கண்ணதாசன் 100 – 4
எத்தனையோ திரைப்படப் பாடல்கள் நம் காதுகளில் வந்து விழுந்தாலும் அதில் குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டும் நமக்காகவே இசைக்கப்பட்ட பாடலைப்போல தோன்றுகின்றன. நம் மனதுக்குள் அந்தப் பாடல் வரிகள் குடியேறிவிடுகின்றன.
அப்படிப்பட்ட நம்பிக்கையானதொரு பாடலை பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில், இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்று துவங்கும் பாடலைத் தந்திருப்பார் கவியரசு கண்ணதாசன்.
கேட்பவர் மனதில் சட்டென்று நம்பிக்கையை உருவாக்கிவிடும் எத்தனையோ, அபூர்வமான கவித்துவம் கொண்ட வரிகளை எழுதியிருக்கிற கவியரசர் மேலே குறிப்பிட்ட பாடலில் இடம்பெற்ற அனைத்து பாடல் வரிகளுமே மிகுந்த அர்த்தம் பொதிந்தவை.
அதேசமயத்தில் கேட்பவர்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பவாகவும் இருக்கின்றன.
இந்தப் பாடலில் இடம்பெற்ற ஒரு சரணம்.
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் – நீ
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று!
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை…
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்!
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க – எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல!
இந்தப் பாடல் இடம்பெற்ற ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீவித்யாதான் இந்தப் பாடலை பாடுவார்.
வழக்கத்தைவிட சற்று கனத்த உடம்புடன் அவர் பாடும்போது, அவருடைய தாயாரான எம்.எல்.வசந்தகுமாரியை நினைவுபடுத்துவது போலவே இருக்கும் அவரது தோற்றம்.
முழுக்க இசை மயமான இந்தப் பாடலில் எவ்வளவு கவிமயமான கவியரசரின் வரிகள் அமைந்திருக்கின்றன.
இந்தப்பாடலை இப்போதும் கேட்கிறவர்கள் இந்தப் பாடலையும் காது உள் வாங்கலாம், பாடலின் அர்த்தத்தையும் மனதின் வழியாகவும் உள்வாங்கலாம்.
#பாலசந்தர் #அபூர்வராகங்கள் #ஏழுஸ்வரங்களுக்குள்எத்தனை #கவியரசுகண்ணதாசன் #கண்ணதாசன் #நம்பிக்கை #கவி #KBalachander #ApoorvaRaagangal #YezhuSwarangalukkulEththanai #Kannadasan #KaviyarasuKannadasan #Hope #Poetry #TamilCinema #TamilSongs #TamilPoetry