‘குழந்தைகள் தினம்’ என்று தனித்துக் கொண்டாடும் நாம்தான் தற்போது தொடர்ந்து சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நிகழ்வதைப் பார்த்தும் மனம் பதைபதைத்துப் போகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவிகளை அங்குள்ள ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவது குறித்த செய்திகளை அடிக்கடி பார்த்திருக்கிறோம்.
அதை எதிர்த்து பல பள்ளிகளுக்கு முன்னால் பெற்றோர்கள் போராடியதையும் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் பார்த்து அதிர்ந்திருக்கிறோம்.
தெருவில் சிறுமிகள் போகும்போது விரட்டிக் கடிக்க முற்படும் நாய்களைப் போல ஏன் இம்மாதிரியான வக்கிரங்கள் இங்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன?
தற்போது பலரையும் அதிர வைத்திருப்பது ஜெம் கிராணைட்ஸ் உரிமையாளரான வீரமணி மீது எழுந்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள்.
பல ஆண்டுகளாகவே கிராணைட்ஸ் தொழிலில் பெரும் லாபத்தை ஈட்டி இருப்பதாகச் சொல்லப்படும் வீரமணி மீதான புகார் திமுக ஆட்சியின்போதே கொடுக்கப்பட்டும், ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் அந்த வழக்கை முடிக்கும் நிலைக்கு திமுக போனது என்பதே இப்போது பலரும் முன்வைக்கக் கூடிய கேள்வி.
அதற்கு முன்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வைக்கப்பட்டாலும் ஆதாரபூர்வமான முறையில் திமுக ஆட்சியில் தான் வழக்கு பதியப்பட்டது.
அதன் பிறகு அது விசாரிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் முறையான ஆவணங்கள் இல்லை என்கிற விதத்தில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டு, அந்த வழக்குக்கு முடிவுரை எழுத திமுக ஆட்சிக் காலத்தில் முயற்சி நடந்திருக்கிறது.
தற்போது தவெக தலைமையிலான ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு நீதிமன்றம் இதில் தலையிட்ட பிறகே விசாரணை சூடுபிடித்திருக்கிறது.
சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான வீரமணி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு உதவியாக சிலரும் கைதாகிக் கொண்டிருக்கிறார்கள்.
தினமும் தொலைக்காட்சியில் தொடரும் மர்ம சீரியலைப் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது வீரமணி குறித்த இந்த வழக்கும்.
இந்த வழக்கு விசாரணை துவங்கியதில் இருந்தே தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களிலும் சரி, சமூக ஊடகங்களிலும் சரி இதுதான் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
திமுகவைச் சேர்ந்த சிலர் இந்த வழக்கு குறித்து தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
ஏற்கனவே சட்டமன்ற நேரலை ஒளிபரப்பில் தன்னுடைய சுயத்தை வெளிப்படுத்திக் கொண்ட திமுக தற்போது பெரும் குற்றவாளியைப் பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் நின்று கொண்டிருக்கிறது.
இதை திமுக ஆதரவாளர்கள் சிலர் நியாயப்படுத்த முயற்சித்தபோதும் அவை கடுமையான கண்டனத்திற்குள்ளாகி இருக்கின்றன.
இதே வழக்கு திமுக ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட போதும் அது குறித்த கண்டனக் குரலை எழுப்பாத பொதுவுடமைக் கட்சிகள் இப்போது தவெக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அது குறித்த ஆலோசனைகளை வழக்கம் போல் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் பலருடைய மனதிலும் இயல்பாக எழும் கேள்விகள் இவை:
1. நீண்ட காலமாக நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் ஜெம் வீரமணி, எப்போதிருந்து இம்மாதிரியான வன்மமான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கிறார்?
2. அவருக்கு இவ்வித பாலியல் அத்துமீறல்களில் துணை நின்றவர்கள் யார்?
3.இத்தகைய அத்துமீறலை வீரமணியுடன் இணைந்து செய்ததாக சொல்லப்படுபவர்கள் எப்போது வெளிச்சத்திற்கு வருவார்கள்?
4. தோண்டத் தோண்ட பூதம் கிளம்புவது மாதிரி தினமும் பல்வேறு விதமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இதற்கான முறைப்படுத்தப்பட்ட விசாரணையை நடத்தி தெளிவான அறிக்கையை மக்கள் முன்பும் நீதிமன்றம் முன்பும் வைக்க வேண்டியது தவெக அரசின் தலையாயக் கடமையல்லவா?
5. இந்த பாலியல் அத்துமீறல்களில் கட்டாயப்படுத்தப்பட்டு ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிறுமிகளின் பெயரோ, புகைப்படமோ அல்லது எந்தவிதமான வீடியோ பதிவும் வெளியாக விதத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் இங்குள்ள அரசுக்கு இருப்பது மாதிரியே ஊடகங்களுக்கும் இருக்கிறதல்லவா?
6. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தப் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக மாற்றாமல், வன்மம் நிறைந்த பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அதில் சார்புகளற்ற முறையில் நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பும் இதே அரசுக்கு தானே இருக்கிறது. அரசியல்படுத்த முயற்சிப்பவர்கள் இதை உணர்வார்களா?
7. இந்த விசாரணை முடிவில் இதில் கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகளின் எதிர்கால வாழ்வுக்கு என்ன மாதிரியான உரிய நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதும் மிக முக்கியமான கடமை இல்லையா?
இந்த நியாயமான, எளிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தவெக அரசுக்கும் இருக்கிறது, அரசு அதிகாரிகளுக்கும் இருக்கிறது.
– லியோ