சிவாஜிக்கு ஜாதகம் கணித்துச்சொன்ன வெ.ஆ.மூர்த்தி!

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலத் திரை அனுபவம் கொண்டவரான வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய திரையுலக அனுபவங்களைப் பத்திரிகையாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து சில பகுதிகள்.

எனக்கும் சோ போன்று திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த திரைக்கலைஞர்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அதில், நான் கலந்து கொண்டு பேசியபோது, இப்படிச் சொன்னேன். 

“உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றும் வாழ்வில் நமக்கு முக்கியமான விஷயங்கள்.

இவற்றில் உடையான ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நான் அறிமுகமானேன். கோவை சரளாவுடன் இணைந்து நான் நடித்த கடைசி திரைப்படத்தின் பெயர் ‘இட்லி’.

ஆக, உடை, உணவு இரண்டு டைட்டிலிலும் நடித்து அதோடு நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருக்கிறேன். 

அதன்பிறகும் சிலர் நடிக்கச் சொன்னாலும், நான் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.

இதுவே நடிப்பதிலிருந்து நான் ஒதுங்கிக் கொண்டபிறகு நான் அளிக்கும் முதல் பேட்டியும் இதுதான், கடைசி பேட்டியும் இதுதான்.

*********

தன்னுடன் நடித்த பல நகைச்சுவைக் கலைஞர்களைப் பற்றி சுவாரஸ்யமாக பல அனுபவங்களை பகிர்ந்துகொண்ட வெண்ணிற ஆடை மூர்த்தி, நாகேஷைப் பற்றி சொல்லும்போது,

“எங்கள் இருவருக்குமிடையில், நெருங்கிய நட்பு இருந்தது. இருந்தாலும், சேர்ந்து நடிக்கும்போது, எங்களுக்குள் டயலாக் பேசுவதில், ஒரு போட்டி இருந்திருக்கிறது” என்று ஒரு சம்பவத்தை விவரித்தவர், மனோரமாவைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார்.

“நடிக்கும்போது, தனக்கு திருப்தியாகும் வரையில் திரும்பத் திரும்ப ரீ-டேக் எடுக்கச் சொல்வார் மனோரமா. அந்த அளவுக்கு தான் செய்யும் தொழில் அவருக்கு ஈடுபாடு இருந்தது” என்றவர் தேங்காய் ஸ்ரீனிவாசனைப் பற்றி நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டார். 

*********

நடிகர் திலகம் சிவாஜி அவர்களை ஒருமுறை நான் சந்தித்தபோது, “என்ன ஜாதகம் எல்லாம் பாக்குறியாமே, என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்றியா?” என்றவர், தன்னுடைய மகனான ராம்குமாரிடம் ஜாதகத்தை எடுத்து வந்துக் கொடுக்கச் சொன்னார்.

அதைப் பார்த்த நான், “விரைவில் உங்களுக்கு அரசுத் தரப்பிலான அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்க இருக்கிறது” என்று சொன்னேன்.

சொன்னபடியே அடுத்த ஒரு மாதத்திற்குள் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்துவிட்டது.

பலர் அவரை வாழ்த்திவிட்டுச் சென்றிருந்தார்கள்.

என்னை தற்செயலாக இடையில் பார்த்தவர், என்னிடம், “என்னப்பா, நீ எனக்கு வாழ்த்துச் சொல்ல வரலையே?” என்று கேட்டபோது,

“நான்தான் ஏற்கனவே உங்களுக்கு அரசுப் பொறுப்புக் கிடைக்கப்போகிறது என்று சொல்லியிருந்தேனே சார். அதற்கு நீங்கள்தான் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்க வேண்டும்” என்று சொன்னபோது சிவாஜி சிரித்தார்” என்று தன்னுடைய திரைத்துறை சார்ந்த அனுபவங்களை நெகிழ்ந்து கூறினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

Comments (0)
Add Comment