அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி மறைந்தது ஆகஸ்டு 1951இல்.

1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார் – பொன்னம்மாளின் மகனாய்ப் பிறந்தவர். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1910 இலிருந்து இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார்.

1930-இல் உப்புச் சத்தியா கிரகத்தில் கலந்துகொண்டு அலிப்பூர்ச் சிறையில் 6 மாதச் சிறைத்தண்டனைக்கு உள்ளானார்.

கேதரின் மேயோ எனும் ஆங்கிலப் பெண்மணி இந்தியர்களை மிகக் கேவலமாய்ச் சித்திரித்து எழுதிய நூலுக்கு ”மேயோவுக்குச் சவுக்கடி” எனும் மறுப்பு நூலை எழுதி ஆங்கிலேயரின் சினத்துக்கு ஆட்பட்டார்.

‘பாரதியார் மகாகவியா?’ என்றும் ‘அவருடைய கவிதைகள் மகா கவிதைகளா?’ என்றும் கல்கி கிருஷ்ண மூர்த்தி போன்றோர் கேள்வி எழுப்பியபோது, மணிக்கொடியில் தொடர்ந்து எழுதி, பாரதி மகா கவிதான் என்று நிலைநிறுத்தியவர் வ.ரா.

 

அவர் எழுதிய கோதைத்தீவு நாவல், பெண்களால் மட்டுமே ஆளப்படும் கற்பனை உலகம். வ.ரா. வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு கருத்தை எண்ணிப் பார்த்திருக்க முடியுமா என்பது ஐயமே.


சுதந்திரன், வீரகேசரி, பிரபஞ்ச மித்திரன், தமிழ் நாடு, சுயராஜ்யா, மணிக்கொடி என்று பல பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.

மணிக்கொடியில் பேராசிரியர் கல்கியின் முதல் நாவல் “விமலா”வை வெளியிட்டார். புதுமைப்பித்தனுக்கு மணிக்கொடியில் ஆதரவு தந்தார்.

இந்தியர்களின் முன்னேற்றத்துக்குக் காரணம் அவர்களின் மூடப்பழக்க வழக்கங்களே எனும் எண்ணத்தால் அவர் அவற்றைச் சாடி, தாம் பணிபுரிந்த பத்திரிகைகளில் எழுதலானார்.

தீண்டாமை ஒழிப்பு, பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் முதலியவை பற்றி நிறைய நாவல்களை எழுதினார்.

இவரது முற்போக்கு எழுத்துகளால் கவரப்பட்ட அறிஞர் அண்ணா தமது திராவிட நாடு இதழில் அவரை “அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று போற்றியுள்ளார்.

அரவிந்த ஆசிரமத்துக்கு ஒரு முறை வந்த மகா கவி பாரதி, அங்கு தங்கியிருந்த வ.ராவின் உரைநடையைப் படித்து வியந்து, அரவிந்தரிடம், “நம் ராமசாமி அய்யங்கார் என்னமாய் உரைநடை எழுதுகிறார்!

இனி எனக்கு உரைநடையில் வேலை இல்லை. இனிக் கவிதைகளை மட்டுமே நான் கவனித்துக்கொள்ளப் போகிறேன்,” என்று சொன்னாராம்.

மேயோவுக்குச் சவுக்கடி, சுவர்கத்தில் சம்பாஷணை, வசந்தகாலம், வாழ்க்கை விநோதங்கள், கற்றது குற்றமா, சின்ன சாம்பு, சுந்தரி, கலையும் கலை வளர்ச்சியும், வ.ரா. வாசகம், ஞானவல்லி, மகாகவி பாரதியார், கோதைத்தீவு என்று பல நூல்களைப் படைத்துள்ளார்.

இவையனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளவை.

‘கோதைத் தீவு’ புதினத்துக்கு வ.ரா. எழுதியுள்ள முன்னுரை ஆண்-பெண்களின் கவனத்துக்கு உரியது: அது பின்வருமாறு:

“கோதைத் தீவு எனது நீண்ட கால முயற்சி. நான் இளைஞனாக இருக்கையில் ஆண்கள் நடத்தும் குடும்ப தர்பாரைக் கண்டு மனம் புழுங்குவேன். இந்த தர்பாரைப் பார்க்கின்ற யாவரும் பெண்களுக்குப் பரிந்து பேசுவது இயற்கை.

’இதே ஆத்திர உணர்ச்சி உன் உள்ளத்தில் இருபது வருஷத்திற்கு மேல் குறையாமல் தங்கி இருக்குமானால் நீ ஆண்களைப் பற்றி இழிவாக எழுதலாம்’ என்று ஒரு நண்பர் யோசானை சொன்னார்.

அவர் சொன்னது ஒரு வகையில் உண்மையெனக் கொண்டு இருபது வருஷம் பொறுத்திருந்தேன். என் ஆத்திரம் தணிந்தபாடில்லை.

நம்மவர்களின் வாழ்க்கை எல்லாத் துறைகளிலும் பாழாகிக்கொண்டு வருவதைப் பார்க்க என் மனம் பொருந்தவில்லை.

வீட்டை நரகமாக்கி வருவது ஆண்பிள்ளை என்பது நான் கண்ணால் பார்த்துவரும் உண்மையாகும்.

நம் நாட்டில் பெண் அடிமையாகப் பிறக்கிறாள், வளர்கிறாள், வாழ்கிறாள், இறக்கிறாள்.

வாய்விட்டுச் சொல்லச் சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமானால், பெண்கள் என்ன சொல்லுவார்களென்பதையும், என்ன செய்வார்களென்பதையும் ‘கோதைத் தீவு’ என்ற கற்பனையின் மூலம் என் சகோதர ஆண்களுக்கு எடுத்துக் காண்பிக்க முயன்றிருக்கிறேன்…”

– ஜோதிர்லதா கிரிஜா

நன்றி : திண்ணை இதழ்

Comments (0)
Add Comment