பாரதிராஜாவைப் புகழ்ந்து பேசிய கி.ராஜநாராயணன்!

ஆச்சர்யம் தான். 

புதுவையில் அப்போது வசித்துவந்த கி.ராஜநாராயணன் அவர்களைப் பார்க்கப் போனபோது வழக்கம்போல அவருக்கே உரித்தான கேலி கலந்த மொழியுடன் சொல்லிக் கொண்டு போனவர், இடையில் நிறுத்தி இப்படிச் சொன்னார்:

“இதுவரை எவ்வளவோ படைப்புகளை கரிசல் மண்ணை வைத்து நான் எழுதியிருக்கேன். என்னைப் போல மற்றவர்களும் எழுதி இருக்காங்க. இதில், சிலருடைய கதைகளை, எழுத்தாளர்களிடமே சொல்லாமல் திருடியது எல்லாம் இதே சினிமா துறையில் நடந்திருக்கிறது.

அதே துறையில் இருந்த பாரதிராஜா முதல் மரியாதை படத்தை எடுக்கும்போது என்னை பார்க்க வந்தார்.

என்னுடைய படைப்புகளில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக சொன்னவர், என் கையில் அதற்கான ஒரு சன்மானத் தொகையும் கொடுத்தார்.

அவர் சொன்னபடியே அந்தப் படத்தின் டைட்டில் கார்டிலும் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இம்மாதிரி நடப்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது என்று மறைந்த இயக்குநரான பாரதிராஜாவைப் பற்றி கி.ரா பகிர்ந்து கொண்டதை இப்போது மீண்டும் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

பிரபல வார இதழில் நான் என்னுடைய ஜெர்னலிஸ வாழ்வில் சந்தித்த பலவிதமான அதிரடி அனுபவங்களைத் தொடராக எழுதி வந்தேன்.

அப்போது தொலைபேசி மூலம் என்னைத் தொடர்புகொண்ட இரண்டு திரைப்பட துணை இயக்குநர்கள், “அதில் உள்ள நிகழ்வுகளை நாங்கள் திரைப்படமாகவோ அல்லது குறும்படமாகவோ எடுக்கலாமா?” என்று அனுமதி கேட்டபோது,

“முறையான அனுமதி பெறாமல் அதை நீங்கள் எந்த வடிவத்திலும் எடுக்க முயற்சிக்காதீர்கள்” என்று சொன்னேன்.

தற்போது ‘தாய்’ இணைய இதழில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல், அதே மாதிரி என்னுடைய அனுபவங்களை முன்வைத்து ‘கொஞ்சம் சூடு; கொஞ்சம் கனிவு’ என்கிற தொடரை எழுதியபோது, திரைப்படத் துறையில் இருக்கும் இளம் உதவி இயக்குநர்கள் தொடர்புகொண்டு அனுமதியைக் கேட்டபோதும் முறையான அனுமதி பெறாமல் எடுக்காதீர்கள் என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

தற்போது, திரைப்படத்திற்கான மூலக் கதை, வசனம் எழுதுவது வாயிலாக  திரைப்படத் துறையில் நான் நுழைந்திருக்கும் நிலையில், “அனுமதியைப் பெறாமல் என்னுடையை கதையை முறைகேடாகப் பயன்படுத்துவதோ, எழுதியவருக்கே தெரியாமல் சொந்தம் கொண்டாடுவதோ நன்மதிப்பைத் தராது.

அதையும் மீறி யாராவது நான் எழுதியவற்றை பயன்படுத்த முனைந்தால் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்” என்பதைக் கணிவுடன் தெரிவிக்க வேண்டி இருக்கிறது.

எழுத்தாளனின் படைப்பை சொந்தம் கொண்டாட முயற்சிப்பவர்கள், அதை எழுதுவதற்கு சம்மந்தப்பட்ட எழுத்தாளன் பட்ட வலியையும் உணர வேண்டும்.

– மணா

Comments (0)
Add Comment