ஜமீன் பரம்பரை – ஓர் பார்வை!

ஜமீன் என்ற வார்த்தையை இந்த தலைமுறையினர் திரைப்படங்களில் மட்டுமே அறிந்திருப்பர். பெரும்பாலும் வியப்பிற்கும் பிரம்மிப்பிற்கும் உரிய ஒரு வார்த்தையாகவே இது உள்ளது.

தமிழ்நாட்டில் ஜமீன்தார் முறை என்பது மன்னர் ஆட்சிக் காலத்திலும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதிகளை நிர்வகித்து வரி வசூலித்த முறையைக் குறிப்பிடுகிறது.

1802-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த நிரந்தர நிலவரித் திட்டத்தின் படி தமிழகத்தில் இருந்த பல பாளையங்கள் மற்றும் நிலப்பகுதிகள் ஜமீன்களாக மாற்றப்பட்டன.

ஜமீன்தார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் வேளாண்மை வரி வசூலித்தல், நிதி வழங்குதல் மற்றும் சிறிய அளவிலான படைகளைப் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர்.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராஜாக்களைப் போல் வாழ்ந்தனர்.

பிரம்மாண்டமான அரண்மனை, யானைகள், குதிரைகள், சொந்தமாக பரந்து விரிந்த நிலப்பரப்புகள் என்று பெரும் பகட்டுடன் வாழ்ந்து வந்தனர்.

தங்கள் பகுதி மக்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளாகவும் சமூகத்தை நடைமுறைப்படுத்தும் காவலர்களாகவும் அவர்கள் செயல்பட்டனர்.

குட்டிக் குட்டி நாடுகளாகக் கட்டி ஆண்ட ஜமீன் ராஜ்யம், வெள்ளையர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தபின் படிப்படியாக மறைந்தது.

பின்னர் 1948-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜமீன்தாரி ஒழிப்பு முறைச் சட்டம் மூலம் தமிழ்நாட்டில் ஜமீன்கள் ஆட்சி முறை முழுமையாக ஒழிக்கப்பட்டது.

என்றாலும் ஜமீனின் ஆளுகைக்கு உட்பட்ட அரண்மனைகளும் நிலபுலன்களுமாக இன்றைக்கும் ஜமீன் வாரிசுகள் கம்பீரமாக அரண்மனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட சில ஜமீன்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் அறிந்து கொள்வோம்.

பெரியகுளம் ஜமீன் :

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளம் ஜமீன் அரண்மனை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பழமையான கட்டிடம் ஆகும்.

விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் படைகளில் இருந்த ராமபத்திர நாயகரே இதன் முதல் ஜமீன்தார் ஆவார்.

பெரியகுளம் நகரம் வராக நதியால் வடகரை, தென்கரை என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனை தற்போதும் ஜமீன் வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் அவர்களின் பராமரிப்பிலும் இருந்து வருகிறது.

திருமங்கலம் எல்லைப் பகுதி வரையிலும் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது.

அந்த காலத்தில் இங்கு வேலை பார்த்தவர்களுக்கு உணவும் நெல்லும் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. இதனை கும்பா சோறு முறை என்பார்கள்.

பெரிய அகப்பையில் சோறும் குழம்பும் கலந்து கொடுப்பார்கள். ஒரு அகப்பை சோறை இரண்டு வேளைக்கு இரண்டு பேர் உண்ணலாம்.

இந்த ஊரில் இருந்த பெண் பிள்ளைகள் கல்வி கற்க இந்த ஜமீன் பரம்பரை மூலமே பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டது. இன்றும் இதன் மூலமாக கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெறப்படுகின்றன.

இந்த அரண்மனையின் பழமை மாறாத தோற்றம் மற்றும் பாரம்பரிய வடிவமைப்பு காரணமாக இங்கு பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன.

சுற்றிலும் அடர்ந்த மரங்கள், இயற்கைச் சூழல் மற்றும் அருகில் கும்பக்கரை அருவி போன்ற பகுதிகள் அமைந்துள்ளதால், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனை பகுதியை ஆர்வத்துடன் கடந்து செல்கின்றனர்.

சிங்கம்பட்டி ஜமீன் :

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை இன்றும் ஜமீன்தார் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

தெப்பம், அந்தப்புரம், மாளிகை, வேலையாட்களுக்கு வீடுகள் என்று பரபரப்பாக செயல்பட்ட அரண்மனை இன்றும் தலைமுறை கடந்து நிற்கிறது.

பெரும்பாலும் ஒரு ஜமீன் குடும்பம் இன்னொரு ஜமீன் குடும்பத்தினருடன் மட்டுமே திருமணம் செய்வர்.

ஜமீன் ஆட்கள் ஊருக்குள் போகும்போது வீதிக்கு வந்து மக்கள் வேடிக்கை பார்க்கும் வழக்கமும் இருந்து வந்தது.

இன்று இந்த அரண்மனையில் ஜமீன்தார்கள் பயன்படுத்திய பழங்கால உடைகள், ஆயுதங்கள், தந்தப் பல்லக்குகள், குறுநில மன்னர்கள் எழுதிய வரலாற்று ஆவணங்கள் மற்றும் மன்னர் காலப் பொருட்கள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தேவாரம் ஜமீன் :

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் ஜமீன் அரண்மனை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பாரம்பரிய இடமாகும்.

இது நாயக்கர் வம்சாவளியைச் சேர்ந்த ஜமீன்தார்களால் ஆளப்பட்டு வந்த பெருமைக்கு உரியது.

இந்த அரண்மனை வாழ்க்கையில் பெண்கள் எவரும் வெளியில் செல்லும் வழக்கம் இருந்ததில்லை.

திருமணம் முதல் கோவில் திருவிழாக்கள் வரை, ஊரில் உள்ள எந்த ஒரு நிகழ்விற்கும் ஜமீன் குடும்பத்திற்கே முதல் மரியாதை வழங்கப்பட்டது.

ஜமீன் பெண்கள் திருமணமாகி போகும்போது பணியாட்களும் சேர்ந்தே புகுந்த வீட்டிற்கு செல்லும் வழக்கமும் இருந்து வந்தது.

இந்த மாளிகையில் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த வாரிசுகள் வசித்து வருவதோடு தங்களின் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய பொக்கிஷங்களையும் பாதுகாத்து வருகின்றனர்.

இதில் தற்போது பழங்கால கலை நயமிக்க பொருட்கள் காட்சிப் பொருள்களாக மக்களுக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜமீன்தார்கள் பயன்படுத்திய போர்வாள், பழங்கால பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய வில்வண்டி, அக்காலத்து கிராமபோன் இசைக்கருவி மற்றும் இசைத் தட்டுகள், கலைநயம் மிக்க விலை உயர்ந்த மரப்பெட்டிகள் ஆகியவை இதில் அடங்கும்.

ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சமாக விளங்கி, கால மாற்றத்தினால் சரிந்து போன சகாப்தமாக ஜமீன் முறை இருந்த போதிலும், தமிழ் மொழிக்கும் கலைக்கும் பண்பாட்டிற்கும் அவர்கள் செய்த பங்களிப்புகள் வரலாற்றில் என்றும் அழியாத சுவடுகளாக நிலைத்திருக்கும்.

S. வாணி

Comments (0)
Add Comment