர்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
இயற்கையில் நிகழும் தட்பவெட்ப நிலைதான் இத்தகைய சூடு பறக்கிற வெப்பத்தை உருவாக்குகிறது என்றாலும், அத்தகைய வெயில் சூட்டில் மக்களை தகிக்க விட வேண்டுமா என்பதுதான் நம்முடைய கேள்வி.
அண்மையில் மதுரையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தைத் துவங்குவதற்காக முதல்வர் விஜய் வந்திருந்தபோது நடத்தப்பட்ட ரோடுஷோ-விற்காக கடும் வெயிலுக்கிடையே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்திருக்கிறார்கள்.
அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில், நமக்கு கரூர் ஞாபகம் வருவது தவிர்க்க முடியாதது.
ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைக் கூட்டுகிறபோது எத்தகைய உயிர் வதைகள் நடக்க சாத்தியம் இருக்கிறது என்பது ஏற்கனவே கரூரில் 41 உயிர்கள் பறிபோன நிலையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான விசாரணை முடிவடையாத நிலையில், எதற்காகவும் கூட்டத்தை கூட்டுவதற்கு முன்னால், தமிழகத்திலுள்ள எந்தக் கட்சியும் கவனமாக இருக்க வேண்டாமா?
அப்படி கவனம் தவறினால், அதனால் இழப்பை அனுபவிப்பது, கூட்டமாய் கூட்டப்படும் அப்பாவி பொதுமக்கள்தான்.
அதிலும் தற்போது வெயிலின் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கையில் எத்தகைய கூட்டம் பொது வெளியில் கூட்டப்பட்டாலும், சுற்றுச்சூழல் குறித்த கவனமான பார்வை ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, எந்தக் கட்சிக்கும் இருந்தாக வேண்டும் என்பதே மக்களின் சார்பாக நாம் விடுக்கிற வேண்டுகோளாக இருக்கும்.
– யூகி