தமிழகத்தின் பேரறிவுக் களஞ்சியமாய் கருதப்படுகின்ற சங்க இலக்கியங்களின் பதிப்பு என்பது நூறாண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் போல, சமகாலத்தில் கண்டறியப்பட்ட கீழடி ஆய்வுகளைப் போல,
இரும்பின் தொன்மை ஆய்வுகளைப் போல, தமிழ் இனத்திற்கு ஏன் தென்னிந்தியாவிற்கு இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவிற்குப் பெருமை தரக்கூடியதாக சங்க இலக்கியங்களின் மறு பதிப்பு அமைந்தன என்றால் மிகை இல்லை.
சங்க இலக்கியங்களை மீண்டும் மீண்டும் அதைத் தமிழர்களுக்கான பெருமைகளாக விவரிப்பதை விடவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழிகள் எத்தனை?
தமிழ் இந்தியா முழுவதும் பேசப்பட்டது என்ற கருத்துக்கள் பின்புலத்தில் சங்க இலக்கியங்கள் இந்தியர் அனைவரும் பற்றிக் கொள்ளத்தக்க உயர்ந்த சிந்தனைகள் என்ற அடிப்படையில் பார்க்க வேண்டியதும் தமிழரின் கடமையாகும்.
ஆய்வு செய்து தமிழ் உலகின் மேன்மைகளை இந்தியப் பரப்பில் வைக்க வேண்டியதும் அறிஞர்களின் நோக்காக அமைதல் வேண்டும்.
இன்னொரு புறத்தில் இந்தியாவின் ஒரு சிறு மாநிலமாக வடமொழியின் ஒரு பிரிவாக இன்னும் பல வகையில் ஆரிய மரபின் ஒரு பிரிவாகவே தமிழ் மரபையும் தமிழ் மொழியையும் தமிழ்நாட்டின் வரலாற்றையும் சுருக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில்,
திராவிட மொழியியல் ஆய்வுகளும் பின்னர் சங்க இலக்கியப் பதிப்புகளும் தமிழ்ச் சமூகத்தின் இந்திய வரலாற்று பெரும் பரப்பிலிருந்து ஒரு வேறுபட்ட, புதுமையான வளர்ச்சி மிக்க பண்பாட்டின் தாயகமாக தென்னிந்தியா, குறிப்பாக, தமிழகம் விளங்கியதை திராவிட மொழி ஆய்வுகளும் இலக்கண ஆய்வுகளும் சங்க இலக்கியம் மறு பதிப்புகளும் உலகிற்கு எடுத்து முழங்கின.
இதில், ஐரோப்பியர்களின் பெரும் பங்களிப்பு வியத்தகு வண்ணம் அமைந்தன.
பின்னர் சுதேசிய அறிஞர்கள் அவர்களுடன் இணைந்து மென்மேலும் ஆய்வுகளைச் செய்தனர்.
இத்தகு நீண்ட அறிவு மரபுக்கு பின்னர் குறிப்பாக சங்க இலக்கிய பதிப்புகளுக்கு பின்னர் பல்துறை களங்களில் ஆய்வுகள் விரிந்தன.
வரலாற்றுக் களங்களில் பல்வேறு புதிய வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. அதில் தமிழரின் தொன்மை, தென்னிந்தியாவின் மாண்பு வெளிப்பட்டன.
வி.என். கனகசபை பிள்ளை, மனோன்மணியம் சுந்தரனார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.சதாசிவ பண்டாரத்தார், சத்யநாதர் ஐயர், ஹீராஸ் பாதிரியார் என மாபெரும் பணிகளை பல அறிஞர்களும் செய்தனர்.
தமிழ்ச் சமுதாயத்தின் பன்முக தன்மைகளை விளக்கி தமிழுக்கும் பௌத்தத்திற்குமான ஆழமான விரிவுகளை அயோத்திதாச பண்டிதர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களிலேயே தமிழ்ச் சமூகத்தில் விரித்து வைத்தார்.
இதே வகையில் ஜைனத்தின் பங்களிப்புகளையும் தமிழில் ஜைனம் எந்த அளவுக்கு ஆழப் பதிந்துள்ளது என்பதையும் சக்கரவர்த்தி நைனார் உள்ளிட்ட பல்வேறு ஜைன அறிஞர்கள் எடுத்துரைத்தனர்.
தமிழில் புதைந்துள்ள சைவ, வைணவ மற்றும் வைதீக மரபுகளைப் பற்றி எல்லாம் நீண்ட நெடுங்காலமாகவே ஏராளமான அறிஞர்கள் எழுதி வந்தனர்.
அதைத் தொடர்ந்தும் பல அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டிலும் முன்மொழிந்தனர்.
உரையாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் இன்னும் பல்வேறு சைவ சித்தாந்த சமாஜங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் வைணவ அமைப்புகளும் தோன்றி பல கலங்களில் தமிழின் மாண்பினை விரித்துரைத்தனர்.
பழந்தமிழ் சமூகத்தின் பல்வேறு நுண்ணிய கலை ஆய்வுகளை சாத்தான்குளம் ராகவன் தொடங்கி, மயிலை சீனி. வேங்கடசாமி வரையில் பல்வேறு அறிஞர்கள் நுட்பமாக விளக்கி எழுதினர்.
மயிலை சீனி வேங்கடசாமி இன்னும் விளக்கமாக தமிழின் பல் சமயப் பங்களிப்பினை விரித்து எழுதினார்.
சங்க இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அது உலக செவ்வியல் மரபில் நிற்கக்கூடிய தகுதி வாய்ந்தது என்பதை தமிழக அறிஞர்களும் இலங்கை அறிஞர்களும் இன்னும் பல நாட்டு அறிஞர்களும் விரிவாக எடுத்துரைக்க முயன்றனர்.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சேவியர் தனிநாயகம் தொடங்கி க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இன்று பிற்பகல் அறிஞர்களும் மிக விரிவாக இப்பணியில் தம்மை இணைத்தனர்.
மேற்கண்டவாறு பல்வேறு அறிஞர்களும் பல துறைகளில் சங்க இலக்கியங்களின் பின்புலத்தில் நின்று தமிழ் பண்பாட்டின் விரிவை வளர்த்தெடுத்தபோது,
சங்க இலக்கியங்களின் மற்றும் ஐம்பெரும், ஐஞ்சிறு காப்பியங்களின் அடிப்படையில் தமிழகத்தின் இசை மரபை முன்னெடுத்ததில் கருணாமிர்த சாகரத்தைப் படைத்து மகத்தான வரலாற்றுப் பங்களிப்பை இசையின் மூலமாக ஆபிரகாம் பண்டிதர் செய்தார்.
இந்திய தத்துவ பின்புலத்திலிருந்து தமிழ் சிந்தனை மரபுகளை பார்ப்பதை விடவும் தமிழ் பின்புலத்தில் நின்று தத்துவ ஆய்வுகளையும் பல அறிஞர்கள் செய்தனர்.
இந்திய மரபோடு இணைந்து நிற்கும் சமய தத்துவ மரபுகளையும் தனித்துவமாக விளங்கும் சித்தர் மரபுகளையும் சமயமற்று விளங்கும் சங்க இலக்கிய தத்துவ மரபுகளையும் அறிஞர்கள் விளக்கமாக பல நூல்கள் வழியே தந்துள்ளனர்.
தமிழின் சித்த மருத்துவ மற்றும் இந்திய ஆயுர்வேத மருத்துவ ஆங்கில மருத்துவம் சாராத பல்வேறு நாட்டுப்புறப் பின்புறங்களை விளக்கிக் காட்டிய பல்வேறு வைத்திய அறிவு மரபு தமிழகத்தில் உண்டு.
ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள் இக்களத்தில் பல முன்னோடிப் பணிகளை வரைந்துள்ளனர்.
இவ்வாறு தமிழ் சமூகம் பல துறைகளில் விரிவு பெற்று நிற்பதற்கு பேரறிஞர்களாக ஒவ்வொரு துறைகளிலும் வளர்ந்து நிற்பவர்கள் தமது அறிவை பழந்தமிழ் மாண்புனோடு இணைத்து காண வேண்டும் என்பதற்கு
முன்னுதாரணமாக இசைத்துறையில் வல்லமை பெற்றவராகவும் மருத்துவத் துறையிலும் வளர்ச்சி பெற்றவராகவும் விளங்கிய பிறகு ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது கருணாமிர்த சாகரம் மூலம் முன்னோடியான பணிகளைச் செய்தார்.
உலக இசையை எல்லாம் நன்கு ஆராய்ந்து பல்வேறு இசைப்படைப்புகளை உருவாக்கி வருகின்ற இசைஞானி இளையராஜா இன்னும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள்,
திரைத்துறை சாராமல் வளர்ச்சி பெற்றுள்ள இசை ஆளுமைகள் அனைவரும் ஆப்ரகாம் பண்டிதர் போன்ற முன்னோடிகளின் பணிகளை ஆய்வுகளை மென்மேலும் விரித்துரைத்திட முன்வர வேண்டும்.
தமிழ்க் கலை உலகம், இந்திய இசை உலகம் ஆபிரகாம் பண்டிதருக்கு இன்னும் பேரளவில் நினைவுகளை, விருதுகளை அவரது பெயரால் உருவாக்கி இளைய தலைமுறை ஆபிரகாம் பண்டிதரின் பெயரை நினைவில் கொள்ளும் வகையில் உருவாக்கிட வேண்டும்.