ஊர் சுற்றிக் குறிப்புகள் :
அண்மையில் அடுத்தடுத்து ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பயணத்தின்போது, முதியவர்கள் நடத்தப்பட்டுவரும் விதம் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.
குறைந்த கல்வியறிவு பெற்றவராக சொல்லப்பட்ட லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயிலில் பயணம் செய்யும் முதியவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அமலில் இருந்தன.
அவர்களுக்கு பயணச் சீட்டில் தனி சலுகைகள் வழங்கப்பட்டன. அத்துடன் அவர்களுக்கு இருக்கை ஒதுக்குவதில், அவர்கள் வயதின் மூப்பை உணர்ந்து அவர்களுக்கு லோயர் பெர்த் போன்றவை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவ்வளவு சலுகைகளை வழங்கியபோதும், தான் பொறுப்பு வகித்த ரயில்வே துறையை லாபகரமாக மாற்றிக் காட்டினார் லல்லு பிரசாத்.
இதெல்லாம் ஒருபுறம் நீடித்தாலும் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே முதியோருக்கு ரயில் பயணத்தில் கிடைத்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.
முதுமையைக் கணக்கிலெடுத்து இருக்கையை ஒதுக்கீடு செய்வதிலும் மாற்றம் செய்யப்பட்டது.
இதை சமீபத்திய ரயில் பயணத்தின்போது, நேரடியாக உணர முடிந்தது. 80 வயதுக்கு மேலான ஒரு பெண்மணிக்கு ‘அப்பர் பெர்த்’ ஒதுக்கப்பட்டிருந்தது.
கீழே படுத்திருந்தவரிடம் அவர் லோயர் பெர்த் கேட்டபோது யாரும் அவருக்கு அதை ஒதுக்க விரும்பவில்லை.
தன்னுடைய பரிதாப நிலையிலிருந்து கனத்த உடம்போடு மேல் இறுக்கைக்கு செல்ல இயலாத நிலையில், ரயில்வே பெட்டியின் கீழே படுக்க முயன்றபோது, டிக்கெட் பரிசோதகர் அவரின் நிலையை உணர்ந்து வேறொரு கீழ் இருக்கையை ஒதுக்கீடு செய்வதாகச் சொல்லி, அவரை அழைத்துச் சென்றார்.
இப்படிப்பட்ட பரிதாபங்களை ரயில் பயணங்களில் அடிக்கடி காண நேர்கிறது.
முதியவர்கள் என்ன வயதானாலும், என்ன மாதிரியான உடல் நலிவோடு இருந்தாலும், அவர்கள் சிரமங்களுக்கு இடையில், வாக்குச்சாவடிக்கு வந்து அளிக்கும் வாக்கு மட்டும் நமக்கு வேண்டும்.
ஆனால், அவர்களின் முதுமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட சலுகைகளை நிறுத்தியது எதைக் காட்டுகிறது?
இம்மாதிரி முதியவர்களின் சலுகைகளை அதிரடியாக நிறுத்திய மத்திய அரசின் பொறுப்பிலிருப்பவர்கள் முதுமையைத் தொடாதவர்களா என்ன?
அவர்களால் ஏன் தன்னைப் போன்ற முதியவர்களின் சிரமங்களை ஏன் உணர முடியவில்லை?
மங்கி பாத் என்று மக்கள் மனதின் குரலைப் பிரதிபலிப்பதாகச் சொல்லும் மூத்த தலைவர்கள் நாடு முழுக்க முதுமையுடன் போராடும் முதியவர்கள் குறித்து கவலை கொள்வார்களா?.
– யூகி