பெண்மையே பாவம் என்றால், மன்னவரின் தாய் யாரோ?

கண்ணதாசன் 100 : 1

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான வரிகளை பகிர்ந்துகொள்ளும்மாறு வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

அதன்படி மதுரையைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி என்ற வாசகர் அனுப்பிய முதல் பதிவிலிருந்து இந்தத் தொடரைத் துவங்குகிறோம்.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் வாழ்ந்த காலம் வரை தொடர்ந்து திரைப்படத்துறையில், பாடல், வசனம், தயாரிப்பு, சில படங்களில் நடிப்பு என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்.

அவரது பல ஆயிரம் பாடல்களில் எனக்குப் பிடித்தப் பாடல் இது. 

1965-ம் ஆண்டு ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்து வெளிவந்த ‘வாழ்க்கைப் படகு’ படத்தில், கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்திருப்பார். கதாநாயகியாக நடித்தவர் தேவிகா.

அவரும் ஜெமினியும் காதலிக்கிறபோது, இடையில் சிறு பிரச்சனை உருவாகிறபோது, நடனமாடியபடியே கதாநாயகியான தேவிகா பாடுகிற மாதிரியான இந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். பாடியவர் பி.சுசீலா. 

“உன்னைத்தான் நான் அறிவேனே“ என்று துவங்கும் இந்தப் பாடலில் கீழ்க்கண்ட வரிகள் நிறைவாக இடம்பெற்றிருக்கும்.

காதலித்தல் பாவமென்றால்
கண்களும் பாவமென்றோ

கண்களே பாவமென்றால்

பெண்மையே பாவமன்றோ

பெண்மையே பாவமென்றால்

மன்னவரின் தாய் யாரோ

                               (உன்னைத்தான்)

இந்தப் பாடலில் இடம்பெற்ற இந்த வரிகளில் தெரியும் கூர்மைதான் கவியரசரின் கவித்துவத்திற்கு வலுவான சான்றைப் போல் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

காதலின் மேன்மையை மட்டுமல்ல, பெண்மையின் மேன்மையையும் இதைவிட யாரால் இந்தளவுக்கு எளிமையாகவும் வலிமையாகவும் சொல்லிவிட முடியும்?

– பி.ராமமூர்த்தி, மதுரை

Comments (0)
Add Comment