தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாத காலமாக நீடித்து வந்த நிலையில், வெவ்வேறு மானியக் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கான விவாதங்களும் நடந்தேறின.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் நேற்றைய தினம் முதல்வரான விஜய் தன்னுடைய பதிலை அளித்துக் கொண்டிருக்கும்போதே, திமுக எம்எல்ஏக்கள் தரப்பிலிருந்து கடும் அமளி ஏற்பட்டது.
தொடர்ந்து எதிர்ப்புக்குரல் எழுந்து கொண்டே இருந்த நிலையில், தன்னுடைய குரலை உயர்த்தி பேச வேண்டிய கட்டாயம் முதல்வரான விஜய்க்கு ஏற்பட்டது.
திமுக மீது பல குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்த முதல்வர் விஜய் ஒரு கட்டத்தில் ஆதாரம் போதுமா என்கிற அளவுக்கு பேசியது, நேரலையில் அப்படியே ஒளிபரப்பானது.
அதற்கு பதிலளிக்க திமுக தரப்பினர் முயன்றபோது அதற்கு பதில் அளிக்க அனுமதியுங்கள் என்று முதல்வரே சொன்ன நிலையில், சபாநாயகரான ஜேசிடி பிரபாகரை சூழ்ந்துகொண்டு திமுகவினர் கடும் அமளியை ஏற்படுத்தியதால், அவருடைய நிர்பந்தமான கோரிக்கையை ஏற்க முடியாது என்று அறிவித்ததும் அவர்கள் அவையை விட்டு முழக்கங்களோடு வெளிநடப்பு செய்தார்கள்.
சட்டசபைக்கு வெளியே சென்று செய்தியாளிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சபாநாயகர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். எங்களுக்கு உரிய அனுமதி அளிக்கவில்லை” என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று கூட்டத்தொடர் துவங்கியதுமே சபாநாயகர் முதலில் திமுக முன்னாள் அமைச்சர்களான ஏ.வ.வேலுவை பேச அழைத்தார்.
ஏ.வ.வேலு நேற்றைய பேச்சினுடைய தொடர்ச்சியாக தமிழக முதல்வர் முன்வைத்த சில குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதற்கு, சபாநாயகர் பிரபாகர், “இதற்கு முன்பும் ஏ.வ.வேலு குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பான சர்ச்சைகள் சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்றன. விவாதங்களும் நடந்தேறி இருக்கின்றன.
இந்த நிலையில் ஆதாரம் இல்லாத எதையும் அவர் முன்வைக்கவில்லை. அதனால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது” என்று திட்டமாக அறிவித்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேசியதும் இன்னும் கடும் அமளி ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சபாநாயர் தங்களது இருக்கைக்குச் சென்று அமருமாறு திமுக எம்எல்ஏக்களை கேட்டுக்கொண்ட நிலையிலும், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியவாரே இருந்ததால் அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திமுக உறுப்பினர்களும் கடுமையான முழக்கங்களோடு சட்டமன்றத்திலிருந்து வெளியேறி செய்தியாளர்களைச் சந்தித்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று திமுக எம்எல்ஏக்கள் இந்த அளவுக்கு கடும் அமளியை ஏற்படுத்தியது குறித்து தன்னுடைய வருத்தத்தை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பகிர்ந்து கொண்டார் ஜேசிடி பிரபாகர்.
– லியோ