மா.சேதுரத்தினம் எனும் இயற்பெயருடைய இவர் புனைபெயராக மாரி. அறவாழி என்று வைத்துக் கொண்டார்.
சேலம் நகராட்சிக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்த பின்பு இந்திய அஞ்சல் துறைப் பணியில் சேர்ந்தார்.
அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டே இவர் படைத்த சிறுகதைகள் நானூற்றுக்கும் மேற்பட்டவை. இவை பல்வேறு இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
இவர் நாற்பது குமுகாயப் புதினங்களையும், ஒரு வரலாற்றுப் புதினத்தையும் படைத்துள்ளார்.
சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நாடகத்தையும், கட்டுரைகளையும் படைத்துள்ளார்.
இவரது பல சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
இவர் எழுதிய கோடுகளும் புள்ளிகளும், ஆடக சுந்தரி ஆகிய இரண்டு புதினங்களும் தமிழ்நாட்டு அரசின் சிறந்த படைப்புகளுக்கான பரிசைப் பெற்றன.
அறிஞர் அண்ணா ஆனந்த விகடனில் ‘கருமி’ என்ற பெயரில் வெளிவந்த இவரது சிறுகதையை செட்டிநாடு ‘தனவணிகர்’ நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டி புகழ்ந்து உரையாற்றியிருக்கிறார்.
அக்டோபர் – 3 : அறிஞர் மாரி அறவாழியின் நினைவுநாள்