கேள்வி: கவிதை ஆக்கம், திரைப்படப் பாடல் ஆக்கம் இவை இரண்டுக்குமான தனித் தன்மையாக எதைப் பார்க்கிறீர்கள்?
கவிஞர் மு.மேத்தா பதில்: கவிதை என்னுடைய சொந்த படைப்பு. என்னுடைய சொந்த படைப்பில் வேறுயாரும் குறுக்கிடுவதற்கு இடம் கிடையாது.
ஆனால், என்னுடைய பாடலில் பிறர் கைவைப்பதை நான் அனுமதித்தாக வேண்டும். அதுதான் பாடலாசிரியன் என்கிற பணிக்கு நான் செய்கிற மரியாதை. கவிதை என்பது ஒரு கவிஞனுடைய சுதந்திர மலர்ச்சி.
ஆனால், திரைப்பாடல் என்பது பலபேருடைய கூட்டு முயற்சி. திரைப்படப் பாடல் என்பது அந்தப் பாடல் இடம் பெறுகிற சூழலை, அந்தப் பாடலை பாடும் கதாபாத்திரத்தை, அந்த கதாபாத்திரத்தின் உணர்வை கதாபாத்திரத்தின் கருத்தை, அந்த இசையின் மீது கொண்டு வந்து வைத்து சொல்வது.
இசைக்காக சில சொற்களை நாம் நீக்க நேரலாம். இசைக்காக சில வடிவங்களை மாற்ற வேண்டிய அவசியம் நேரலாம்.
கதாபாத்திரத்தின் தேவைக்கருதி என் சொந்தக் கருத்தும் அல்லாத வேறொரு கருத்தை நான் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
திரைப்பாடலில் பல்வேறுபட்டவர்களின் எண்ணப் போக்கிற்கும் இயைந்த ஒரு முயற்சியைத்தான் நான் செய்ய முடியுமே தவிர, கவிதையைப் போல என்னுடைய கருத்தை என்னுடைய ஆளுமை மிக்க சிந்தனைகளை சொல்லிவிட முடியாது.
ஆனால் கவிதையைக் காட்டிலும் திரைப்பாடலுக்கு ஒரு மிகப்பெரிய வசதி உண்டு. கவிதை மெல்ல மெல்ல மக்களை சென்று சேரும்.
திரைப்படப் பாடல் உடனடியாக உள்ளத்திலே போய் பதியும். அது வழங்குகின்ற வரிகள் ‘வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்பதாகக்கூட இருக்கலாம்.
‘தேராட்டம் காரினிலே ரொம்ப திமிரோடு போறவரே எங்கள் ஏரோட்டம் நின்று போனால் உங்கள் காரோட்டம் என்ன ஆகும்?’ என்று கேட்கிற வரிகளாகக்கூட இருக்கலாம்.
‘ஏரோட்டம் நின்று போனால் உங்கள் காரோட்டம் என்னவாகும்?’ என்று ஒவ்வொரு கிராமத்துக்காரனையும் பாட வைக்கிறதே அது கவிதையைவிட சட்டென்று தீப்பற்றி கொள்கிற உணர்ச்சியை உண்டாக்குகிறது.
‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் இடம் பெறுகின்ற ‘தாஜ்மஹாலின் காதிலே இராம காதை கூறலாம், மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்’ என்ற பாடல் வரியை நான் கவிதையிலே எழுதி இருந்தால் அது 10 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, லட்சக்கணக்கான மக்களைத் தான் சென்றடைந்திருக்கும்.
ஆனால் கோடிக் கணக்கான தமிழர்கள், உலகத்திலே வாழுகிற அத்தனை திசைகளிலும் இருக்கிற தமிழர்களைப் போய் இந்த சிந்தனைகளை சட்டென்று விதைக்கிற ஆற்றல் இந்த திரைப்பாடலுக்கு உண்டு.
திரைப்படப் பாடலை தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டோம் என்று சொன்னால் சமூகத்திற்கு மிகுந்த பயன் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.
– நன்றி: கீற்று இதழ்