மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்!

கண்ணதாசன் 100 – 3

“காதலாகி கசிந்துருகி“ என்று பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து ஒரு சொல்லாடலை நீங்கள் வாசித்திருக்கலாம்.

அப்படி காதல் கசிந்து உருகும்படி மிகவும் நேர்த்தியான பிரியத்தை எளிய சொற்கள் மூலம் பல பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

அப்படிப்பட்ட காதலுக்கு உதாரணமாக அவருடைய பல திரைப்பட பாடல்களைச் சொல்லலாம் என்றாலும் இங்கு நான் குறிப்பிட விரும்புவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், ஜமுனாவும் சேர்ந்து நடித்த நிச்சய தாம்பூலம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைத்தான்.

1962-ம் ஆண்டு ‘நிச்சயத் தாம்பூலம்’ படத்தில் இடம்பெற்ற “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா” என்று துவங்கும் பாடலை மிகவும் அருமையானபடி தன்னுடைய அழுத்தமான குரலில் பாடியிருப்பார் டி.எம்.சௌந்திரராஜன்.

படத்திலும் இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் காட்டுகிற காதல் வசப்படும் முகபாவங்களும், அதற்கு ஜமுனா தன் முகத்தில் காட்டும் நலினமான முகபாவங்களும் பார்க்க அவ்வளவு ரசனையாக இருக்கும்.

இன்றைய ஜென்ஸீ கிட்ஸ்-க்கு இத்தகைய பாடலும் பாடல் வரிகளும் சென்டிமெண்ட்டாகத் தெரியலாம்.

ஆனால், 60-களில் இருந்த காதலை மென்மையாக நமக்குக் கடத்தியிருக்கிறது இந்தப் பாடல்.

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்.

– இதைவிட வெகு எளிமையாக காதலின் உயர்வைச் சொல்லிவிட முடியாது என்கிற அளவுக்கு மேன்மையான கவித்துத்துடன் இருக்கின்றன கவியரசரின் பாடல் வரிகளை இசை மற்றும் கவித்துவ ரசனை கொண்ட யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. 

  • எஸ்.கணேஷ், திண்டுக்கல்.
Comments (0)
Add Comment