சில பாடல்களே வெளிவந்திருந்தாலும் இப்போது சட்டென்று அதைப் பாடியவரின் பெயரும் முகமும் எதாவது ஒரு விதத்தில் தெரியவந்துவிடுகிறது.
ஆனால், 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு சில அருமையான பாடல்களைப் பாடியவர்களின் குரல் நினைவிலிருக்கிறது. அந்தப் பாடல் வரிகள் நினைவிலிருக்கின்றன.
அதேசமயம் அதைப் பாடியவரின் முகமும் பெயரும் நமக்குப் பரவலாகத் தெரிவதில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் மிகவும் பிரபலமான பாடலான ‘யாரடி நீ மோகினி’ என்ற பாடலை டி.எம்.எஸ்-ஸோடு இணைந்து அற்புதமாகப் பாடியிருப்பார் பாடகி ஜமுனா ராணி.
அந்தப் பாடல் தற்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது.
நடிகர் திலகம் நடித்த பாசமலர் படத்தில் எம்.என்.ராஜம் பாடுவதாக வரும் ‘பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்’ என்ற பாடலைப் பாடியவரும் ஜமுனா ராணிதான்.
80-களில் பரலால் முணுமுணுக்கப்பட்ட ‘புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக’ என்ற பாடலிலும் இணைந்து பாடியிருப்பார் ஜமுனா ராணி.
மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடுவது மாதிரியே ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ பாடலையும் பாடியிருப்பார் ஜமுனா ராணி.
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான டப்பாங்குத்து பாடலான ‘மாமா.. மாமா… மாமாமா’ என்கின்ற பாடலை மிகவும் லாபகமான தொனியில் பாடியதும் இவர்தான்.
நடிகர் திலகம், சாவித்திரி நடித்து, 1952-ல் வெளிவந்த தேவதாஸ் படத்தில் இவர் குழந்தை குரலில் பாடிய ‘ஓ தேவதாஸ்’ என்ற பாடலும் அப்போது பிரபலம்.
சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி ஆகியோர் நடித்த பலே பாண்டியா படத்தில் இடம் பெற்ற பாப்புலரான பாடலான ‘அத்திக்காய்’ என்று துவங்கும் பாடலிலும் டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலாவுடன் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார் ஜமுனா ராணி.
அதைப்போலவே நடிகர் சந்திரபாபுவின் சில பிரபலமான திரைப்பட பாடல்களிலும் இணைந்து பாடிக் கலக்கியிருக்கிறார் ஜமுனா ராணி.
பிரபல ஒலிப்பதிவாளர் சொன்னபடி, பாடல் பாடுகிறபோதே நடனமாடிய படியே ஒலிப்பதிவுக் கூடத்தில் தன்னுடன் பாடும் சந்திரபாபுவை மைக்கிற்கு முன்னால் வந்து பாடும்படி ஒழுங்காக பாட வைக்க கூடவே பாடிய ஜமுனாராணி படாதபாடு பட்டிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை தனது சமகாலத்துப் பாடகியான எம்.எஸ்.ராஜேஷ்வரியுடன் இணைந்து பாடியிருப்பவரும் இவர்தான்.
இப்படி தமிழ் திரையிசையில் பல்வேறு விதமான பாவங்களுடன் கூடிய அருமையான பாடல்களை பாடியிருக்கிற ஜமுனாராணி அண்மையில் மறைந்தபோது, அவருக்காக மிக உருக்கமான குரலில் தனது அஞ்சலியை பதிவு செய்திருக்கிறார் பின்னணி பாடகியான பி.சுசீலா.
ஒரு சகோதரியைப்போல தன்னுடன் பழகிய ஜமுனாராணி தன்னைவிட்டுச் சென்றதை இழப்பாகக் குறிப்பிட்டு தனக்கும் ஒரு இடத்தை ரிசர்வ் செய்து வைத்திருப்பார் ஜமுனாராணி என்று உணர்வுபூர்வமாக பி.சுசீலா குறிப்பிட்டது பார்க்கிற பலரை நெகிழ வைத்திருக்கும்.
– லியோ