கண்ணதாசன் 100 : வாசகர்கள் பங்கேற்கலாம்!

கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு துவங்கி இருக்கிறது.

“காலை குளித்தெழுந்து,
கருஞ்சாந்து பொட்டுமிட்டு,
காத்திருந்தேன் காத்திருந்தேன் உன் வரவை
கடைக்கண்ணால் பார்த்திருந்தேன்.”
– என்று தன்னுடைய இளமைப் பருவத்திலேயே அவர் பிறந்த கிராமமான சிறுகூடல்பட்டியில் எழுத ஆரம்பித்துவிட்டார் கவியரசு கண்ணதாசன். அதற்குப் பிறகு தத்து கொடுக்கப்பட்டார்.

அதன்பின்பு அவர் திரையுலகிற்குள் நுழைந்து, பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி மார்டன் தியேட்டர்ஸ் உள்ளிட்ட அன்றைய திரைப்பட நிறுவனங்களில் முக்கிய பங்காற்றி, திரைத்துறையில் தன்னை படிப்படியாக வளர்த்துக் கொண்டவர்.

திராவிட இயக்க இயக்கம் சார்ந்தவர்கள் திரைப்படத் துறையில் நுழைந்த நேரத்தில்தான் கவியரசர் கண்ணதாசனும் திரை உலகுக்குள் நுழைந்தார். பல படங்களுக்கு வசனமும் எழுதினார்.

அதில் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரனும், ரவீந்திரனுடன் அவர் இணைந்து எழுதிய நாடோடி மன்னனும் முக்கியமானவை.

நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். வரும் காட்சியில், அவர் இப்படி ஒரு வசனத்தை எழுதி இருப்பார்.

“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே ஒழிய, என்னை நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை”.

இந்த வசனம் அப்போது மட்டுமல்ல இப்போதும் கண்ணதாசனின் பெயரைச் சொல்லும் ஒரு முத்திரை வசனமாக இருந்து கொண்டிருக்கிறது.

அதற்குப் பிறகு பீம்சிங்கின் இயக்கத்தில் எத்தனை பாடல்கள். அதிலும், ‘ப’ வரிசைப் படங்களில் பெருமளவில் கண்ணதாசனின் கொடி உயிரே பறந்து பலரையும் கவனிக்க வைத்தது.

அவரே, வானம்பாடி, கவலை இல்லாத மனிதன், மாலையிட்ட மங்கை என்று பல படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.

பராசக்தி துவங்கி சூரியகாந்தி, அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் தலைக் காட்டவும் செய்தார்.

திரையிசையில் மட்டுமல்ல மாங்கனி, ஆட்டணத்தி ஆதிமந்தி என்கின்ற சிறு காவியங்களையும் எளிமையான கவி நடையில் புனைந்திருப்பது ஏனோ பெருமளவில் கவனம் பெறவில்லை.

அதே மாதிரியே உரைநடையில் அவர் கையாண்ட கவித்துவமான மொழிநடை அபாரமானது.

அவரது புஷ்பமாலிகா, ஞானமாலிகா உள்ளிட்ட பல நூல்களில், வங்கக் கவிஞர்களான ரவீந்திரநாத் தாகூருக்கு இணையான அபூர்வமான மொழிநடையைக் கையாண்டிருப்பார்.

இதோடு இயேசு காவியம் உள்ளிட்டவற்றையும் அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற நூல்களையும் எழுதி அதை பரவலாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்.

திரையுலகில் மட்டுமல்ல, இலக்கிய உலகிலும், பத்திரிகை உலகிலும் அவர் பெயரிலேயே வெளியான கண்ணதாசன் என்ற இதழை நடத்தியது வரை அவருடைய பங்களிப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பலதரப்பட்ட இசையமைப்பாளர்களின் இசையில், தன்னுடைய கவிப் பயணத்தைத் துவங்கிய கண்ணதாசன், இறுதியாக ‘மூன்றாம் பிறை’ படத்தில் எழுதிய “உனக்கே உயிரானேன்… என்னாலும் என்னை நீ மறவாதே” என்கின்ற மறக்க முடியாத அபூர்வமான, நெகிழ்வான பாடலோடு அவர் மறைந்து போனார்.

ஆனாலும், இன்னும் அவரது எழுத்துக்களும், திரையிசையில் அவர் நிகழ்த்திய அற்புதங்களும் நமது நினைவில் நூற்றாண்டைத் தொட்ட நிலையிலும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.

கவிஞர் கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக, திரையிசையில் பாட்டு எழுத வந்த கவிஞர் வாலி தன்னை பெரிதும் பாதித்து, தன்னுடைய வாழ்க்கையே மாற்றியமைத்த பாடலாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய “மயக்கமா கலக்கமா” என்கின்ற பாடலைப் பற்றி பலரிடமும் சொல்லியிருக்கிறார்.

பல பேட்டிகளில், தனக்கு இந்த திரை இசை வாழ்வைத் தந்தவர் கண்ணதாசன் தான் என்று அடிக்கடி நினைவு கூறி இருக்கிறார்.

இப்படி பலருக்கு பலதரப்பட்ட சந்தர்ப்பங்களை கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் உருவாக்கி தந்திருக்கலாம்.

‘தாய்’ இதழின் வாசகர்களான உங்களுக்கும் இதைப் போலவே சில அனுபவங்கள் கவிஞர் கண்ணதாசனின் பாடல்களைச் சார்ந்து ஏற்பட்டிருக்கலாம்.

மிகவும் மனதை நெகிழ வைத்த அவரது வரிகளை, அவரது நூற்றாண்டு கொண்டாடப்படுகிற இந்தத் தருணத்தில் தாய் இதழுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற “ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்” என்று துவங்கும் பாடலில், இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.

“நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று”

– இது மாதிரி பல பாடல்கள் இருக்கும்.

அதில் நான்கு வரிகளை மட்டும் நீங்கள் சுட்டிக்காட்டி அவை எந்தப் படத்தில் இடம் பெற்றவை எதனால் உங்களுக்கு பிடித்திருக்கின்றன என்பதை மிகச் சுருக்கமாக 300 வார்த்தைகளுக்குள் எழுதி அனுப்புமாறு கவியரசரின் ரசிகர்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கண்ணதாசன் – 100 என்ற இந்த கவியரசரின் மேற்கோள்கள் தொடர்ந்து நூறு நாட்கள் தொடர்ந்து வெளிவரும்.

அதன் நிறைவில் கண்ணதாசனைப் பற்றி மிகவும் பாராட்டும்படி நினைவூட்டிய 10 பேர்களுக்கு கண்ணதாசன் நூல்களை ‘தாய்’ இதழ் சார்பாக நாங்கள் அனுப்பி வைக்கிறோம்.

கவியரசரின் நூற்றாண்டு தருணத்தில், அவரை இதயபூர்வமாக நினைவு கூறுவோம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – thaaii2019@gmail.com

#கவியரசர்கண்ணதாசன் #கண்ணதாசன் #வானம்பாடி #கவலைஇல்லாதமனிதன் #மாலையிட்டமங்கை #மாங்கனி #ஆட்டனத்திஆதிமந்தி #புஷ்பமாலிகா #ஞானமாலிகா #அர்த்தமுள்ளஇந்துமதம் #மூன்றாம்பிறை #மயக்கமா #கலக்கமா #Kannadasan #KaviyarasuKannadasan #Vaanampadi #KavalaillathaManithan #MalaiyittaMangai #Maangani #AattanathiAathimandhi #PushpaMalika #GnanaMalika #ArthamullaHindumatham #MoondramPirai #MayakkamaKalakkama 

 
 
Comments (0)
Add Comment