“நல்ல காலம் வருது அல்லது கெட்ட காலம் வருது” என்று முன்பெல்லாம் கிராமங்களிலும் பெருநகரங்களிலும் குடுகுடுப்பைக்காரர்கள் சத்தம் எழுப்பியபடி ஓங்காரமாய் குறி சொல்வதை கேட்டிருக்கிறோம்.
அப்போதெல்லாம் அம்மாதிரியான குடுகுடுப்பைக்காரர்களின் சத்தம் குறைந்துபோய் விட்டாலும் அதே வேலையைத்தான் கருத்துக்கணிப்பு அல்லது சர்வே என்கிற பெயரில் சத்தத்துடன் செய்து கொண்டிருக்கின்றன வெவ்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள்.
மூன்றரை மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டியும் அதே மாதிரி நவீனத் தொழில்நுட்பக் குடுகுடுப்பை முழக்கி, விதவிதமாக ஆட்சி யார் அமைப்பார்கள் என்று பல்வேறு ஆருடங்களைச் சொல்லின தொலைக்காட்சி ஊடகங்கள்.
ஊடகங்கள் தாமாகச் சொல்லின என்பதைவிட அப்படிச் சொல்ல வைக்கப்பட்டன என்பதே சரி.
தொலைக்காட்சியின் இத்தகைய விநோதப் புள்ளிவிவர கோலம்போட்ட ஆருடங்களை எல்லாம் துடைத்துத் தள்ளிவிட்டார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள்.
ஆக, தொலைக்காட்சிகள் எந்தவிதமான கருத்தாக்கத்தை உருவாக்குகின்றன அல்லது உருவாக்க நிர்பந்திக்கப்படுகின்றன என்பதை யார் உணர்ந்திருப்பார்களோ இல்லையோ, தற்போது தமிழக முதல்வரான விஜய் நன்றாக உணர்ந்திருப்பார்.
அதாவது, காட்சி ஊடகங்கள் உருவாக்கும் ஜீ-பூம்பா வேலையை புகைமூட்டமாக பார்க்கலாமே ஒழிய, அதை நம்பிவிட முடியாது என்பதை அனுபவித்தே உணர்ந்திருப்பார் விஜய். அதே மாதிரி வேலைதான் தற்போதும் நடக்கிறது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பே அதிலும் குறிப்பாக அவர் தன்னுடைய ஆட்சியைக் கூட்டணியின் பலம் இல்லாமல், தன்னை திடப்படுத்திக் கொள்வதற்கு முன்பே வழக்கம்போல தொலைக்காட்சி ஊடகங்கள் 2029-ல் நடைபெற போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக தமிழக முதல்வரை முன்னிறுத்தி ஒரு சர்வேயும் நடத்தி அதையும் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.
முக்கியமாக சி ஓட்டர்ஸ் என்கின்ற நிறுவனம் விஜய் பதவியேற்ற 50 நாட்களுக்குப் பிறகு ஒரு கருத்துக் கணிப்பை நாடு முழுக்க நடத்தியதாகச் சொல்லி, அந்த சர்வேயின் முடிவுப்படி 9.2 சதவீத அளவுக்கு தவெக தலைவரான விஜய்க்கு ஆதரவு இருப்பதாக, ஒரு தகவலை வெளியிட்டு அரசியல் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது.
தற்போது, அதை வழக்கம்போல தொலைக்காட்சி விவாதங்களில் வெப்பம் பரவ விவாதிக்கிறார்கள். தமிழக சட்டமன்றத்திலேயே சில தவெகவை சார்ந்தவர்கள் விஜய் பிரதமராகும் கனவைச் சொல்கிறார்கள்.
தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், முக்கியமான ஒன்றை சொல்ல வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு தவெக தமிழகத்தில் ஆட்சி அமைக்காது என்கிற விதத்தில் ஒருவிதமான புள்ளிவிவரம் கலந்த மாயக் கருத்தாக்கத்தை உருவாக்கிய அதே தொலைக்காட்சி சாதனங்கள்தான் தற்போது, தானாக அவரது பெயரை பிரதமர் போட்டிக்கான தேர்வு வரிசையில் நிற்க வைத்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பு திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியவர்கள் இப்போது அவரை பின் ஒதுக்கி விஜய்யின் பெயரை ஏன் முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள்?
இதை அந்த ஊடகங்கள் தாமாக செய்கின்றனவா? அல்லது செய்ய பணிக்கப்படுகின்றனவா?
இதற்குப் பின்னணியில் விஜய்யை பிரதமராக்க விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர்கள் இருப்பார்கள் என்று சிலர் நினைக்கலாம்.
அதேசமயத்தில் மிக அண்மையில் யாரும் எதிர்பாராத விதத்தில், விஜய் தமிழக முதல்வராக அமர்ந்து அவர் பதவிக்காலத்திற்கான கெடுவை எதிர்க்கட்சிகள் மாற்றி மாற்றி அறிவித்துக் கொண்டிருக்கையில்தான் காட்சி ஊடகங்களில் விஜய்யை பிரமதர் பதவிக்கான வேட்பாளராக நகர்த்தும் அரசியல் தந்திரம் நடக்கிறது என்றும் கருதலாம் இல்லையா?
இதன்மூலம் தற்போது தவெகவுடன் அங்கம் வகிக்கிற காங்கிரசிலும் ஒருவிதமான சலசலப்பை ஏற்படுத்தி அவர்களை அந்தக் கூட்டணியிலிருந்து பிரிக்க வழிவகுக்கலாம்.
அதற்கான அறிகுறிகளை தற்போது தவெக கூட்டணியில் இடம்பெற்றிருக்கிற தவெக அமைச்சர்களும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆக, தவெகவின் வளர்ச்சியையும் தமிழக முதல்வரான விஜய்யின் வளர்ச்சியையும் அரசியல் ரீதியாக செறித்துக்கொள்ள முடியாத மாநிலக் கட்சியோ அல்லது தேசிய கட்சியோ கூட இம்மாதிரியான கருத்தாக்கத்தை உருவாக்குவதில் பின்னணியாக இருந்திருக்கலாம்.
அதேசமயம் இதற்கு முன்பு பிரதமர் பதவிக்கு தமிழகத்திலிருந்து யாரும் நகர்த்தப்படவில்லையா என்ற கேள்வி இயல்பாக எழலாம்.
காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரான காமராஜர் நினைத்திருந்தால், தானே பிரதமராக ஆகியிருக்கலாம்.
இருந்தபோதும், அவர் தன்னை முன்னிறுத்தாமல் இந்திராகாந்தி போன்றவர்களையே பிரதமர் பதவிக்கு நகர்த்தினார் என்பது வரலாறு.
அடுத்து, மூப்பனார் பிரதமர் பதவியை நோக்கி நகர்த்தப்படுவார் என்கின்ற தகவல்கள் பரவியபோது, காங்கிரசிலேயே பல்வேறு விதமான முட்டுக்கட்டைகள் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
“மோடியா? இந்த லேடியா?” என்ற முழக்கத்துடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவிற்கும் பிரதமர் பதவி குறித்த விருப்பம் இருந்ததை அவருக்கு நெருக்கமானவர்களே வெவ்வேறு காலக்கட்டங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், அவரது கனவை சிதைக்கும் விதத்தில் சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவின்போது, அப்போது பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்.கே.அத்வானியும் வந்திருந்தார்.
அப்போதைய குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடியும் வந்திருந்தார்.
இருவதையும் மேடையில், அமர்த்தியவாரே குஜராத் முதல்வரான மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக முன்னிறுத்த வேண்டும் என்கின்ற விருப்பத்தை வெளியிட்டார் அப்போதைய ‘துக்ளக்’ ஆசிரியராக இருந்த சோ.
அந்தத் தகவல் அப்போது வெளிவந்தபோது, அது தேசிய அளவில், பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
ஆனால், அத்தனை சர்ச்சைகளுக்குப்பிறகு குஜராத் முதல்வராக அதுவரையிருந்த நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நகர்த்தப்பட்டு, பிரதமராகவும் ஆனார் என்பதும் இங்கு நடந்த அரசியல் வரலாறு.
அதற்கான துவக்கம் நடந்ததும் தமிழகத்தில்தான்.
நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் எண்ணிக்கை அதிகமான நிலையில், திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் பெயர் தேசிய அளவில் அடிபட்டபோது அப்போதைய செய்தியார்கள் சந்திப்பின்போது, செய்தியாளர்களே அது குறித்துக் கேட்டபோது கலைஞர் சொன்ன பதில், “என் உயரம் எனக்குத் தெரியும்”
மிகவும் முதிர்ச்சியான, பக்குவப்பட்ட பதிலை அப்போது அளித்திருந்தார் கலைஞர்.
அதுமாதிரியான சுருக்கமான தன்னிலை விளக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தமிழக முதல்வரான விஜய்.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்கிற முழக்கத்தைத் தொடர்ந்து சொல்லிவந்த திமுக, முதலில் கலைஞரின் மனசாட்சியாக கருதப்பட்ட முரசொலி மாறனை தேசிய அரசியலில் பங்கெடுக்க டெல்லிக்கு அனுப்பி அவரை மத்திய கூட்டணி அரசிலும் மாறி மாறி இடம்பெற வைத்தது.
அவருக்குப் பிறகு தயாநிதி மாறன் போன்றோர் இடம்பெற்றார்கள்.
அதன்பிறகு கலைஞரின் மகனான மு.க.அழகிரி மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பை ஏற்க டெல்லிக்கு அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லிக்கு எம்பியாக அனுப்பப்பட்டவர் கனிமொழி.
திமுக குடும்பத்திற்குள் சிலச்சில பிரச்சனைகள் உருவானபோதெல்லாம் சம்பந்தப்பட்ட நபர்களை வடதிசைக்கு அதாவது டெல்லிக்கு அனுப்பிவிடுவது திமுகவின் வழக்கமாக இருந்திருக்கிறது.
முதலில் மு.க.அழகிரி அனுப்பப்பட்ட மாதிரியே பிறகு அனுப்பி வைக்கப்பட்டவர் கனிமொழி.
அதே கனிமொழி தான் மாநில அரசியலுக்கு திரும்ப விரும்புவதாக ஒரு செய்தி பரவியபோது அதை திமுக தலைமை விரும்பவில்லை என்றும் செய்தி பரவியது.
அதைப்போலவே அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் தேசிய அரசியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மாநில அரசியலுக்குத் திரும்பி, தமிழகத்திலுள்ள சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதாக அறிவித்தபோதும், அதை திமுக தலைமை விரும்பாததால் அந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கியதாகவும் செய்திகள் பரவின.
தமிழக அரசியலில் தனக்கு எதிராக சிலர் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே, டெல்லிக்கு சிலரை வெவ்வேறு பதவிகளில் முன்னிறுத்தி அனுப்பி வைத்திருக்கிறது திமுக என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் இங்குள்ள அரசியல் உணர்வாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இதுவரை திரைப்படங்களில் பலருடைய இயக்கத்தின் கீழ் நடித்திருக்கிற விஜய்க்கு இப்போது தன்னை பிரதமர் பதவியை நோக்கி இயக்குகிற அசலான இயக்குநர்கள் யார் என்பதையும் தெரிந்துகொள்வது அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கும் தவெகவின் எதிர்காலத்திற்கும் நல்லது.
முக்கியமாக தவெகவினரும், முதல்வர் விஜய்யும் – தான் தற்போதிருக்கிற பதவியிலிருந்து தன்னை ஏன் வடதிசை நோக்கி, அதிலும் பிரதமர் பதவியை நோக்கி ஏன் சதுரங்க காயைப் போல யார் நகர்த்துகிறார்கள்? என்பதையும் உணர வேண்டும்.
தவெகவின் தொண்டர்களோ அல்லது விஜய்யின் தீவிர ரசிகர்களோ தமிழக முதல்வரான விஜய் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் விரும்பலாம், கொண்டாடவும் செய்யலாம்.
அதே சமயம் தன்னை யார் தேசிய அரசியலை நோக்க நகர்த்துகிறார்கள் அல்லது நகர்த்த விரும்புகிறார்கள், இதற்கு பின்னிருக்கிற ஒன்றிய அல்லது மாநில அரசியலின் பங்கு என்ன? என்பதை விஜய் நன்கு உணர்ந்து, இதற்கு முன்பு மிகச்சுருக்கமாகத் தன்னை உயரத்தைப் பற்றி குறிப்பிட்டதுபோல, தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தாத வரையில், இதுகுறித்த வீண் சர்ச்சைகள் தேசிய மற்றும் தமிழகத்து ஊடகங்களில் விவாதப்பொருளாகிக் கொண்டுதான் இருக்கும்.
– ச. காதர் மொய்தீன்