பஞ்சமும் பசியும் நிறையக் குடும்பங்களைச் சொந்த ஊரிலிருந்து விரட்டியிருக்கின்றன.
அப்படியொரு பஞ்சத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திருமங்கலம் பக்கத்திலுள்ள சாத்தங்குடிக் கிராமத்திலிருந்து வேலை தேடி மதுரைக்கு வந்திருக்கிறார்கள் நெசவு மட்டுமே தெரிந்திருந்த சுந்தரமும் பாக்கியத்தம்மாளும்.
மதுரையிலிருந்த ‘மெஜுரா கோட்ஸி’ல் நெசவுக்காக அப்போது போன ஆயிரக்கணக்கான கூலிகளில் இவர்களுக்கும் வேலை.
கிருஷ்ணபாளையத்தில் சின்ன ஓட்டு வீட்டில் குடியேறின இவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். ஒன்பதாகப் பிறந்த பிள்ளை சாலமன் பாப்பையா.
“வீட்டிலே எங்களோட அப்பா, அம்மா, அண்ணன், அக்காமார்களெல்லாம் நெசவு வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தாங்க. நானும் தம்பி பாப்பையாவும்தான் வேலைக்குப் போகலை.
எங்களோட மூத்த அண்ணன் தேவநேசனுக்குத்தான் பாப்பையாவைப் படிக்க வைக்கிறதிலே ரொம்பவும் அக்கறை. அப்போ ஓட்டு வீட்டிலே பலகைகளை வைச்சு அறையாத் தடுத்துருப்போம்.
பாப்பையாவுக்குச் சின்ன வயசிலிருந்து சுட்டித்தனம் கிடையாது. வீட்டிலே மின்சார விளக்கு வசதியும் கிடையாது.
தெருவிளக்கு வெளிச்சத்திலே உட்கார்ந்து படிப்பான். மில்லில் சங்கொலிச் சத்தம் கேட்டதுமே மில்லுக்கு வேகமாக ஓடுகிற குடும்பத்தில் இவன் மட்டும் பொறுப்பாப் படிச்சான்.
அப்போ படிக்கிறதுக்குப் பணம் கட்டணும். அதைக் கட்டக்கூட வழியிருக்காது.
எப்படியாவது அப்பா கடன் வாங்கியாவது பணத்தைக் கட்டுவார். இவன் நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணுமேன்னு எங்க அம்மா ஜெபம் பண்ணுவாங்க. அவங்க ஜெபம் பண்ணினது வீணாகப் போயிடலை…” என்று பிரியத்துடன் தனது தம்பியைப் பற்றிச் சொல்கிறார் பாப்பையாவின் மூத்த சகோதரியான சமாதானம்.
வீட்டுக்குப் பக்கத்திலிருந்த நகராட்சிப் பள்ளியில் படித்தாலும் பாப்பையாவுக்குப் படிப்பதோடு இளம் குரலில் பாடுவதிலும் ஒரு பிடிப்பு.
அதிலும் அப்போது பிரபலமாக இருந்த பி.யு.சின்னப்பாவின் பாடல்கள் மீது ஒருவிதப் பிரேமை; சின்னப்பா மாதிரியே பாடுவதில் ஒருவித குஷி.
அதோடு படங்கள் வரைவதிலும் ஆர்வம். வீட்டுக்கு வந்து லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் காட்டும் பாப்பையா மேல் தாயார் பாக்கியத்திற்கும் ஒரு பிரியம்.
பிள்ளை என்னமாய்ப் படித்துக் காட்டுகிறது! பிள்ளையைக் கூட்டிக்கொண்டு சர்ச்சுக்குப் போகும்போது அங்கே பாடப்படும் பாடல்கள், பேச்சுகள் அந்தச் சின்ன வயசில் பதிந்துவிட்டன.
மெஜுரா கோட்ஸில் நெசவு வேலை பார்த்துக்கொண்டு தம்பியின் படிப்பையும் கவனித்துக் கொண்டிருந்த தேவநேசன் உழைத்து வீடு திரும்பும் சமயங்களில் புத்தகமும் கையுமாகப் பாப்பையாவைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்.
“சின்ன தடுப்பு வீடுதான். படிக்கிறப்போ புதுசா புத்தகங்கள் வாங்குறதுக்கு வசதியில்லாமல், மற்றவங்க உபயோகிச்ச பழைய புத்தகங்களை வாங்கித்தான் படிப்பார். பக்கத்து நூலகங்களிலிருந்து புஸ்தகங்களை எடுத்துட்டு வந்து படிப்பார்.
வசதிக்குறைவாக இருந்த எங்க குடும்பத்திலேயிருந்து இவர் முன்னுக்கு வந்தது மனசுக்கு நிறைவா இருக்கு. அப்பவே இவரும், இவரோட அண்ணனும் உட்கார்ந்து வீட்டில் பல பாடல்களைப் பாடுவாங்க. சின்ன வயசிலேயே பலரையும் அனுசரிச்சுப் போற குணம் இவருக்கு…” – இப்படிச் சொன்னார் பாப்பையாவின் அண்ணன் மனைவியான ரோஸ்மேரி.
பள்ளிக்கூடப் படிப்பு முடிந்து அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்து, தியாகராஜர் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பு படிக்கிற வரைக்கும் பாப்பையா பட்ட கஷ்டம் அதிகம் என்றாலும் பொருளாதாரத்தில் அவருக்கு உதவியவர்கள் நண்பர்கள்.
எம்.ஏ. படிக்கும்போது, தேர்வுக்குக் கட்ட பணம் இல்லை. அந்தச் சமயத்தில் தனது சைக்கிளை விற்றுப் பணம் அனுப்பி இருக்கிறார் சென்னையிலிருந்த அவரது நண்பர்.
படிப்புச் செலவைச் சமாளிக்க வீட்டருகில் ஒரு டியூசன் சென்டரை நடத்திச் சமாளித்து இருக்கிறார்.
இத்தனை சிரமங்களுக்கிடையில் பாடுவதிலும் பேசுவதிலும் இருந்த ஆர்வம், அவரது நகைச்சுவை உணர்வு ஆகியவை அவருக்கென்று நண்பர்கள் வட்டாரத்தை ஏற்படுத்தியிருந்தன.
“தியாகராஜர் கல்லூரியில் என்னுடைய சக மாணவர் அவர். என்னைப் பொறுத்தவரை அவர் நல்ல நடிகர்.
நல்ல குரல் வளம் கொண்ட பாடகர். எம்.ஜி.ஆர். அறிவித்த நாடகப் போட்டிக்காக ‘மாண்டவன் மீண்டான்’ என்று நாடகம் போட்டபோது அதில் பாப்பையாவும் நடித்தார்.
பட்டிமன்றத்தில் இன்று இந்த அளவுக்குப் பரிமளிக்கக் காரணம், அவர் கதை சொல்லி நடித்துக் குரலை ஏற்றி இறக்கிப் பேசுகிற முறைதான்.
படிக்கிற காலத்தில் அவர் நாத்திகவாதி. கூடவே கம்யூனிஸ்ட் அனுதாபி. நாங்கள் படிக்கிற காலத்தில் எங்களுக்குக் கிடைத்த பேராசிரியர்கள் தமிழில் பெரும் வித்தகர்கள்.
அ.கி.பரந்தாமனார், அவ்வை துரைசாமிப் பிள்ளை, இலக்குவனார் என்று தமிழ் மேதைகளிடம் படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது பெரும் பாக்கியம். மேடைத் தமிழைப் பாமர மக்களிடம் எளிமைப்படுத்திக் கொண்டு போனதில் பாப்பையாவுக்குப் பெரும் பங்குண்டு.
சென்னைக்கு வராமல் மதுரையிலிருந்து கொண்டு இவரால் தனியிடத்தைப் பிடிக்க முடிந்திருக்கிறது என்பதே ஒரு சாதனை” என்கிறார் பாப்பையாவின் கல்லூரித் தோழரான டைரக்டர் ஏ.எஸ்.பிரகாசம்.
கல்லூரிப் படிப்பெல்லாம் முடிந்தவுடனேயே மேடைகளில் பேச ஆரம்பித்து 62ல் புதுக்கோட்டையில் பேசப்போனது ஒரு பட்டிமன்றத்திற்கு. அதுவரைக்கும் பட்டிமன்றப் பாணியில் பேசிப் பழகாத பாப்பையாவுக்கு அது புதுமையாகத் தெரிந்தது.
கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடு செய்த பட்டிமன்றத்தில் நடுவராக இருந்தவர் எம்.எஸ்.நாடார். எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்தவர் ஜீவானந்தம்.
மாறி மாறிக் கருத்து விவாதத்திற்கு வழிவகுக்கிற பட்டிமன்றப் பாணி பிடித்துப் போய்விட்டது பாப்பையாவுக்கு. அப்போது பட்டிமன்றத்தில் புகழடைந்திருந்த குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து பட்டிமன்றங்களில் பங்கெடுக்க ஆரம்பித்தார்.
பேச்சில் விறுவிறுவென்று வேகம் காட்டுகிற அவரது பாணிக்குத் தனி மரியாதை கிடைத்தது.
இந்தச் சமயத்தில் வேலூரில் உள்ள கல்லூரியிலிருந்து டியூட்டர் வேலைக்கான ஆர்டர் வந்து, வேலூருக்குப் போனார். அவரது இங்கிதமான பழக்கமும், மாணவர்களிடம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில்கூடக் காட்டிய நாசூக்கும் அவர்களை ஈர்த்தன.
ஒரு தடவை கல்லூரியில் பரீட்சை நேரம். மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ரோந்து சுற்றி வந்த பாப்பையா காப்பி அடித்துக்கொண்டிருந்த ஒரு மாணவனைக் கவனித்துப் பக்கத்தில் வந்து மெதுவாகக் கேட்டார்.
“என்னப்பா… எழுதிக் களைச்சிட்டீங்களா… ஏதாவது காப்பி சாப்பிடுறீங்களா? சும்மா… சொல்லுங்க!” அதோடு மாணவன் தலைகுனிந்து எழுத ஆரம்பிக்க ஹாலில் ஒரே சிரிப்பு.
மாணவர்களிடம் இடைவெளி காட்டாமல் பழகுவதால் மாணவர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர்.
“கண்ணன் என்கிற எனது பெயரை அன்பரசு என்று மாற்றினவர் அவர். பாரதிதாசனின் பாடல்களைக் கணீரென்ற குரலில் பாடுவார். நாத்திகவாதத்தை ஆரவாரமில்லாமல் சொல்வார்.
பொதுவாகக் கல்லூரிகளில் தமிழ் வகுப்பென்றால் மட்டம் தட்டுவார்கள். விரும்பிப் போக மாட்டார்கள். ஆனால் இவரது பேச்சுக்காகவே அவரது வகுப்புக்கு மாணவர்கள் கூட்டம் கூடிவிடும்” என்கிறார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் பாப்பையாவின் மாணவருமான அன்பரசு.
அதன் பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறையில் வேலை. மதுரைக்கு வந்ததும் இவருடன் பட்டிமன்றத்தில் பேசுவதற்கென்று சின்ன குழு உருவாகிவிட்டது.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பல இந்து மதக் கோவில்களில் பாப்பையாவின் குரல்.
அப்போது டுடோரியல் கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பேச்சாளரான கீரனும், அவரும் இணைந்து சில கூட்டங்களுக்குப் போயிருக்கிறார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிரகாரத்தில் பகவத் கீதை பற்றி இவர் பிரசங்கம் செய்யப் போக, கிறிஸ்தவ மதத்தில் சிறு சலசலப்பு.
பட்டிமன்றத்தில் கலந்துகொள்வதற்காக ராமேஸ்வரம் கோவிலுக்குப் போகும்போது அங்கு சன்னதியில் தனி மரியாதை.
இவரது பேச்சின் மூலம் நெருக்கமானவர் திருப்பராய்த்துறை தபோவனத்தைச் சேர்ந்தவரான சுவாமி சித்தானந்தர்.
சாலமன் என்று பிரியமுடன் கூப்பிடுமளவுக்கு அவரிடம் நெருக்கத்தை உண்டு பண்ணியது பாப்பையாவின் பேச்சு.
“இலக்கியத்தை எளிமையாகப் பலருக்கும் புரிகிற விதத்தில் கிராமியத்தனத்துடன் பாப்பையா சொன்னதுதான் அவருடைய பிளஸ் பாயிண்ட்.
அதனால் கல்லூரியிலும் மாணவர்களிடம் அவர் நெருக்கம் கொள்ள முடிந்தது. பட்டிமன்றங்கள், தனிப்பேச்சு என்று வெளியில் பல கூட்டங்களுக்குப் போனாலும் அவரது கல்லூரிப் பணி பாதிக்காதபடி இயங்குவார்.
87-ல் சென்னைத் தொலைக்காட்சியில் ‘குடும்பத்திற்கு ஆதாரம் கணவனா, மனைவியா?’ என்ற பட்டிமன்றத்தில் ஆரம்பித்த பிரபல்யம் அவரை உயரே கொண்டுபோய் விட்டுவிட்டது” என்று பாப்பையாவின் நண்பரும் பேராசிரியருமான ராமமூர்த்தி சொல்ல,
பாப்பையாவுக்கு ஆசிரியராக இருந்தவரும் அமெரிக்கன் கல்லூரி இணை முதல்வராக இருந்தவருமான பி.ஆபிரகாம் புகழ்ந்து சொல்கிறார்:
“பட்டிமன்றப் புகழினால் எங்கள் கல்லூரிக்கும் பெருமை. நாங்களே வெளியூர் போகிறபோது அமெரிக்கன் கல்லூரி என்றதும் பாப்பையாவின் கல்லூரியா என்று பலரும் கேட்கிற அளவுக்குப் பாப்பையா பிரபலமடைந்திருக்கிறார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பப் பின்னணி. இருந்தாலும் பாப்பையாவின் இடையறாத உழைப்பும், அவரது பேச்சுத் திறனும், சமூக அக்கறையுமே அவரை முன்னிறுத்தியிருக்கின்றன.”
இரண்டு வருடங்களுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் சாலமன் பாப்பையாவுக்குத் தற்போது பேச்சு, பட்டிமன்றத்தில் மட்டுமே முழுக் கவனம்.
சன் டிவியில் தினமும் திருக்குறளை எளிமைப்படுத்தி வழங்குகிற இவருக்குச் சிறு குடும்பம். மனைவி ஜெயபாய். விமலா பாக்கியம் என்கிற மகள்.
தியாகமூர்த்தி என்கிற மகன். இதில் மகள் விமலா பாக்கியம் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஜப்பானிய மொழி விரிவுரையாளர்.
இவர் திருமணம் செய்திருப்பது இந்து சமூகத்தைச் சேர்ந்த இன்ஜினியரான விமலாதித்தனை.
“என்ன பேசினாலும் நாமதான் முன்மாதிரியா இருந்தாகணும்” என்கிறார் இவர்களது திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிற பாப்பையா.
அப்பாவுக்கு உதவியாகக் கூடவே இருக்கும் இன்ஜினியரான மகன் தியாகமூர்த்தி.
மேடைகளில் மதுரைத் தமிழும், ராமநாதபுர மாவட்டத் தமிழும் இணைந்த ஒருவிதப் பாஷையைப் பாவனைகளுடன் விவரித்துப் பேசும் பாப்பையா நேர்ப் பேச்சிலும் எதிர்ப்
படுகிறவர்களை ஏதாவது ஒரு உறவு முறை சொல்லிக் கூப்பிடுகிறார். பளீரென்ற சிரிப்புடன் அரவணைக்கிறபடி பேசுகிறார்.
“எனக்கு என்ன குறைச்சல் தம்பி. ரொம்ப நிறைவா இருக்கேன்… சமய நம்பிக்கை அதிகமுள்ள குடும்பத்திலே பிறந்தவன் நான்…
எது கிடைக்கணுமோ அதுதான் நமக்குக் கிடைக்கும்… அதுக்கு மேலே ஆசைப்படக் கூடாது. அப்படியே வளர்ந்துட்டேன்.
கிடைத்த மட்டிலும் நிம்மதியா ‘குறையொன்றும் இல்லாத கோபாலா’ன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரிதான் இருந்துகிட்டிருக்கேன். வேறென்ன வேணும்” – திரும்பவும் ஒரு சிரிப்பு.
*
நூல்: நதிமூலம்
ஆசிரியர் : மணா
வெளியீடு: பென் பேர்ட் பதிப்பகம் (Pen Bird Publications)
விலை : ரூ. 225/-
தொடர்பு எண்: 8220063246