இப்போது இருக்கும் காலகட்டத்தில் மனிதர்களுக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், வெளியே சிரித்துக் கொண்டிருப்பது போல காட்டிக்கொள்வது சாதாரணமாகிவிட்டது.
மனதிற்குள் என்ன இருந்தாலும், வெளித்தோற்றம்தானே முக்கியம் என்ற நிலையும் உருவாகிவிட்டது. இதேபோல், எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போலத் தோன்றும் விலங்குதான் குவாக்கா (Quokka).
ஆனால், இந்தச் சின்ன விலங்கின் முகத்தில் தெரியும் அந்த சிரிப்பு உண்மையில் அது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்கான அடையாளம் கிடையாது.
அதன் முக அமைப்பு மற்றும் வாயின் வடிவம் காரணமாக மனிதர்களுக்கு அது சிரிப்பது போலத் தெரிகிறது.
அதனால்தான் குவாக்காவை “உலகின் மகிழ்ச்சியான விலங்கு” என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
குவாக்காவின் அறிவியல் பெயர் செட்டோனிக்ஸ் பிராக்கியூரஸ் (Setonix brachyurus).
இது கங்காரு மற்றும் வாலபி (Wallaby) போன்ற விலங்குகள் அடங்கிய மேக்ரோபோடிடே (Macropodidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வாலபி.
தோராயமாக 40 முதல் 54 சென்டிமீட்டர் நீளமும், 25 முதல் 31 சென்டிமீட்டர் நீளமுள்ள குறுகிய வாலும் கொண்டிருக்கும். பார்ப்பதற்கு ஒரு சிறிய கங்காருவைப் போல இருக்கும்.
குவாக்காக்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் (Western Australia) தென்மேற்குப் பகுதிகளில் மட்டுமே இயற்கையாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக ராட்னெஸ்ட் தீவு (Rottnest Island), பால்ட் தீவு (Bald Island) மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் (mainland) அவை வாழ்கின்றன.
ராட்னெஸ்ட் தீவில்தான் அவற்றின் மிகப்பெரிய கூட்டம் காணப்படுகிறது.
இந்த ராட்னெஸ்ட் தீவுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது.
அங்கு வாழ்ந்த பாரம்பரிய உரிமையாளர்களான வாட்ஜுக் நூங்கார் (Whadjuk Noongar) மக்களுக்கு இந்தத் தீவு வாட்ஜெமப் (Wadjemup) என்று அறியப்பட்டது.
குவாக்காவை நூங்கார் மொழியில் க்வோகா (Kwoka) என்று அழைக்கிறார்கள்.
இன்று நாம் பயன்படுத்தும் ராட்னெஸ்ட் என்ற பெயர் குவாக்காவுடனான ஒரு தவறிலிருந்து உருவானது.
1696-ல் டச்சு ஆய்வாளர் வில்லெம் டி வ்லாமிங் (Willem de Vlamingh) இந்தப் பகுதியில் குவாக்காக்களைப் பார்த்தார். ஆனால், அவை என்ன விலங்குகள் என்று அவருக்குத் தெரியவில்லை.
அவை ஒரு சாதாரண பூனையின் அளவுக்கு இருக்கும் பெரிய எலிகளைப் போலத் தெரிந்ததால், அவற்றை அப்படியே விவரித்தார்.
அதன் காரணமாக அந்தத் தீவுக்கு “எலிகளின் கூடு” என்ற பொருளில் ராட்டனெஸ்ட் (Rottenest) என்ற பெயரை வைத்தார். அந்தப் பெயர் காலப்போக்கில் ராட்னெஸ்ட் தீவு (Rottnest Island) என்று மாறியது.
குவாக்காக்களின் தோற்றம் அவற்றை இன்னும் தனித்துவமாக்குகிறது.
தடிமனான சாம்பல் கலந்த பழுப்பு நிற ரோமங்கள், வட்டமான காதுகள், அகலமான சிறிய முகம், கருப்பு மூக்கு மற்றும் குறுகிய வால் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
வலுவான பின்னங்கால்களால் தாவி நகரும் இவை, தேவைப்பட்டால் சிறிய மரங்களிலும் ஏறக்கூடியவை.
பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் குவாக்காக்கள் சுறுசுறுப்பாக இருக்கும். பகலில் அடர்ந்த தாவரங்கள் மற்றும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்கும்.
இரவு நேரத்தில் வெளியே வந்து இலைகள், புற்கள் மற்றும் பல்வேறு தாவரங்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன. புதிதாக வளர்ந்த இளம் தாவரங்களையும் அவை விரும்பி சாப்பிடுகின்றன.
உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களிலும் உயிர்வாழ அவற்றுக்கு சில சிறப்பான தகவமைப்புகள் இருக்கின்றன.
அவற்றின் வாலில் சேமித்து வைக்கப்படும் கொழுப்பு, உணவு குறைவாகக் கிடைக்கும் நேரங்களில் ஆற்றலுக்கான சேமிப்பாகப் பயன்படுகிறது.
பெண் குவாக்காக்கள் ஒரு குட்டியை மட்டுமே பெற்றெடுக்கின்றன. பிறந்த குட்டி தாயின் பைக்குள் சென்று அங்கே சுமார் ஆறு மாதங்கள் வளர்கிறது.
பை-யை விட்டு வெளியே வந்த பிறகும் சில காலம் தாயிடம் பால் குடித்துக்கொண்டே இருக்கும். சராசரியாக சுமார் பத்து ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.
ஒரு காலத்தில் குவாக்காக்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டன. தற்போது அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதற்கு வாழிட அழிவு, விவசாயத்திற்காக நிலம் மாற்றப்படுதல், குடியிருப்புகள் அதிகரித்தல், காட்டுத்தீ ஏற்படும் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகள் போன்றவை காரணங்களாக உள்ளன.
அதைவிட முக்கியமாக, ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்திய சிவப்பு நரிகள் (Red Foxes) குவாக்காக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
ராட்னெஸ்ட் தீவில் சிவப்பு நரிகள் இல்லாததால், அங்குள்ள குவாக்காக்கள் mainland குவாக்காக்களை விட பாதுகாப்பான சூழலில் வாழ்கின்றன.
அதனால்தான் அந்தத் தீவு இன்று உலகின் மிகப்பெரிய குவாக்கா கூட்டத்தொகைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது.
சிரிப்பைப் போன்ற முகபாவனையும், மனிதர்களிடம் சில நேரங்களில் காட்டும் ஆர்வமும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் “குவாக்கா செல்ஃபி” (Quokka Selfie) என்ற பிரபலமான புகைப்படப் போக்கை உருவாக்கின.
ஆனால் புகைப்படத்துக்காக அருகில் செல்வது என்பது அவற்றைத் தொடலாம் அல்லது உணவு கொடுக்கலாம் என்று அர்த்தமல்ல. குவாக்காக்கள் பழகிப்போன செல்லப்பிராணிகள் கிடையாது; அவை காட்டில் வாழும் விலங்குகள்.
அதனால் ராட்னெஸ்ட் தீவுக்கு வரும் மக்கள் அவற்றைத் தொடக்கூடாது, உணவு அல்லது தண்ணீர் கொடுக்கக்கூடாது, தொந்தரவு செய்யக்கூடாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவை தாமாகவே இயற்கையாகச் செல்லும் வழியில் இருந்து அவற்றைக் கவனிப்பதே சரியான முறையாகும்.
இத்தனை பாதுகாப்பு கிடைத்தாலும் குவாக்கா முழுமையாக பாதுகாப்பான நிலையில் இருப்பதாகச் சொல்ல முடியாது. அவை இன்னும் “Vulnerable” என்ற பாதுகாப்பு நிலை வகையில் உள்ளன.
குறிப்பாக mainland பகுதிகளில் வாழும் குவாக்காக்களுக்கு வாழிட இழப்பு மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட வேட்டையாடும் விலங்குகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன.
அதனால் உலகின் மகிழ்ச்சியான விலங்கு என்று அழைக்கப்படும் இந்தச் சின்ன குவாக்காவின் கதை, அதன் முகத்தில் தெரியும் சிரிப்போடு முடிந்துவிடுவதில்லை.
— சங்கீதா