நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜெம் வீரமணி குறித்த வழக்கு மறுபடியும் உயிர்ப்பெற்ற போதிருந்தே ஒரு திகில் திரைப்படத்தைப் பார்க்கிற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
தினமும் எதாவது ஒரு புதிய செய்தி வருவதோடு அத்தகைய செய்தி வெளிவரும்போது, பொதுவெளியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அச்சு ஊடகங்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் புயலடித்த மாதிரி பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தும் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இந்து நாளிதழில் இந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்த ஒரு காங்கிரஸ் பிரமுகர் 2024-ம் ஆண்டிலேயே தான் வீடியோ ஆதாரத்தோடு வீரமணி, சாந்தி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் ஆனால், அந்த வழக்கு விரைந்து விசாரிக்கப்படவில்லை என்பதையும் வெளிப்படையாக முன்வைத்திருந்தார்.
ஆனால், தமிழக காவல்துறை 2025-ம் ஆண்டு இறுதியில்தான் புகார் அளிக்கப்பட்டதாக ஏன் சொன்னது? என்பது பற்றிய விவாதம் எழுப்பப்பட்டிருக்கிறது.
அதோடு மட்டுமல்ல, இந்த வழக்கில் புதிய அதிரடி திருப்பமாக சென்னை நீதிமன்றத்திலேயே தான் எப்படியெல்லாம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக ஒரு சிறுமி நேரடியாக சாட்சியம் அளித்தது பலரை அதிர வைத்திருக்கிறது.
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அந்த சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதன் மூலம் வீரமணி மீது ஏற்கனவே பாய்ந்திருக்கிற போக்சோ சட்டப் பிரிவின் மீது மட்டுமல்ல, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஊடகங்கள் இந்த வழக்கு தொடர்பான செய்திகளை ஒரு க்ரைம் சீரியலுக்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை அளித்து, தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கையும் உயர்த்திக் கொண்டிருக்கின்றன.
அதோடு இது தொடர்பான செய்திகளை யார் முந்தித் தருவது என்பதிலும் ஒரு விதப் போட்டி நடக்கிறது.
இதில், அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இளம் சிறுமிகள் மீது கொடுமையான பாலியல் வன்முறையை நிகழ்த்தியவராக ஜெம் வீரமணி அறியப்படுவது நம்முடைய சட்டத்தின் மீதான பலவீனங்களை வெளிக்காட்டுகிறது.
பணமும் அதிகாரமும் ஒன்றிணைந்தால், எத்தகைய அத்துமீறல்களையெல்லாம் குற்ற மனப்பான்மையுள்ள ஒருவர், தொடர்ந்து அதே குற்றத்தை தொடர்ந்து செய்து வந்திருக்க முடியும் என்பதையும் புலப்படுத்துகிறது.
இத்தனை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்த ஒருவரை, தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த கட்சிகள் ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன? என்ற கேள்வியும் பொதுவெளியில் கட்சி சார்பற்றவர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.
இதில் சில கட்சிகள் மௌனம் சாதிப்பதில் கூட ஒரு சில அரசியல் இருக்கிறது. இந்தளவுக்கு சிறுமிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிரான ஜனநாயக ரீதியான உரிமைக்குரல் ஏன் எழுப்பப்படவில்லை?
ஏன் இந்தளவுக்கு இந்த வழக்கில் ஒருவித தாமதம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதும் மர்மமான கேள்விகளாகவே நீடித்துக் கொண்டிருக்கின்றன.
இதில் திமுக அரசு மீது பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிய நிலையில், திமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதியோ, “இந்த வழக்கில் சாட்சியமாக அளிக்கப்பட்ட வீடியோ ஆதாரம் தெளிவானதாக இல்லை” என்று சொல்லியிருப்பது பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
அதேசமயம் தற்போது காவல்துறையின் வசமிருந்த வீடியோ ஆதாரத்தில் சில காட்சிப் பதிவுகள் சமூகவலைதளங்களிலும் கசிந்திருக்கின்றன.
அந்த காட்சிப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உருவம் தெளிவானதாகவே இருக்கிறது. இதை ஏன் கடந்த திமுக ஆட்சியில் உணர முடியாமல் போனது? எதனால் அவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருக்கிறது?
எதனால் அவர்கள் சரியான ஆதாரம் இல்லை என்று சொல்லி இந்த வழக்கை முடித்துவைக்க முனைந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் ஆவேசம் பொங்க அலசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதேசமயம் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரே, வீரமணி இதை ஒரு ஜாலியாக செய்திருக்கிறார் என்று சொல்லியதும் பலரை அதிரவைத்திருக்கிறது.
அதோடு தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவிற்கு ஆதரவாக பேசுபவர்கள் ஜெம் வீரமணியின் கொடுமையான செயல்பாட்டின் தீவிரத்தைக் குறைத்து திசை மாற்றும்படி பேசுவதும்,
தவெக அரசில், கடந்த 20 நாட்களில் அடைந்த வழக்கின் வேகம் குறித்து சந்தேகப்படும் தொனியில் பேசுவதும் பெரும் விவாதப்பொருளாகி இருக்கிறது.
பிரச்சனை இத்தோடு முடியாமல் சில அரசியல் பிரமுகர்களுக்கும் இந்த அத்துமீறல்களில் தொடர்பு இருப்பதாகவும், செய்திகள் பட்டும்படாமல் வந்து கொண்டிருக்கின்றன.
இத்துடன் நிற்காமல், தவெக அரசின் செயல்பாடு குறித்த கேள்வி எழுப்பப்படுவது, கேள்வி எழுப்பப்படுவர்களின் உள் அரசியலையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை இனி தொடர்ந்து நடக்கையில் இன்னும் பல்வேறு விதமான மர்ம முடிச்சுகள் வெளிப்படலாம்.
எத்தகைய அரசியல் பின்புலத்துடன் இளம் சிறுமிகள் மீதான அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன என்பதும் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது.
ஒன்றை மட்டும் முக்கியமாக சொல்ல வேண்டும். அதிர்ச்சியூட்டும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பதின் பருவத்தைச் சேர்ந்த இளம் சிறுமிகள்.
இந்த சிறுமிகள் மீதுதான் அதிகாரமும் பணபலமும் கொண்ட பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டிருப்பதை, ஜனநாயக உணர்வின் மீது நம்பிக்கைக் கொண்ட யாரும் நியாயப்படுத்திவிட முடியாது.
இதற்கு முன்பு வட இந்தியாவில் குறிப்பிட்ட வயதான அரசியல்வாதி தற்போது நடந்திருப்பதைப் போன்றே இளம் சிறுமிகள் விசயத்தில் அத்துமீறி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசியலில் தன்னுடைய மகனையே தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய மனுநீதிச் சோழனைப் பற்றி அடிக்கடி பேசப்பட்டிருக்கிறது.
“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று நக்கீரர் சொன்னது, அடிக்கடி வழிமொழியப்பட்டிருக்கிறது.
அதைத்தான் கட்சி வேறுபாடுகளையெல்லாம் கடந்த சராசரி மக்கள் தங்கள் மனதின் குரலாக இதே உணர்வைத்தான் தற்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எளிய மக்களின் மனதில் எழும் குரலுக்கு மதிப்பிருக்குமா?
– யூகி